தேடுதல்

நற்கனி தரும் மரங்களாக நற்கனி தரும் மரங்களாக  

ஞாயிறு சிந்தனை: நற்கனிகள் தரும் நல்மரங்களாக வளர்வோம்

வெளிவேடமகற்றி, நற்கனிகள் தரும் நல்மரங்களாய்ச் செழித்து வளர்ந்திட இன்றைய இறைவார்த்தைகள் நம்மை அழைக்கின்றன
ஞாயிறு சிந்தனை 27022022

செல்வராஜ் சூசைமாணிக்கம்  : வத்திக்கான்

(வாசகங்கள் I. சீஞா 27: 4-7   II. 1கொரி 15: 54-58; III. லூக் 6: 39-45)

பொதுக் காலத்தின் எட்டாம் ஞாயிற்றுக்கிழமைக்குள் அடியெடுத்து வைக்கின்றோம். இன்றைய வாசகங்கள் இரண்டு முக்கியமான காரியங்களை நமக்குப் பாடங்களாகச் சொல்லிக் கொடுக்கின்றன. முதலாவது, நம்மிடம் துலங்கும் வெளிவேடத்தைப் போக்கவும், இரண்டாவதாக, நற்கனிகள் தரும் நல்மரங்களாய்ச் செழித்து வளர்ந்திடவும் நம்மை அழைக்கின்றன. இறைபிரசன்னத்தை உணர்ந்தவர்களாய் இப்போது முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.     

"சலிக்கின்றபோது சல்லடையில் உமி தங்கிவிடுகின்றது; அவ்வாறே, மனிதரின் பேச்சில் மாசுபடிந்துவிடுகின்றது. குயவரின் கலன்களை, சூளை பரிசோதிக்கின்றது; மனிதரை, உரையாடல் பரிசோதிக்கின்றது. கனி, மரத்தின் கண்காணிப்பைக் காட்டுகின்றது; சொல், மனிதரின் உள்ளப் பண்பாட்டைக் காட்டுகின்றது. ஒருவர் பேசுவதற்குமுன்பே அவரைப் புகழாதே; பேச்சைக் கொண்டே அவரை அறிந்து கொள்ளலாம்." (சீஞா  27:4-7)

தற்போது உலகையே பெரிதும் அச்சுறுத்திக்கொண்டிருப்பது இரஷ்யா உக்ரைன்மீது நிகழ்த்திக்கொண்டிருக்கும் அத்துமீறல்கள்தாம். மூன்றாம் உலகப்போர் வந்துவிடுமோ! என்று உலகமே பேரச்சம் கொள்ளும் அளவிற்கு, அங்கே சூழல்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. உக்ரைனில் நிலவிவரும் ஆயுத மோதலால், அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என்றும், ஏறத்தாழ 5,10,000 சிறுவர் சிறுமிகளுக்குத் தற்போது அவசரகால மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்றும், ஏறக்குறைய 4,30,000 பேர் இப்போரின் காரணமாக உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் UNICEF நிறுவனம் அண்மையில் தெரிவித்தது.  

ஒருபுறம் இந்தப் போர் குறித்து வல்லரசு நாடுகளும், வளர்ந்த நாடுகளும் மிகவும் அனுதாபப்படுவதாக நீலிக்கண்ணீர் வடித்தாலும், மறுபுறம், தாங்கள் உற்பத்தி செய்யும் ஆயுதங்களை விற்பனை செய்து இத்தகைப் போர்களை ஊக்குவிக்கின்றன என்பது, அவர்களின் வெளிவேடத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது. மியான்மாரில், தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் அந்நாட்டு இராணுவத்தின் அடாவடித்தனங்களும் அட்டூழியச் செயல்களும், அம்மக்களை வேதனையின் விளிம்பிற்குத் தள்ளி வருவதுடன், மக்களாட்சியின் மகத்துவத்தை மண்ணில் புதைத்து வருகின்றன.  

மியான்மாரில் மனித உரிமைகள் நிலைமை குறித்த ஐ.நா.வின்  சிறப்புப் பார்வையாளர் Tom Andrews அவர்கள் "கொடுஞ்செயல்களை செயல்படுத்துதல்" என்ற தலைப்பில் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவ்வறிக்கையில், ஐ.நா.வின் பாதுகாப்பு அமைப்பில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கும் இரஷ்யா, சீனா, மற்றும் செர்பியா ஆகியவை, பொது மக்களைக் கொல்ல இராணுவ ஆட்சிக் குழு பயன்படுத்தும் ஆயுதங்களை வழங்கி வருகின்றன என்ற உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

பிலிப்பீன்ஸ் நாட்டில் தேர்தல் நெருங்கிவரும் இத்தருணத்தில், தற்போதைய அரசுத் தலைவரான ரோட்ரிகோ துத்தெர்த்தே அவர்களின் போதைப்பொருள் மீதான போரை விமர்சித்துள்ள மூன்று முக்கிய அருள்பணியாளர்கள் உட்பட தலத் திருஅவையினர் அனைவரும், செல்வம், அதிகாரம், மற்றும் புகழைப் பெறவிரும்பும் சுயநலம்கொண்ட ஊழல்வாதிகளை நிராகரிக்க வேண்டும் என்று துணிச்சலுடன் பரப்புரை செய்து வருகின்றனர். மேலும், இது அரசியலுக்கான ஒரு முடிவு மட்டுமல்ல, மாறாக, நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான ஒரு தேர்வு என்றும், இருளுக்கு மத்தியில் ஒளியைக் கொண்டு வருபவர்களுக்கும், இருளை நிலைநிறுத்த விரும்புபவர்களுக்கும் இடையேயான ஒரு தேர்வு என்றும் மக்களுக்குத் தெளிவுபடுத்தி வருவதையும் பார்க்கிறோம். நமது இந்திய தேசத்தில், பல்வேறுவிதமான பொய்களைப் பரப்பி, சூதும் வஞ்சகமும் நிறைந்த வெளிவேட மனதுடன் ஆட்சியைக் கைப்பற்றிய பி.ஜே.பி கட்சி, தனது மக்கள் விரோதச் செயல்பாடுகளால், நாட்டு மக்களையே கடும் நெருக்கடிக்கு ஆளாக்கி வருவதாகச் செய்திகளில் வாசிக்கின்றோம்.

இந்த விடயங்களையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, வெளிவேடம் கொண்ட சிலரின் மாபாதகச் செயல்களால் பெரும்பாலானோரின் வாழ்வு நிர்மூலமாக்கப்பட்டு வருவதை எண்ணி, நம்மால் வருந்தாமல் இருக்க முடியவில்லை. ஓடிவிளையாடு பாப்பா என்ற நம் பாரதியின் பாடலில், "பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம், பயங்கொள்ள லாகாது பாப்பா, மோதி மிதித்துவிடு பாப்பா - அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா" என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இதைத்தான் கவிஞர் வாலியும், “மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே” என்று தனது பாடலிலே எழுதினார்.  

இயேசுவும், தனது பணிவாழ்வு முழுவதும் வெளிவேடத்தையும் போலியான பக்தி முயற்சிகளையும் கடுமையாகச் சாடுவதைப் பார்க்கிறோம். இன்றைய நற்செய்தியில், அதனை உவமைகள் வழியாக விளக்கி மக்களை மட்டுமல்ல, தன் சீடர்களையும் புரிந்துகொள்ளச் செய்கின்றார். இப்போது, நற்செய்தி வாசகத்தைக் கேட்போம்.

“நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்து கொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், ‘உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?’ என்று எப்படிக் கேட்க முடியும்? வெளி வேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும் (லூக் 6:41-42).

‘ரொம்ப பகல் வேசம் போடாத’, ‘ரொம்ப நடிக்காத’, ‘ரொம்ப பெருசா காட்டிக்காத’, ‘யோக்கியரு வாராரு, செம்ப எடுத்து உள்ள வை’ போன்ற வார்த்தைகள், வெளிவேடம் போடுகிறவர்களுக்காக நாம் பயன்படுத்துபவை. சமயம், அரசியல், கலை, பண்பாடு, பொருளாதாரம் என எல்லாத் தளங்களிலும், இன்று வெளிவேடம் தலைவிரித்தாடுவதை நம்மால் காண முடிகிறது. அன்றாடம் நாம் மேற்கொள்ளும் உரையாடல்களின்போது, நம்மோடு உரையாடுபவர் உண்மையிலேயே நல்லவரா, நம்பகத்தன்மை நிறைந்தவரா அல்லது வெளிவேடம் கொண்டவரா என்பதையெல்லாம் நம்மால் வெகு சுலபமாக அறிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக, இல்லற வாழ்விலும் துறவற வாழ்விலும் பல்வேறு உறவு முறிவுகளுக்கும், மனக்கசப்புகளுக்கும், விவகாரத்துகளுக்கும், துறவு வாழ்வைவிட்டு வெளியேறுவதற்கும், உயிரை மாய்த்துக்கொள்ளும் தவறான முடிவுகளுக்கும், பிறரின் வெளிவேடமும் நம்பகத்தன்மையற்ற நிலையுமே மிக முக்கிய காரணங்களாக அமைகின்றன. இதன்  பிரதிபலிப்பாகத்தான்,  

  • ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்,
  • உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்.
  • பெருமை பெறும் நினதுபுகழ் பேசவேண்டும், பொய்ம்மை பேசாதிருக்க வேண்டும்.
  • பெருநெறி பிடித்தொழுக வேண்டும், மதமானபேய் பிடியா திருக்க வேண்டும்.
  • மருவு பெண்ணாசை மறக்கவேண்டும், உனை மறவா திருக்க வேண்டும்.
  • மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற வாழ்வு நான் வாழவேண்டும்.

என்று திருவருட்பாவில் வள்ளலார் பாடுகிறார்.

கனிகளின் சுவையை வைத்து மரத்தின் தன்மையை நாம் அறிந்துகொள்வதுபோல, மனிதரின் பண்புகளை வைத்தே அவர்கள் வெளிவேடம் கொண்டவர்களா, இல்லையா  என்பதை அறிந்துகொள்ளுங்கள் என்று நம்மை அறிவுறுத்துகின்றார் ஆண்டவர் இயேசு.

"கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால், முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை. நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்." (லூக் 6:43-45).

இன்றைய நம் அரசியல்வாதிகளால் அதிகம் பேசப்படுபவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள். தேர்தல் பரப்புரையின்போதும், அவருடைய நினைவுதினங்களைக் கொண்டாடும்போதும், ‘காமராஜர் ஆட்சியை மீண்டும் அமைப்போம்’ என்று சூளுரைக்கின்றனர். குறிப்பாக, நம் தமிழகத்தில் காமராஜர் பிறந்த தினத்தைக் கல்வி தினமாகக் கொண்டாடி வருகின்றோம். காரணம், தான் படிக்கவில்லை என்றாலும் மற்ற எல்லாரும் படிக்கவேண்டும் என்பதற்காகப் பட்டிதொட்டியெல்லாம் கல்விக்கூடங்களைத் திறந்து வைத்து, அனைவரும் படிக்க வழிவகை செய்தார். பள்ளிகளில், குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தையும் கொண்டுவந்தார். சுருங்கச் சொல்ல வேண்டுமாயின், காமராஜர் 'நற்கனி தந்த மரம்'. அவர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை இங்கே நாம்  நினைவு கூர்வோம்.   

காமராஜர் தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது, அவருடைய கட்சித் தொண்டர்கள் சிலர் அவரைச் சந்திப்பதற்காக வந்தனர். அவர்கள் காமராஜரிடம், “தலைவரே, நீங்கள் இந்தியாவிலேயே மிகச்சிறந்த முதல்வராகச் செயல்படுவதாக நாடு முழுவதும் பேசிக்கொள்கிறார்கள், ஆகவே, உங்களுக்கு வெண்கலச் சிலை ஒன்றை வைக்க முடிவுசெய்து, 50,000 ரூபாயை நன்கொடையாக வசூலித்துக் கொண்டு வந்திருக்கிறோம். நீங்கள் கொஞ்சம் பணம் கொடுத்தால் அதையும் சேர்த்து விரைவில் உங்கள் உருவம்கொண்ட ஆளுயரச் சிலை ஒன்றை நிறுவிவிடலாம்” என்று கூறினர். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த காமராஜர் அவர்கள், “அப்படியா.. சரி சரி.. அந்தப் பணத்தை அப்படியே வைத்துவிட்டுச் செல்லுங்கள். நான் இன்னும் 50,000 ரூபாய் போட்டு ஒரு இலட்ச ரூபாய்க்கு ஐந்து கிராமங்களில் பள்ளிக் கூடங்களைத் திறக்கிறேன்” என்று கூறினாராம்.

மனிதர்களிலே மூவகையினர் இருப்பதாக உளவியலாளர்கள் கூறுகிறார்கள். முதல் வகையினர், கீழ்த்தரமானவர்கள். இவர்கள் எப்போதும் பிறரைப் பற்றியும் இந்தச் சமுதாயத்தைப் பற்றியும் இழிவாகக் குறைகூறிக்கொண்டே இருப்பவர்கள், வெளிவேடத்தன்மைப் பூண்டவர்கள். இவர்களால் யாருக்கும் பயனில்லை. இரண்டாவது வகையினர், எப்போதும் நிகழ்வுகளைக் குறித்து மட்டும் பேசிக்கொண்டிருப்பவர்கள். அதாவது, என் குடும்பம் இவருக்கு இதைச் செய்தது, எனது முப்பாட்டனும், தாத்தாவும் இந்த ஊருக்கு இவற்றையெல்லம் செய்தார்கள் என்று பட்டியல்போட்டு வெளிவேட வாழ்க்கை நடுத்துபவர்கள். இவர்களாலும் யாருக்கும் பயனில்லை. மூன்றாவது வகையினர், வெளிவேடமகற்றி நம்பகத்தன்மை உள்ளவர்களாக, எந்நேரமும் இந்தச் சமுதாயத்தின் உயர்ந்த நலன்களுக்காக அர்ப்பண உணர்வுடன் அயராது உழைப்பவர்கள். இந்த மூன்றாவது வகை மனிதர்களால்தான் சமுதாய முன்னேற்றம் நிகழ்கிறது. காமராஜர், மூன்றாம் வகை மனிதராகத் தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக நற்கனி தரும் மரமாக வாழ்ந்தவர். ஆகவே, இயேசு குறித்துக் காட்டுவதுபோன்று, நம் நற்செயல்களைக் கொண்டே நம்மை அறிந்துகொள்ளும் நற்கனிதரும் மரங்களாக நாம் செழித்து வளர்வோம், வாழ்வோம். அதற்கான அருளை நமதாண்டவர் நமக்கு வழங்கிட மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 February 2022, 12:53