அருளாளர் தேவசகாயம், இளையோருக்கு முன்மாதிரிகை
மேரி தெரேசா: வத்திக்கான்
இந்தியாவின் முதல் பொதுநிலை மறைசாட்சியான அருளாளர் தேவசகாயம் அவர்களின் புனிதர் பட்டமளிப்பு விழாவுக்கென்று, இந்தியத் தலத்திருஅவை, பல்வேறு தயாரிப்புக்களை மேற்கொண்டு வருகின்றது.
வருகிற மே மாதம் 15ம் தேதி வத்திக்கானில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவிருக்கும் அருளாளர் தேவசகாயம் அவர்கள், இந்து மதத்திலிருந்து கத்தோலிக்கத்திற்கு மதம் மாறியவர் மற்றும், அதற்காக அவர், 1752ம் ஆண்டில், மறைசாட்சியாகக் கொல்லப்பட்டவர்.
அருளாளர் தேவசகாயம் அவர்களின் புனிதர் பட்டமளிப்பு விழாவுக்கென்று மேற்கொள்ளப்பட்டுவரும் தயாரிப்புகள் குறித்து, இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவை, பிப்ரவரி 16, இப்புதனன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இக்காலத்திற்கு உடனடியாகத் தேவைப்படும் கிறிஸ்தவ வாழ்வு மற்றும், அதற்குச் சான்றுகளைத் துணிச்சலோடு எதிர்கொள்வதற்கு, அனைவருக்கும், குறிப்பாக இளையோருக்கு, மறைசாட்சி தேவசகாயம் அவர்களின் வீரத்துவ வாழ்வை எடுத்துச் சொல்வதற்கு, இது வியத்தகு வாய்ப்பு என்று, அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய மண்ணில் மறைசாட்சி மகுடத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை, தேவசகாயம் அவர்களின் மறைசாட்சியத்தில் நாம் காண்கிறோம் எனவும், இவர் புனிதராக அறிவிக்கப்படுவது, இந்தியத் திருஅவைக்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவையின் தலைவரான கோவா மற்றும், டாமன் பேராயர் பிலிப்நேரி ஃபெராவோ, அப்பேரவையின் உதவித் தலைவரான சென்னை-மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி, செயலரான டெல்லி பேராயர் அனில் கூட்டோ ஆகிய மூவரும் இவ்வறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
நீலகண்டபிள்ளை என்ற இயற்பெயரைக் கொண்ட அருளாளர் தேவசகாயம் அவர்கள், 1712ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி தென் தமிழகத்தில் நட்டாலம் என்ற ஊரில் பிறந்தவர். 1745ம் ஆண்டில் திருநீராட்டப் பெற்ற இவர், லாசருஸ் அல்லது தேவசகாயம் என்ற பெயரை ஏற்றார். ஏழு ஆண்டுகள் மட்டுமே கத்தோலிக்கராக வாழ்ந்த இவர், தனது 39வது வயதில், 1752ம் ஆண்டு சனவரி மாதம் 14ம் தேதி, ஆரவாய்மொழிக் காட்டில் சுட்டுக்கொல்லப்படார்.
இந்தியாவில் 132 இலத்தீன் வழிபாட்டுமுறை மறைமாவட்டங்கள் உள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்