இந்தோனேசிய கத்தோலிக்கர் மனித மாண்பின் உயர்வை வெளிப்படுத்த...
மேரி தெரேசா: வத்திக்கான்
உலகினர் கடுந்துயர்களை எதிர்கொண்டுவரும் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நன்மையான செயல்களை ஆற்றுவது, மிகுந்த அர்த்தமுள்ளதாய் இருக்கும் எனவும், இதன் வழியாக மனித மாண்பின் உயர்வை வெளிப்படுத்த முடியும் எனவும், இந்தோனேசியத் தலத்திருஅவை உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
வருகிற வாரத்தில் துவங்கவிருக்கும் தவக்காலத்திற்கென்று மேய்ப்புப்பணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஜகார்த்தா பேராயர் கர்தினால் Ignatius Suharyo Hardjoatmodjo அவர்கள், நம் கிறிஸ்தவ நம்பிக்கை, மனிதத் தனித்துவத்தோடு ஒத்திணங்கிச் செல்கிறது என்பதை புரிந்துகொள்வது அவசியம் என்று, கத்தோலிக்கரிடம் கூறியுள்ளார்.
“மனித மாண்பை உயர்வாக மதித்தல்” என்று தலைப்பிட்டு, கர்தினால் இக்னேசியஸ் அவர்கள் வெளியிட்டுள்ள நான்கு பக்க தவக்கால மேய்ப்புப்பணி அறிக்கை, ஜகார்த்தா உயர்மறைமாவட்டத்தின் 68 பங்கு ஆலயங்களிலும், பிப்ரவரி 27, வருகிற ஞாயிறன்று வாசிக்கப்படும் என்று யூக்கா செய்தி கூறுகிறது.
2022ம் ஆண்டை மனித மாண்பு ஆண்டு என, சனவரி மாதத்தில் அறிவித்துள்ள ஜகார்த்தா கர்தினால் இக்னேசியஸ் அவர்கள், தனது தவக்காலச் செய்தியையும் மனித மாண்பை மையப்படுத்தியே வெளியிட்டுள்ளார். மேலும், இவ்வாண்டு முழுவதும் ஜகார்த்தா உயர்மறைமாவட்டத்தின் கத்தோலிக்கர், கடவுளின் பராமரிப்பு மிகுந்த முகத்தை வெளிப்படுத்துவதற்கும் உந்துதலை அளித்துள்ளார், கர்தினால்.
நன்மையான செயல்களை மனம்தளராமல் ஆற்றுமாறும், கர்தினால் இக்னேசியஸ் அவர்கள், கத்தோலிக்கரை ஊக்கப்படுத்தியுள்ளார்.(UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்