திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தை 3ம் இன்னசென்ட் – நிறைவு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
திருத்தந்தை மூன்றாம் இன்னசென்ட் அவர்கள், 1198ம் ஆண்டு, தன் 37வது வயதில் திருஅவையின் இவ்வுலகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 18 ஆண்டுகள் மிகத் துணிச்சலுடன் வழி நடத்தியவர். அவர் வாழ்வின் முதல் இரண்டு பகுதிகளை, கடந்த வாரங்களில் கண்ட நாம், தற்போது அவர் வாழ்க்கை வரலாற்றின் இறுதிப் பகுதியை நோக்குவோம்.
பேரரசர் 6ம் ஹென்றி இறந்து அவரின் 4வயது மகன் இரண்டாம் பிரடெரிக், சிசிலி தீவின் மன்னரானபோது, நார்மானியர்கள் அவரை எதிர்த்ததால், அம்மன்னருக்கு பாதுகாவலராகத் (மன்னரின் தாய் கேட்டுக்கொண்டதால்) தன்னை அறிவித்துக்கொண்டு அமைதிக்கு வழிவகுத்தார் இத்திருத்தந்தை. பின்னர், இளவயது மன்னர் இரண்டாம் பிரடெரிக்கை, பிரான்ஸ், மற்றும் ஜெர்மன் இளவரசர்களின் ஆதரவோடு பேரரசராக முடிசூட்டியவரும் திருத்தந்தை மூன்றாம் இன்னசென்ட்தான்.
ஐரோப்பாவின் அனைத்து நாடுகளிலும், அரசியல் குழப்பங்களுக்குத் தீர்வுகாண உதவி, திருஅவையின் அதிகாரத்தை நிலைநாட்டியவர் இத்திருத்தந்தை. மக்களை கொடுமைப்படுத்திய மூர் இனத்திற்கு எதிராக, சிலுவைப்போரைத் துவக்கி வெற்றிகண்டார். அநியாய அரசர் Sverri என்பவரிடமிருந்து Norway மக்களைக் காப்பாற்றினார். Hungary அரசாட்சிக்கென Emeric, மற்றும் Andrew என்ற இரு சகோதரர்களிடையே சண்டை வந்தபோது, அங்கு தலையிட்டு அமைதியை உருவாக்கினார். Bulgary மன்னருக்கு முடிசூட்ட ஏற்பாடு செய்தார். சுவீடனில் மன்னராட்சி சண்டையில் தலையிட்டு அமைதியைக் கொணர்ந்தார். இத்திருத்தந்தை குறித்து முக்கியமான ஒன்றைக் கூறவேண்டுமானால், இவர் 4ம் சிலுவைப்போருக்கு முழு ஆதரவை வழங்கினார். வெனிஸ் பகுதியின் படைகள் புனித பூமியை நோக்கிச்சென்று போரிட்டு அப்பகுதியை மீட்க ஆதரவளித்தார். ஆனால், இதே படை Zara மன்னராட்சியை எதிர்த்து சுயநலக்காரணங்களுக்காகப் போரிட்டபோதும், கிரேக்க திருச்சபையை இலத்தீன் திருஅவையோடு இணைக்கும் நோக்கில் Constantinopleல் போரிட்ட போதும் வன்மையாகக் கண்டித்தார். பிரிந்திருந்த கிரேக்க திருச்சபையை தன்னோடு இணைக்கத்தானே போரிட்டார்கள் என இன்னொரு திருத்தந்தையாக இருந்திருந்தால் மகிழ்ந்திருப்பார். ஆனால் இவரோ, இச்சிலுவைப்போர் வீரர்கள் தங்கள் நோக்கத்திலிருந்து தவறிவிட்டார்கள் என அதற்கு காரணமானவர்களை திருஅவையிலிருந்து விலக்கி வைப்பதாக அறிவித்தார். இவரைப் பொறுத்தவரையில் அரசியல் இலாபம் அல்ல, மாறாக, நியாயம்தான் முன்நிற்கவேண்டும்.
இத்திருத்தந்தை, எங்கெங்கு திருஅவைப் படிப்பினைகள் தாக்கப்பட்டதோ, அங்கெல்லாம் உடனே தலையிட்டு தன் பிரதிநிதிகளை அனுப்பி சரிப்படுத்தினார். இவர் காலத்தில், அதாவது 1215ம் ஆண்டு நவம்பர் 15ந்தேதிதான் நான்காவது இலாத்ரன் திருச்சங்கம் துவக்கப்பட்டது. இவர் காலத்தில்தான், கத்தோலிக்கத் திருஅவையின் இரு முக்கியத் துறவிகளான, புனிதர்கள் தொமினிக்கும் பிரான்சிஸ் அசிசியும், இவ்வுலகைப் புதுப்பிப்பதற்கான தங்கள் திட்டங்களை முன்வைத்தனர். அவர்களை ஊக்குவித்து, ஆதரவளித்து வழிகாட்டியவர் இத்திருத்தந்தையே. உரோம் நகரின் புகழ் வாய்ந்த Santo Spito in Sassia என்ற மருத்துவமனையைக் கட்டியவரும் திருத்தந்தை மூன்றாம் இன்னசென்ட்தான். வத்திக்கான் வானொலிக்கு அருகில் இன்றும் இயங்கிவரும் இம்மருத்துவமனைதான், உலகிலுள்ள நகர மருத்துவமனைகளுக்கு ஒரு முன்னோடி என்றால் மிகையாகாது.
நம் திருத்தந்தை மூன்றாம் இன்னசென்ட் அவர்கள், இலாத்ரன் திருச்சங்கத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இயேசு வாழ்ந்த புனித பூமி பகுதிகளை அந்நியர் பிடியிலிருந்து விடுவிக்க சிலுவைப்போரை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இத்தாலியில் பயணம் செய்தபோது, 1216ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி, அதாவது 18 ஆண்டுகால வழிநடத்தலுக்குப்பின் பெரூஜியா என்ற நகரில் காலமானார். அவர் உடல் Perugia பேராலயத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. ஆனால், பிற்காலத்தில், அதாவது ஏறத்தாழ 675 ஆண்டுகளுக்குப்பின் இத்திருத்தந்தை மீது பெருமதிப்பு வைத்திருந்த திருத்தந்தை 13ம் லியோ அவர்கள், பெரூஜியா பேராலயக் கல்லறையைத் தோண்டி,1891ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருத்தந்தை மூன்றாம் இன்னசென்ட் சடலத்தை உரோம் நகர் இலாத்ரன் பேராலயத்திற்கு கொணர்ந்து அடக்கம் செய்தார்.
இப்புகழ் வாய்ந்த திருத்தந்தை மூன்றாம் இன்னசென்டைத் தொடர்ந்து வந்தார் திருத்தந்தை மூன்றாம் ஹொனாரியுஸ். இவரின் வாழ்க்கை வரலாற்றை, அதாவது, திருஅவையை அவர் வழிநடத்திய விதத்தை வரும் வாரம் காண்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்