தேடுதல்

இறைவேண்டலில் சீனப் பெண் ஒருவர் இறைவேண்டலில் சீனப் பெண் ஒருவர் 

விவிலியத் தேடல்: திருப்பாடல் 27–ஒளியும், மீட்பும், பாதுகாப்பும்

திருப்பாடல் 27ஐ 'நம்பிக்கையின் திருப்பாடல்' என்றும், 'இறைவேண்டலின் திருப்பாடல்' என்றும் நாம் அழைக்கலாம்.
திருப்பாடல் - 27

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

'மாசற்ற வாழ்க்கை வாழ்வோம்' என்ற தலைப்பில் திருப்பாடல் 26ஐ குறித்த நமது சிந்தனைகளைக் கடந்த வாரம் நிறைவு செய்தோம். இவ்வார நமது விவிலியத்  தேடலில் திருப்பாடல் 27ஐ குறித்து நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். இத்திருப்பாடல் மொத்தம் 14 இறைவசனங்களைக் கொண்டுள்ளது. இதனை 'நம்பிக்கையின் திருப்பாடல்' என்றும், 'இறைவேண்டலின் திருப்பாடல்' என்றும் நாம் அழைக்கலாம். இத்திருப்பாடல், இறைபுகழ்ச்சியில் தொடங்கி (வச 1-6,) வேதனையில் பயணித்து (வச 7-12) மீண்டும் இறைபுகழ்ச்சியில் (வச 13-14) நிறைவடைகிறது. அதாவது, நமது வாழ்வில் சுழற்சி முறையில் மகிழ்ச்சி, வேதனை, மகிழ்ச்சி என மாறி மாறி வருவதையே இத்திருப்பாடலின் ஆசிரியரான தாவீது அரசரும் வெளிப்படுத்தி இருக்கிறார். இப்போது முதல் மூன்று இறைவசனங்கள் குறித்து நாம் சற்று ஆழமாகச் சிந்திப்போம்.

"ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு  அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? தீயவர் என் உடலை விழுங்க என்னை நெருங்குகையில், என் பகைவரும் எதிரிகளுமான அவர்களே இடறி விழுந்தார்கள். எனக்கெதிராக ஒரு படையே பாளையமிறங்கினும், என் உள்ளம் அஞ்சாது; எனக்கெதிராகப் போர் எழுந்தாலும், நான் நம்பிக்கையோடிருப்பேன்". (வசனங்கள் 1-3)

முதல் மூன்று இறைவசனங்களிலும், கடவுள் தன்னோடு இருக்குபோது, போரே எழுந்தாலும் தான் அஞ்சி நடுங்கிடத் தேவையில்லை என்கின்ற தனது ஆழமான அசைக்க முடியாத இறைநம்பிக்கையை வெளிப்படுத்துகிறார் இத்திருப்பாடல் ஆசிரியர். இந்த மூன்று இறைவசனங்களிலும் தாவீது அரசர் ஆண்டவரை ஒளியாகவும், மீட்பராகவும், அடைக்கலமாகவும், போர்களின்போது காப்பவராகவும்  உருவகப்படுத்திப் பேசுகிறார்.

முதலாவதாக ‘ஆண்டவரே என் ஒளி’ என்கிறார். இறைவன் இவ்வுலகினையும் அதில் வாழும் மனிதரையும் ஒளிர்விக்கும் ஒளியாக இருக்கின்றார், எனவேதான் படைப்பின் தொடக்கத்திலேயே “ஒளி உண்டாகுக!” என்ற வார்த்தையால் இருளால் நிறைந்திருந்த இவ்வுலகை ஒளியால் ஒளிரச் செய்கின்றார். “உன் கதிரவன் ஒருபோதும் மறையான்; உன் நிலா இனித் தேய்ந்து போகாள்; ஆண்டவரே உனக்கு என்றுமுள ஒளியாக இருப்பார்; உன் கண்ணீரின் நாள்கள் ஒழிந்துபோம்” (எசா 60: 20), என்று ஒளியாக மக்களைப் பின்தொடரும் இறைவனைக் குறித்த இறைவார்த்தையை வாசிக்கின்றோம். மேலும், இயேசு மக்களைப் பார்த்து, “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” (யோவா 8:12) என்றும், "என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன்" (யோவா 12:46) என்றும், ஒளியாம்  இயேசுவைக் குறித்து திருவிவிலியத்தில் வாசிக்கின்றோம்.   

இரண்டாவதாக, தாவீது அரசர், "அவரே என் மீட்பு” என்கிறார். மீட்பரும் மீட்பைக் கொடுப்பவரும் கடவுள் மட்டுமே என்று தாவீது நம்புகின்றார். "ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும்  வல்லமை, என் அரண்" (திபா 18:2) என்றும், உண்மையாகவே என் கற்பாறையும் மீட்பும் அவரே; என் கோட்டையும் அவரே; எனவே நான் சிறிதும் அசைவுறேன். (திபா 62: 2) என்றும் ஏனைய திருப்பாடல்களிலும் வாசிக்கின்றோம்.

மூன்றாவதாக, தாவீது அரசர், "ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்"  என்கின்றார். “ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்? மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும்? (திபா 118:6) என்றும், “கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்?" (உரோ 8:31) என்றும் எடுத்துரைக்கும் இறைவார்த்தைகள் மனிதருக்குக் கடவுள் அடைக்கலம் தருவதை உறுதிப்படுத்துகின்றன.

அமெரிக்காவில் அடிமையின் தளைகளைத் தகர்த்தெறிந்து கருப்பர் இனமக்களுக்கு ஒளியாக, மீட்பராக, அடைக்கலமாக இருந்தவர் ஆபிரகாம் லிங்கன். அவருடைய எதிரிகள் பலமுறை அவரை வீழ்த்த நினைத்தபோதிலும் அது முடியாமல் போனது. எதிரிகளால் ஏற்படுத்தப்பட்ட அத்தனைத் தடைகளையும் தகர்த்தெறிந்தவர். மிகுந்த பொறுமையுடனும், மன வலிமையுடனும் பல்வேறு தோல்விகளைத் தோற்கடித்துவிட்டு வாழ்வில் உயர்ந்தவர். எதிரிகள் விரித்த சூழ்ச்சிநிறை வலைகளில் சிக்கிக் கொள்ளாத உத்தமர். இதற்கெல்லாம் முக்கியக் காரணம், அவர் கடவுளை மட்டுமே தனது நம்பிக்கையின் கேடயமாகக் கொண்டிருந்தார் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். அவருடைய வாழ்வில் நடந்த நிகழ்வு இது. ஆபிரகாம் லிங்கன் தான் சந்தித்த பல்வேறு இன்னல்களுக்கும் தோல்விகளுக்கும் மத்தியில் தேர்தலில் வென்று அமெரிக்காவின் அரசுத் தலைவரானார். அவர் முதன் முதலாகப் பாராளுமன்றத்திற்குள் வந்தபோது, எதிர்க்கட்சிக்காரர் ஒருவர் எழுந்து, எல்லாருக்கும் முன்பும் அவரை அவமானப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு, "திரு லிங்கன் அவர்களே, உங்கள் அப்பா செருப்பு தைக்கும் ஒரு தொழிலாளியாக இருந்தவர்தானே" என்று கேட்டார். அப்போது அவருடைய எதிரிகள் முதற்கொண்டு மற்ற எல்லாரும் அவரிடமிருந்து கோபமான பதில் வரும் என்றே எதிர்பார்த்தனர். ஆனால், அதைக் குறித்து சிறிதும் கவலைகொள்ளாத லிங்கன், கேள்வி எழுப்பிய அந்த எதிர்க்கட்சி உறுப்பினரிடம், “நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே. என் அப்பா செருப்புத் தைக்கும் ஒரு தொழிலாளர் என்பதை மிகவும் பெருமையோடு இங்குச் சொல்லிக்கொள்கிறேன். அவர் அந்த வேலையை மிகவும் நேர்த்தியாகச் செய்வார். அவரிடமிருந்து கற்றுக்கொண்ட நானும் அந்த வேலையை நான்றாகச் செய்வேன். ஒருவேளை, என் அப்பா தைத்துக்கொடுத்த செருப்பில் குறை இருந்தால் அதை என்னிடம் கொண்டு வாருங்கள், நான் சரியாகத் தைத்துக்கொடுக்கிறேன்” என்று பதில் கூறினார். அப்போது கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் அவமானத்தால் வேட்கித் தலைகுனிந்தார்.

அன்பர்களே, தாவீது பிலிஸ்தியனான கோலியாத்தை வென்ற கதை நமக்குத் தெரியும். தன் படைக்கலன்கள் மீது நம்பிக்கை வைத்து வந்த கோலியாத்தை, கடவுள்மீது கொண்டிருந்த நம்பிக்கையால் தாவீது வெற்றிகொள்கிறார். அப்பொழுது தாவீது பெலிஸ்தியனிடம், “நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய்; நானோ, நீ இகழ்ந்த இஸ்ராயேலின் படைத்திரளின் கடவுளாகிய, படைகளின் ஆண்டவர்தம் பெயரால் வருகிறேன். (1 சாமு 17:45) என்று கூறி அவனை வீழ்த்துவத்தைக் காண்கிறோம். இஸ்ரயேல் மக்களை மிரட்டிக்கொண்டும் அவர்தம் உண்மை கடவுளைப் பழித்துக்கொண்டும் இருந்த கோலியாத்தின் பிரமாண்டம்,  எளியவனும் சிறியவனுமான தாவீதின் கரங்களில் சிக்குண்டு சிதறிப்போகிறது.

நான்காவதாக, "எனக்கெதிராகப் போர் எழுந்தாலும், நான் நம்பிக்கையோடிருப்பேன்" என்கிறார் தாவீது. 'போர்' என்ற வார்தையைக் குறித்து நாம் சிந்திக்கின்றபோது, நமக்கு பெரும் அச்ச உணர்வே ஏற்படுகிறது. இன்றைய நமது உலகச் சூழலில், சிரியா, உக்ரைன், மியான்மார் போன்ற நாடுகளில் இடம்பெற்று வரும் போர்கள், அம்மக்களின் வாழ்வை மீளாத் துயரத்தில் ஆழ்த்தி வருகின்றன. எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியாய்  நிற்கும் அம்மக்களின் வாழ்வில், கடவுளின் மீது அவர்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கை மட்டுமே இன்னும் மிச்சமிருக்கின்றது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவர்கள் கடந்து வரும் வேதனைகள் மத்தியில் கடவுள் நம்மை நிச்சயம் காப்பார் என்ற தங்களின் அதீத நம்பிக்கையில் வாழ்வை நாளும் நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். இந்நாடுகளின் தற்போதைய நிலையை சற்றே தெரிந்துகொள்வோம். 

கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி, மியான்மார் நாட்டின் Nyaunglebin மரியன்னை திருத்தலத்தில், உலக நோயுற்றோர் தினத்தையொட்டி திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய கர்தினால் சார்லஸ் போ அவர்கள், ஒவ்வோர் ஆண்டும் உலக நோயுற்றோர் தினத்தன்று அன்னை மரியாவை நோக்கி வரும் மியான்மார் மக்கள், இவ்வாண்டு ஒரு காயமுற்ற தேசமாகவும், பெரும் சவால்களுடனும், கண்ணீருடனும், பெருந்தொற்றின் பாதிப்புகளுடனும், குடிபெயர்தல்களுடனும், மனமுறிவுகளுடனும் அன்னையை நோக்கி வந்துள்ளோம் என்று கூறினார். அவர்கள் அன்னை மரியாவை நம்பிக்கையுடன் நாடிவந்துள்ளதையே இது குறித்துக் காட்டுகிறது.

அவ்வாறே, கடந்த எட்டு ஆண்டுகளாக உக்ரைன் நாட்டு எல்லைப்பகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்களும், இரஷ்யாவின் இராணுவக் குவிப்புகளும், உக்ரைன் அரசுக்கு மட்டுமல்ல, சாதாரண குடிமக்களுக்கும் பெரும் துயர்களைத் தந்து வருவதாக அண்மையில் கவலையை வெளியிட்டார் உக்ரைன் கிரேக்கக் கத்தோலிக்கப் பேராயர் Shevchuk. இராணுவப் பதட்டநிலை, தவறான தகவல் பரிமாற்றங்கள், அரசியல் விரிவாக்க மோதல்கள், பொருளாதாரச் சரிவு போன்றவைகளை எதிர்நோக்கி இருக்கும் உக்ரைன் நாட்டில், கடவுள் மீதும் திருஅவையின்மீதும் மக்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று கூறினார். 

ஆகவே, நமது வாழ்வின் எல்லா நிலைகளிலும் தாவீது அரசரைப் போன்று ஆண்டவரை ஒளியாகவும், மீட்பராகவும், அடைக்கலமாகவும், நம்மைச்சுற்றி வெளிப்புறத்திலும் உள்ளமெனும் உள்புறத்திலும் இடம்பெறும் போர்களின்போது நம்மைக் காப்பவராகவும் ஏற்று, அவர்மீது என்றும் உறுதியான நம்பிக்கையுடன் வாழ்வோம். அதற்கான இறையருளைக் கேட்டு மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 February 2022, 16:30