அருள்பணி Lapsleyவுக்கு 39வது நிவானோ அமைதி விருது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
தென்னாப்ரிக்காவில் நிறவெறிக் கொள்கைக்கு எதிராகவும், உலகின் பல்வேறு பகுதிகளில் சமுதாயப் பாகுபாடுகள் களையப்படவும், கடுமையாகப் போராடிய ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபையின் அருள்பணி Michael Lapsley அவர்களுக்கு, ஜப்பானில் 39வது நிவானோ பன்னாட்டு அமைதி விருது வழங்கப்படவுள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளில் அமைதியைக் கட்டியெழுப்பவும் உழைத்த அருள்பணி Lapsley அவர்களுக்கு, வருகிற ஜூன் மாதம் 14ம் தேதி டோக்கியோ நகரத்தில் நடைபெறும் நிகழ்வில் நிவானோ அமைதி விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிவானோ அமைதி விருதைப் பெறும் அருள்பணி Lapsley அவர்களுக்கு, சான்றிதழ் ஒன்றும், பதக்கம் ஒன்றும், 2 கோடி ஜப்பானிய யென் பணமும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அருள்பணி Lapsley அவர்கள், ஜிம்பாப்வே நாட்டில், ANC எனப்படும் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததற்குப்பின்னர், 1976ம் ஆண்டில் தென்னாப்ரிக்க முன்னாள் நிறவெறி அரசு, அவரை நாடு கடத்தியது. 1990ம் ஆண்டில், கடிதம் ஒன்றில் மறைத்து அனுப்பப்பட்ட வெடிகுண்டால், அவர் தன் கரங்களையும், கண் ஒன்றையும் இழந்துள்ளார். 1992ம் ஆண்டில் தென்னாப்ரிக்காவுக்குத் திரும்பிய அருள்பணி Lapsley அவர்கள், மன்னிப்பு சார்ந்த திட்டங்கள், பழைய நினைவுகளைக் குணப்படுத்தும் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.
1949ம் ஆண்டில் நியுசிலாந்தில் பிறந்த அருள்பணி Lapsley அவர்கள், 1973ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபையில் அருள்பணியாளரானார். பின்னர் தென்னாப்ரிக்கா சென்று நிறவெறிக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடினார்.
உலக அமைதி மற்றும், அமைதிக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பவர்களைக் கவுரப்படுத்துவதற்கு 1978ம் ஆண்டில் நிவானோ அமைதி நிறுவனம் உருவாக்கப்பட்டது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்