தேடுதல்

திருத்தந்தையர் தங்கியிருந்த இலாத்ரன் மாளிகை திருத்தந்தையர் தங்கியிருந்த இலாத்ரன் மாளிகை 

திருத்தந்தையர் வரலாறு - 3ம் கிளமென்டும் 3ம் செலஸ்தீனும்

திருத்தந்தை மூன்றாம் கிளமென்ட் பொறுப்பேற்றதும், புனித பூமியில் இயேசுவின் கல்லறையை கைப்பற்றுவதற்கான மூன்றாம் சிலுவைப்போருக்கு ஏற்பாடு செய்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

1187ம் ஆண்டு 1 மாதம் 27 நாட்களே பதவியில் இருந்து உலக அதிசயங்களுள் ஒன்றான சாய்வு கோபரம் இருக்கும் Pisa நகரில் காலமான திருத்தந்தை எட்டாம் கிறகரியின் வாழ்க்கை வரலாற்றைக் கண்டோம். 1159ம் ஆண்டு பதவிக்கு வந்த திருத்தந்தை மூன்றாம் அலெக்ஸாண்டர் 22 ஆண்டுகள் திருஅவையை வழிநடத்திச் சென்றதைத் தொடர்ந்து, அதற்குப்பின் வந்த மூன்று திருத்தந்தையர்களும் சிறிது காலங்களே பொறுப்பில் இருந்தனர். திருத்தந்தையர்கள் 3ம் லூசியுஸ் நான்கு ஆண்டுகள், மூன்றாம் உர்பான் ஓராண்டு 11மாதங்கள், எட்டாம் கிறகரி 1மாதம் 27நாட்கள் என குறுகிய காலமே தலைமைப் பதவியில் இருந்தனர். இவர்களுக்குப்பின் வந்த, திருத்தந்தை மூன்றாம் கிளமென்ட் கூட மூன்றாண்டு 4 மாதங்களே பொறுப்பில் இருந்துள்ளார். 

   1187ம் ஆண்டு டிசம்பர் 17ல் திருத்தந்தை எட்டாம் கிறகரி இறந்ததைத் தொடர்ந்து, இரண்டே நாட்களில், அதாவது டிசம்பர் 19ந்தேதி அடுத்த திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் கர்தினால் Paolo Scolari. உரோம் நகரில் பிறந்து, அதன் அருகேயுள்ள பலஸ்திரினா (Palestrina) நகரின் ஆயராக இருந்த இவர், மூன்றாம் கிளமென்ட் என்ற பெயரையும் எடுத்துக்கொண்டார். கடந்த பல ஆண்டுகளாக திருத்தந்தையர்கள் உரோமைக்கு வெளியே வாழ்ந்து வந்த நிலையில், தற்போது உரோமைக்குடிமகன் ஒருவரே திருத்தந்தையாக, அதுவும் Bresciaவின் Arnoldன் புரட்சிக்குப்பின், முதன் முறையாக உரோமையக் குடிமகன் ஒருவர் திருஅவை தலைமைப்பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது உரோம் மக்களுக்கு ஏற்புடையதாக, அவர்களின் வரவேற்புப்  பெறுவதாக இருந்தது. உரோமை நகராட்சிக்கும் திருத்தந்தைக்கும் இடையே உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்தப்பட்டு அமைதி நிலவியது. இவர் இலாத்ரன் பாப்பிறை மாளிகையில் அமர்ந்ததும் செய்த முதல் வேலை, மன்னர்களிடையே சமாதானத்தை உருவாக்கி, புனித பூமியில்  இயேசு அடக்கம் செய்யப்பட்ட கல்லறையை கைப்பற்றுவதற்கான மூன்றாம் சிலுவைப்போருக்கு ஏற்பாடு செய்ததாகும்.

ஆனால், இவர் நினைத்தது போல் எல்லாம் நடக்கவில்லை. இயேசுவின் கல்லறையை மீட்பதற்காக நிலம் வழியாக படை நடத்திச் சென்ற பேரரசர் முதலாம் பிரெடரிக் பார்பரோசா, அர்மேனியாவிலிருந்து அந்தியோக்கியா செல்லும் வழியில் Saleph ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். தலைவன் இல்லா இவரின் படைகள் துருக்கியர்களால் தாக்கப்பட்டு சின்னாபின்னமாயின. பேரரசரின் உடலையாவது யெருசலேமில் கொண்டுபோய் புதைக்கலாம் என்ற பேரரசரின் மகன் 6ம் பிரடெரிக்கின் விருப்பம் கூட நிறைவேறவில்லை. இதற்கிடையே, கப்பல் வழியாக, மூன்றாம் சிலுவைப்போரில் பங்கேற்க பாலஸ்தீனத்திற்கு படைகளுடன் வந்த பிரான்ஸ் மன்னர் இரண்டாம் பிலிப், மற்றும் இங்கிலாந்து மன்னர் முதலாம் ரிச்சர்டின் கீழ் ஜெர்மானிய படைகள் பணியாற்ற வேண்டிய கட்டாயம் இடம் பெற்றது. இதனாலும் இந்த சிலுவைப்பேர் வெற்றியடைய முடியவில்லை. 

  இதற்கிடையே, பேரரசருக்குப்பின், தானே பேரரசர் என பிரகடனப்படுத்தி பதவிக்கு வந்தார் அவரின் மகன் நான்காம் ஹென்றி. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பேரரசர்களின் கீழ் இத்தாலி தொடர்ந்து இருந்து வருவதை பெரும்பான்மை இத்தாலியர்கள் விரும்பாத நிலையில், பேரரசராக நான்காம் ஹென்றியை அங்கீகரிக்க மறுத்தார் திருத்தந்தை மூன்றாம் கிளமென்ட். அதே வேளை, Lecce பகுதியின் Tancred என்பவரை சிசிலி மக்கள் மன்னராக அறிவிக்க, திருத்தந்தையும் அதை ஏற்றுக் கொண்டார். இதனால் கோபமுற்ற மன்னர் நான்காம் ஹென்றி, பெரும் படையுடன் இத்தாலி நோக்கிப் பயணமானார். இத்தகைய ஒரு பின்னணியில் திருத்தந்தை மூன்றாம் கிளமென்ட் 1191ம் ஆண்டு மார்ச் மாதம் 27ந்தேதி காலமானார். 

   அடுத்து பொறுப்புக்கு வந்தார் திருத்தந்தை மூன்றாம் செலஸ்டின். 1191ம் ஆண்டு மார்ச் மாதம் 30ந்தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 85 வயது நிரம்பியவராகவும், 47 ஆண்டுகள் கர்தினாலாக திருஅவையில் பணியாற்றியவராகவும் இருந்தார். ஆனால், இவர் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்படாத திருத்தொண்டர் ஆவார். ஆகவே ஏப்ரல் மாதம் 13ந்தேதி அருள்பணியாளராகவும், அதற்கு அடுத்த நாள் ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். அதற்கு அடுத்த நாள் மன்னர் நான்காம் ஹென்றியை பேரரசராகவும், அவர் மனைவி கோன்ஸ்தாந்தை(Constant) பேரரசியாகவும் முடிசூட்டினார். தான் பேரரசர் என்றாகிவிட்ட நிலையில், தென் இத்தாலியைக் கைப்பற்றும் நோக்கத்தில், மக்களால் மன்னராக அறிவிக்கப்பட்ட Tancredயை நோக்கி படைகளை நடத்திச் சென்றார் நான்காம் ஹென்றி. மிகவும் கொடூரமான வழிமுறைகளைக் கடைபிடிப்பவராக பேரரசர் நான்காம் ஹென்றி இருந்தார் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இந்த பேரரசரின் படைகள் Tancredன் படைகளால் தோற்கடிக்கப்பட்டன. தோல்வியைத் தழுவிய பேரரசர் நான்காம் ஹென்றி தென் இத்தாலியிலிருந்து பின்வாங்க வேண்டியிருந்தது. அது மட்டுமல்ல, பேரரசி கோன்ஸ்தாந்தையும் சிறைப்பிடித்து வைத்துக் கொண்டார் Tancred. ஆனால், திருத்தந்தை மூன்றாம் செலஸ்டின் விண்ணப்பித்ததைத் தொடர்ந்து, பேரரசியை விடுவித்தார்.

பேரரசர் ஹென்றி ஜெர்மனியில் திருஅவைக்கு எதிராக பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். எந்த முந்தைய பேரரசரையும் மிஞ்சும் வகையில் இவரின் கொடூரச் செயல்பாடுகள் இருந்தன. அத்தகைய ஒரு மன்னரை திருஅவையிலிருந்து வெளியேற்றாமல், குறைந்த பட்சம் வெளியேற்றுவேன் என மிரட்டாமல் திருத்தந்தை ஏன் பொறுமை காத்தார் எனத் தெரியவில்லை.  இத்தகைய ஒரு சூழலில் 1194ம் ஆண்டு தென் இத்தாலியின் Tancred  உயிரிழக்க, அப்பகுதியைக் கைப்பற்றும் நோக்கத்தில் இத்தாலிக்குள் மீண்டும் நுழைந்தார் பேரரசர் நான்காம் ஹென்றி. சிசிலியின் கண்காணிப்பாளர் திருத்தந்தையே என்ற விதியையும் மீறி அப்பகுதியைக் கைப்பற்ற நினைத்த பேரரசர், தான் சிலுவைப்போருக்கு உதவ வந்ததாக திருத்தந்தையையும் ஏமாற்றினார். பல்வேறு கொடுமைகளை ஆற்றி தென் இத்தாலியை, அதாவது சிசிலி பகுதியை தன்கீழ் கொண்டுவந்துவிட்டார்  பேரரசர் நான்காம் ஹென்றி. இந்த பேரரசர் நான்காம் ஹென்றி, தன் 36ம் வயதில் 1197ம் ஆண்டு செப்டம்பர் 28ல் காலமானார். தான் சாவதற்கு முன்னர், பச்சிளம் குழந்தையாக இருந்த தன் மகன் பிரடெரிக்கை சிசிலியின் மன்னனாக அங்கீகரிக்க வேண்டும் என பேரரசர் கட்டாயப்படுத்தியதும் முக்கியமானது. பேரரசர் இறந்த மூன்று மாதங்களில் நம் பாப்பிறை மூன்றாம் செலஸ்டினும் 1198ம்  ஆண்டு ஜனவரி மாதம் 8ந் தேதி காலமானார். 

   17 ஆண்டு இடைவெளியில் 5 திருத்தந்தையர்கள் திருஅவையை வழிநடத்தி விட்டுச் செல்ல, அடுத்து வந்த திருத்தந்தை 3ம் இன்னசென்ட் ஏறத்தாழ 18 ஆண்டுகள் பொறுப்பிலிருந்தார். இது குறித்து வரும் வாரம் காண்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 February 2022, 16:51