தேடுதல்

துவக்க காலத்தில் திருத்தந்தையர்கள் வாழ்ந்த இலாத்தரன் மாளிகை துவக்க காலத்தில் திருத்தந்தையர்கள் வாழ்ந்த இலாத்தரன் மாளிகை  

திருத்தந்தையர் வரலாறு - மோதல் தொடர்கிறது

ஜெர்மனியில் ஆயர் இல்லா மறைமாவட்டங்களின் சொத்துக்களை கைப்பற்றியதோடு, பெண் துறவு மடங்களின் சொத்துக்களுக்காக அவைகளை மூடத்தொடங்கினார் பேரரசர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருஅவையில், குறிப்பாக  திருத்தந்தையர்களின் தேர்வுகளில் பேரரசரின் ஆதிக்கத்திற்கான பெருமுயற்சிகள் இடம் பெற்றுக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், 1185ம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் தேதி  திருத்தந்தை மூன்றாம் லூசியுஸ் உயிரிழக்க, அவருக்குப்பின் அதேநாளில் தேர்வு செய்யப்பட்டார் மிலானின் பேராயராக இருந்த கர்தினால் உபெர்த்தோ (Uberto). இவர் மூன்றாம் உர்பான் என்ற பெயரை தேர்வு செய்து கொண்டார். டிசம்பர் முதல் தேதியே இவரின் பாப்பிறை பதவியேற்புவிழா இடம் பெற்றது. ஏற்கனவே  திருத்தந்தை மூன்றாம் லூசியுசுக்கும் பேரரசர்  பிரடெரிக் பார்பரோசாவுக்கும் (Frederick Barbarosa) இடையே மோதல்கள் தொடர்ந்து வந்துள்ள நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தையை வெறுக்க பேரரசருக்கு வேறு ஒரு முக்கிய காரணமும் இருந்தது. ஆம், 1162ம் ஆண்டின் நிகழ்வுகளைப் பார்த்தோமானால் பேரரசர், இத்திருத்தந்தை மூன்றாம் உர்பானின் உறவினர்களை மிலானை விட்டுத் துரத்தியதும், அவர்களுள் பலரை ஊனமாக்கியதும் இடம் பெற்றுள்ளது. ஆகவே, திருத்தந்தைக்கும் பேரரசருக்கும் இடையே தனிப்பட்ட விரோதங்களுக்கான காரணமும் இருந்தது. இந்நிலையில் திருத்தந்தைக்கு மேலும் ஒரு சோகமான செய்தி வந்து சேர்ந்தது. 

   திருத்தந்தைக்கும் திருப்பீடச் சொத்துக்களுக்கும் பாதுகாப்பும் ஆதரவும் வழங்கி வந்த தென்இத்தாலியின் சிசிலி தீவு அரசகுடும்பத்தின் இளவரசி Constanceஐ 1186ம் ஆண்டு ஜனவரி 4ந்தேதி மிலானில் மணந்தார் பேரரசர் பிரடெரிக்கின் மகன் ஹென்றி. இப்போது திருத்தந்தைக்கு இத்தாலியின் தென்பகுதியில் இருந்த அரச ஆதரவும் இல்லாமல் போனது. இதற்கிடையே 1177ம் ஆண்டு டஸ்கனியின் மட்டில்டா வழங்கிய சொத்துக்களை திருப்பீடம் ஏற்றுக்கொள்ள பல்வேறு தடைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. பேரரசரும் தன் பங்குக்கு, ஜெர்மனியில் ஆயர் இல்லா மறைமாவட்டங்களின் சொத்துக்களை கைப்பற்றியதோடு, பெண் துறவு மடங்களின் சொத்துக்களுக்காக அவைகளை மூடத்தொடங்கினார். திருத்தந்தை மூன்றாம் உர்பான் பெரும் சோதனைகளைச் சந்திக்க வேண்டியதாகியது. முந்தைய திருத்தந்தை மூன்றாம் லூசியுசைப்போல் இவரும் ஹென்றியை மன்னராக முடிசூட்ட மறுத்தார். பேரரசரும் திருத்தந்தையை எதிர்த்து, இத்தாலியின் ஆக்குவிலா பேராயரை வைத்து தன் மகனுக்கு முடிசூட்டினார். இதனால் அப்பேராயரை திருஅவையிலிருந்து விலக்கிவைத்தார் திருத்தந்தை.

  இதற்கிடையே, பேராயர்களை நியமிப்பதிலும் பேரரசருக்கும் திருத்தந்தைக்கும்  இடையே மோதல் துவங்கியது. Trierன் பேராயராக Formarஐ திருத்தந்தை நியமிக்க, அதே இடத்தில் Rudolf என்பவரை நியமித்தார் பேரரசர். ஜெர்மனிக்கு திருத்தந்தையின் தூதுவர்கள் செல்லக்கூடாது என ஆல்ப்ஸ் மலை வழியான பாதையை அடைத்த பேரரசர், திருப்பீடச் சொத்துக்களைச் சூறையாடும்படி தன் மகன் ஹென்றி தலைமையில் படைகளை அனுப்பி வைத்தார். திருத்தந்தையோ ஜெர்மன் ஆயர்களின் ஆதரவை நாடினார். ஆனால் ஜெர்மன் ஆயர்களின் கூட்டத்தில் திருத்தந்தையின் பிரதிநிதியான Cologne பேராயர் Philip von Heinsberg பந்கேற்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் ஆயர்களின் ஆதரவை எளிதாகப் பெற்றார் பேரரசர். ஆயர்களும் திருத்தந்தைக்கு எழுதிய கடிதத்தில், பேரரசருடன் இணக்கமாகச் செல்லவேண்டும் என விண்ணப்பித்தனர். எல்லா பக்கமும் ஆதரவை இழந்துவந்த திருத்தந்தை மூன்றாம் உர்பான் அவர்கள், வெரோனா நகரில் திருஅவை நீதிமன்றத்தின் முன் வரும்படி பேரரசரைப் பணித்தார். ஆனால், வெரோனா நகர் மக்களோ, தங்கள் நகரில் வைத்து பேரரசரை கிறிஸ்தவ மறையிலிருந்து விலக்கி வைக்கும் உத்தரவை வழங்கக் கூடாது என கேட்டுக்கொண்டனர். இதனால், வெனிஸ் நகர் நோக்கிச் சென்றார் திருத்தந்தை மூன்றாம் உர்பான். அங்கே வைத்து பேரரசரை திருச்சபையிலிருந்து விலக்கி வைப்பதாக இருந்த திட்டம் நிறைவேறவில்லை. ஏனெனில் அங்கு செல்லும் முன்னரே Ferrara எனுமிடத்தில் 1187ம் ஆண்டு அக்டோபர் 19ம்நாள் காலமானார் திருத்தந்தை மூன்றாம் உர்பான். ஓராண்டு 11 மாதங்களே இவர் திருத்தந்தையாக இருந்தார்.

  Ferraraவில் திருத்தந்தை இறக்க, அதே இடத்தில் இடம் பெற்ற திருத்தந்தைத் தேர்தலில், திருத்தந்தையாக அக்டோபர் 21ந்தேதி தேர்வு செய்யப்பட்டார் Alberto di Morra என்ற இயற்பெயர் கொண்ட திருத்தந்தை எட்டாம் கிறகரி. இத்திருத்தந்தைதான் கர்தினாலாக இருந்தபோது, இங்கிலாந்தில் புனித தாமஸ் பெக்கட்டின் கொலை குறித்து விசாரிக்க, திருத்தந்தை மூன்றாம் அலெக்சாண்டரால் அனுப்பப்பட்ட இருவருள் ஒருவர். இவர் காலத்தில்தான் யெருசலேம் நகர், கிறிஸ்தவர்களின் கைவிட்டுப் போனது. பாலஸ்தீனத்தில் கிறிஸ்தவம் முற்றிலுமாக அழிவைக் கண்டது. இந்நிகழ்வுகளால் மனம் வருந்திய திருத்தந்தை எட்டாம் கிறகரி, புனித பூமியைக் கைப்பற்றும் நோக்கத்தில் ஐரோப்பிய மன்னர்களின் உதவி கேட்டு கடிதங்களை அனுப்பினார். ஆனால், தன் ஆவல் நிறைவுறும் முன்னரே Pisa நகரில் 1187ம் ஆண்டு டிசம்பர் 17ல் காலமானார். அதாவது, ஒரு மாதம் 27 நாட்களே இவர் திருத்தந்தைப் பொறுப்பில் இருந்தார். இவர் Pisa பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

  நேயர்களே! பேரரசருக்கும் திருஅவை தலைமைப்பீடத்திற்கும் நடந்த மோதல்களில், திருத்தந்தையர்கள் உரோம் நகரில் வாழ முடியாதச் சூழல்களின் காலக்கட்டத்தில் அடுத்து பதவிக்கு வந்த திருத்தந்தை மூன்றாம் கிளமென்ட் குறித்து வரும் வாரம் நோக்குவோம்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 January 2022, 15:26