பொதுக் காலம் - ஐந்தாம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. எசா 6: 1-8; II. 1 கொரி 15: 1-11; III. லூக் 5: 1-11)
இன்றைய மூன்று வாசகங்களும் இறையழைத்தலை மையப்படுத்தியே பேசுகின்றன. அதிலும் மிகச் சிறப்பாக, பலவீனத்தில் வெளிப்படும் இறையழைத்தலைக் குறித்துப் பேசுகின்றன. இப்போது முதல் வாசகத்தின் இறுதி பகுதியை வாசித்து நமது சிந்தனையைத் தொடங்குவோம்.
அப்பொழுது நான்: “ஐயோ, நான் அழிந்தேன். ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்; தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே” என்றேன். அப்பொழுது சேராபீன்களுள் ஒருவர் பலி பீடத்திலிருந்து நெருப்புப் பொறி ஒன்றைக் குறட்டால் எடுத்து அதைத் தம் கையில் வைத்துக் கொண்டு என்னை நோக்கிப் பறந்து வந்தார். அதனால் என் வாயைத் தொட்டு, “இதோ, இந்நெருப்புப்பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது; உன் பாவம் மன்னிக்கப்பட்டது,” என்றார். மேலும் “யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?” என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு, “இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்” என்றேன். (எசா 6:5-8)
கடவுளின் அழைப்பு என்பது யாருக்குக் கிடைக்கும், யாரால் கிடைக்கும், எப்போது கிடைக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது. நாம் ஒன்று நினைப்போம், தெய்வம் ஒன்று நினைக்கும் என்று சொல்வார்கள். பல புனிதர்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். ‘இவனா குருவாகப்போறான்’ என்று பலரின் கேலிப்பேச்சுக்கு உள்ளான பலர், குருக்களாகி சாதனைப் படைத்துவருவதைப் பார்க்கின்றோம். இந்தப் புள்ள, எவ்வளவு பக்தியா இருக்கான் பார்த்தியா, இவன்தான் உண்மைளையிலே சாமியாராகி சரித்திரம் படைக்கப்போறான் என்று சொல்லுவார்கள் ஆனால், அப்படிப்பட்டவர்கள் எல்லாம் குடும்ப வாழ்வுக்குப் போயிருப்பதையும் நாம் கண்டிருக்கிறோம். இவனுக்குச் சரியாகப் படிப்பில்லை, இவன் நாம் எதிர்பார்த்த அளவுக்குப் பன்னிரெண்டாம் வகுப்பிலே நல்ல மதிப்பெண்கள் பெறவில்லை, இவனது நிறம் சரியில்லை, இவனது குடும்பச் சூழல் சரியில்லை, இவனிடத்திலே நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு அறிவுத்திறமை இல்லை போன்ற காரணங்களால் நம் சமுதாயத்தில் எத்தனையோ பேர் தங்கள் தேவஅழைத்தலை இழந்திருக்கிறார்கள். இதனை நாம் காதுபட சொல்லக் கேள்வியும்பட்டிருக்கின்றோம்.
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தனது பன்னிரெண்டாம் வகுப்பு படிப்பை முடித்தவுடன் ஒரு பெரிய துறவற சபையில் சேர்ந்தார். அவர் பார்ப்பதற்குச் சற்று குள்ளமாக இருப்பார், எல்லாருடனும் இயல்பாக பழகக்கூடியவர், எதையும் நேர்பட பேசக்கூடியவர், விளையாட்டில் நல்ல கெட்டிக்காரர், இத்தனைக்கும் அவர் அந்தச் சபை நடத்திவரும் பள்ளிக்கூடத்தில் படித்தவர்தான், அவருடைய முதற்கட்ட பயிற்சியில் அவர் படிப்பில் சற்று பின்தங்கி இருந்தார். அந்த ஆண்டின் இறுதியில் அவருக்குத் தேவஅழைத்தல் இல்லை என்று அவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். இதை என்னிடத்தில் வருத்தமுடன் கூறினார். அதற்கு, “கடவுளுக்கு உண்மையிலேயே நீ தேவை என்றால் நிச்சயம் உன்னை அழைப்பார்” என்று கூறினேன். அதன்பிறகு நானும் அவரை மறந்துவிட்டேன். ஏறக்குறைய 18 ஆண்டுகள் கழித்து அவரை நான் இன்னொரு மாநிலத்தில் சந்தித்தேன். மிகவும் மகிழ்ச்சியடைந்து, எப்படி இருக்கிறீர்கள், இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டேன். தற்போது குருவாக இருப்பதாகவும் அதுவும் குருமானவர்கள் படிக்கும் அந்தச் சபையின் இல்லத்திற்கு அதிபராக இருப்பதாகவும் என்னிடம் கூறினார்.
அப்படி என்றால் அழைத்தலின் அளவுகோல்தான் என்ன? கடவுளின் பார்வை வேறு மனிதரின் பார்வை வேறு. இந்த உலகம் பலவீனமானவர்கள் அல்லது பாவிகள் என்று கருத்துபவர்களை கடவுள் பலம் பொருந்தியவர்களாகத் தேர்ந்துகொள்கிறார். இதைத்தான் புனித பவுலடியாரும், “பலவீனத்தில்தான் பலம் கட்டியெழுப்படுகிறது” என்று கூறுகின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில் எசாயா, “ஐயோ, நான் அழிந்தேன். ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்; தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே” என்று அழுது புலம்பிய எசாயாவை, புனிதப்படுத்தி இறைவன் தன் பணிக்காகத் தேர்ந்துகொள்கின்றார்.
அவ்வாறே, கிறிஸ்தவ மறையை ஒன்றுமில்லாமல் செய்துவிடவேண்டும் என்ற வெறியோடு புறப்பட்ட பாவியான சவுலை, தமஸ்கு நகருக்குச் செல்லும் வழியில் தடுத்தாட்கொண்டு தன்பக்கம் ஈர்க்கிறார் இயேசு. சவுலைச் சந்திக்கச்சென்ற அனனியா என்னும் இயேசுவின் சீடரே அவரின் பாவநிலைக் குறித்து அதிருப்தி வெளியிட்டபோதும், சவுலை பவுலாக மாற்றுகிறார் இயேசு. அப்பகுதியை இப்போது வாசிப்போம்.
உம் பெயரை அறிக்கையிடும் அனைவரையும் கைது செய்வதற்காகத் தலைமைக் குருக்களிடமிருந்து அதிகாரம் பெற்று இங்கே வந்திருக்கிறான்” என்றார். அதற்கு ஆண்டவர் அவரிடம், “நீ செல். அவர் பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவியாய் இருக்கிறார். என் பெயரின்பொருட்டு அவர் எத்துணை துன்புறவேண்டும் என்பதை நான் அவருக்கு எடுத்துக்காட்டுவேன்” என்றார்.
(திப 5:14-16).
இதன் அடிப்படையில் இன்றைய இரண்டாவது வாசகத்தைப் பார்க்கும்போது, புனித பவுலடியார் தன்னைக் குறித்துச் சான்று பகர்கின்றார்.
நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப்பெறத் தகுதியற்றவன். ஏனெனில், கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். ஆனால், இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். அவர் எனக்களித்த அருள் வீணாகிவிடவில்லை. திருத்தூதர்கள் எல்லாரையும்விட நான் மிகுதியாகப் பாடுபட்டு உழைத்தேன். உண்மையில் நானாக உழைக்கவில்லை; என்னோடிருக்கும் கடவுளின் அருளே அவ்வாறு உழைக்கச் செய்தது. நானோ மற்றத் திருத்தூதர்களோ யாராயிருந்தாலும் இதையே பறைசாற்றுகிறோம். நீங்களும் இதையே நம்பினீர்கள். (1 கொரி 15:8-11)
மூன்றாவதாக, இன்றைய நற்செய்தி வாசகத்தை உற்றுநோக்கும்போது புனித பேதுரு எவ்வாறு பலவீனத்தில் அழைக்கப்படுகிறார் என்பதைக் காண்கின்றோம்.
“ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றார். அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர். சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்று சொன்னார். அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். (லூக் 5:8-10)
புனித பேதுருவுடைய வாழ்வை நாம் சற்று ஆராய்ந்து பார்ப்போம். தான் ஒரு பாவி என்று தன்னை ஏற்றுக்கொண்டவர், இயேசுவே இது உமக்கு நடக்கவே கூடாது என்று இயேசுவின் தியாகச் சாவை தடுக்க முனைந்தவர், உருமாற்ற நிகழ்வின்போது ஆண்டவரே நாம் இங்கேயே இருப்பது நன்று என்று கூறி சவாலை சந்திக்க தயங்கியவர், எல்லாரும் உம்மைவிட்டு ஓடிப்போய்விட்டாலும் நான் ஒருபோதும் ஓடிப்போக மாட்டேன் என்று உணர்ச்சிவசப்பட்டு பேசியவர், இறுதியாக இயேசுவை மறுதலித்தபோதிலும், தான் புரிந்த அந்த மாபெரும் தவற்றிற்காக மனம் வெதும்பி அழுத்தவர். ஆக, இத்தனை பலவீனங்களையும் கொண்டிருந்த பேதுருதான், இயேசுவின் அடுத்த மேய்ப்பராக இருந்து தொடக்கக்காலத் திருஅவையைப் பலம்பொருந்தியதாக மாற்றினார்.
திருஅவையின் வரலாற்றைப் பார்க்கும்போது, மகா பாவியாய் வாழ்ந்த அகுஸ்தினார் இத்திருஅவையின் மிகச்சிறந்த மறைவல்லுனரானார். இவ்வுலக மாயைகளில் மூழ்கிப்போயிருந்த புனித இஞ்ஞாசியார், தான் மனம்மாற்றம் பெற்ற பிறகு, ‘ஆன்மிகப் பயிற்சிகள்’ என்னும் அழகிய புத்தகம் வழியாகக் கோடானகோடி மக்களை ஆண்டவர் பக்கம் கொண்டு வந்தார். “நீ குருத்துவ வாழ்விற்குக் கொஞ்சமும் தகுதியில்லாதவன்” என்று புறந்தள்ளப்பட்ட ஜான் மரிய வியானியைக் கடவுள் மேன்மைவாய்ந்த குருவாக தேர்ந்துகொண்டு, குருக்கள் அனைவருக்குமே பாதுகாவலராக ஏற்படுத்தியிருக்கிறார். இந்த உலகம் இழிவானதாகக் கருதுவதை கடவுள் உயர்வானதாகத் தேர்ந்துகொள்கிறார். கட்டியோர் விலக்கிய கல்லே கட்டிடத்திற்கு மூலைக்கல்லாய் அமைந்தது என்ற இறைவார்த்தையையும் இங்கு நாம் அப்படியே பொருத்திப் பார்க்கலாம்.
கடந்த ஆண்டு செய்தித்தாளில் வந்த செய்தி ஒன்றைக் குறித்து தூதன் இதழில் தலையங்கம் எழுதியிருந்தேன். எப்படி ஒருவரின் பலவீனம் பலம் பொருந்தியதாக மாறுகிறது என்பதற்கான மிகச்சிறந்த உதாரணமாகவே இதனைக் கருதுகிறேன். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தில் வசிப்பவர்கள், தங்களுக்கு அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறந்தால் கடைசியாய் பிறக்கும் பெண்குழந்தைக்கு ‘வேண்டாம்’ என்று பெயர் வைப்பார்களாம். அப்படி பெயர் வைத்தால் அடுத்து ஆண் குழந்தை பிறக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இப்படிப்பட்டச் சூழ்நிலையில் அவ்வூரிலுள்ள அசோகன் என்பவருக்கு முதலில் இரண்டு பெண்குழந்தைகள் பிறந்தன. மூன்றாவதாக ஆண்குழந்தை பிறக்கவேண்டும் என்பதற்காக இரண்டாவதாக பிறந்த பெண்குழந்தைக்கு ‘வேண்டாம்’ என்று பெற்றோர் பெயர் வைத்தனர்.
அதேபகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பு வரைப் படித்தார் ‘வேண்டாம்’ என்ற பெயர் கொண்ட அந்தப் பெண். அதன் பிறகு, சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவித்தொகைப் பெற்று பொறியியல் படிப்புப் படித்து வந்தார். இவர் பள்ளியில் படித்தபோது, இவருடன் படித்த சக மாணவியர் இவரை ‘வேண்டாம்’ என்று கிண்டல் செய்தனர். அது கல்லூரி வரையிலும் தொடர்ந்தது. ஆனாலும், அந்தப் பெண் இதனை மிகப்பெரிய பலவீனமாகக் கருதாமல், அதனை நேர்மறையான எண்ணத்துடன் எடுத்துக்கொண்டுத் தன் படிப்பைத் தொடர்ந்து வந்தார். இவர் மூன்றாம் ஆண்டு பொறியியல் படிப்பை படித்துக்கொண்டிருந்தபோது, கல்லூரியில் நடந்த நேர்முகத் தேர்வொன்றில் ஜப்பான் நாட்டு நிறுவனம் ஒன்று இவரை வேலைக்கு தேர்வுசெய்துகொண்டது. அப்போது இவருக்கு ஆண்டு சம்பளமாக 22 இலட்ச ரூபாய் கொடுக்க முன்வந்தது. உடனே இவரைப் பற்றிய செய்தி பத்திரிகைளில் வெளிவந்து மக்கள் மத்தியில் பிரபலமானார். அப்போது, நான் இந்த உயர்ந்த சம்பளத்திற்காக மக்கள் மத்தியில் பிரபலம் ஆகவில்லை, மாறாக, ‘’வேண்டாம்’ என்று பெயர்கொண்ட என்னை ‘வேண்டும்’ என்று கூறி ஜப்பான் நாட்டு நிறுவனம் தேர்வுசெய்துகொண்டதால்தான், நான் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றேன் என்று கூறி மகிழ்ந்தார். அதாவது ‘வேண்டாம்’ என்ற பலவீனத்தில்தான் ‘வேண்டும்’ என்ற பலம், அதாவது, சாதனை என்ற பலம் பொதிந்திருந்ததாக எடுத்துக்காட்டுகிறார் இப்பெண்.
ஆண்டவர் தாவீதை திருப்பொழிவு செய்வதற்கு முன்பாக என்ன நிகழ்கிறது என்பதை சாமுவேல் முதல் நூலில் வாசிக்கின்றோம். கடவுள் இறைவாக்கினர் சாமுவேலை பெத்லகேமைச் சார்ந்த தாவீதின் தந்தையான ஈசாயிடம் அனுப்புகின்றார். அங்குச் சென்ற அவர், ஈசாயின் புதல்வர்கள் ஒவ்வொருவரையும் பார்க்கும்போதும், கடவுள் தெரிந்துகொண்டது இவராகத்தான் இருக்குமோ என்று எண்ணும் வேளையில், ஆண்டவர் சாமுவேலிடம், “அவன் தோற்றத்தையும், உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில், நான் அவனைப் புறக்கணித்துவிட்டேன். மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” என்றார். (1 சாமு 16:7)
நம்மிடம் உள்ள பலவீனமே நம்முடைய பலம் என்பதை உணர்வோம். பலவீனத்தில் இறையழைத்தல் பெற்ற மோசே, எசாயா, எரேமியா, பேதுரு, மத்தேயு, பவுலடியார், அகுஸ்தினார், இஞ்ஞாசியார், ஜான் மரியா வியானி ஆகியோரின் வரிசையில் நாமும் இணைந்து இறையழைத்தல் பெற்று இவ்வுலகில் இறையாட்சியைக் கட்டியெழுப்புவோம். அதற்கான அருளைக் கேட்டு மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்