தேடுதல்

மத்தியதரைக் கடல் பகுதியின் எல்லையில் அமைதிபற்றிய  கூட்டம் மத்தியதரைக் கடல் பகுதியின் எல்லையில் அமைதிபற்றிய கூட்டம்  

உக்ரைன், இரஷ்யா போர், அனைவருக்கும் தோல்வி

உக்ரைன் நாட்டில், இரஷ்ய இராணுவம் மேற்கொண்டுவரும் போர், மிகுந்த கசப்புணர்வையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது - முதுபெரும்தந்தை பேராயர் பிட்ஸபால்லா

மேரி தெரேசா: வத்திக்கான்

உக்ரைன் நாட்டில், இரஷ்ய இராணுவம் மேற்கொண்டுவரும் போர், மிகுந்த கசப்புணர்வையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது என்று, எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, பேராயர் பியெர்பத்திஸ்தா பிட்ஸபால்லா அவர்கள் தெரிவித்துள்ளார்.

மத்தியதரைக் கடல் பகுதியின் எல்லையில் அமைதி என்ற தலைப்பில், இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில் பிப்ரவரி 23, இப்புதனன்று துவங்கியுள்ள ஐந்து நாள் கூட்டத்தில் கலந்துகொண்டுவரும் முதுபெரும்தந்தை பிட்ஸபால்லா அவர்கள், உக்ரைனுக்கும், இரஷ்யாவுக்கும் இடையே நடைபெற்றுவரும் போர் குறித்து ஆசியச் செய்தியிடம் கூறியபோது, இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முரண்பாடுகளை மாறுபட்ட வழியில் மேற்கொள்ளலாம் என்று நம்பும் அனைவருக்கும், இப்போர் ஒரு தோல்வியாக உள்ளது என்றுரைத்துள்ள முதுபெரும்தந்தை பிட்ஸபால்லா அவர்கள், மத்தியதரைக் கடல் மற்றும், மத்திய கிழக்குப் பகுதியில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் இரஷ்ய அரசின் இந்நடவடிக்கை, அப்பகுதியில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று, போர் குறித்த தன் கவலையைத் தெரிவித்துள்ளார்.

இரஷ்யா மற்றும், உக்ரைன் கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே நிலவும் பிரிவினைகள் குறித்த கவலையையும் வெளிப்படுத்தியுள்ள முதுபெரும்தந்தை பிட்ஸபால்லா அவர்கள், தற்போது உக்ரைனில் நடைபெற்றுவரும் போர், ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கு இடையேயுள்ள பிரிவினைகளை மேலும் விரிவாக்கக்கூடும் என்ற அச்சத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

வருகிற மார்ச் மாதம் 2ம் தேதி திருநீற்றுப் புதனன்று, உக்ரைன் மற்றும், உலக அமைதிக்காகக் கடைப்பிடிக்கப்படும் இறைவேண்டல் மற்றும், உண்ணாநோன்பு, இக்காலக்கட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் முக்கியமானது என்றும், முதுபெரும்தந்தை பிட்ஸபால்லா அவர்கள் கூறியுள்ளார்.

கர்தினால் சாக்கோ

மேலும், பிளாரன்ஸ் நகரில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளும், பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் லூயில் இரபேல் சாக்கோ அவர்களும், உக்ரைனில் இடம்பற்றுவரும் போர் குறித்த கவலையை வெளியிட்டு, துன்புறும் உக்ரைன் மக்களோடு தன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார்.

மத்தியதரைக் கடல் பகுதியின் எல்லையில் அமைதி என்ற தலைப்பில் பிளாரன்ஸ் நகரில் நடைபெறும் கூட்டம், பிப்ரவரி 27, இஞ்ஞாயிறன்று நிறைவடையும், (AsiaNews)

இரஷ்யாவில் போராட்டம்

இதற்கிடையே, உக்ரைனுக்கு எதிராக இரஷ்யா நடத்திவரும் தாக்குதலைக் கண்டித்து இரஷ்யாவின் பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான இரஷ்ய மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். இப்போராட்டங்களில் ஈடுபட்ட மக்களுள் 1,800க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 February 2022, 15:36