பிலிப்பீன்ஸ் கிறிஸ்தவ தலைவர்கள் வேண்டுகோள்!
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
பிலிப்பீன்ஸ் நாட்டிற்காக இறைவன் வகுத்த திட்டங்களைத் தூர விலக்கிச் செயல்படும் இருளின் சக்திகளிலிருந்து தங்களைக் காத்து, நாட்டின் பொதுத்தேர்தலுக்குத் தயாரிக்க வேண்டும் என மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் பிலிப்பீன்ஸ் கிறித்தவ சபைகளின் தலைவர்கள்.
இவ்வாண்டு மேமாதம் 9ம் தேதி இடம்பெறவிருக்கும் பொதுத்தேர்தலுக்கு எனத் தயாரிப்புகள் இடம் பெற்று வரும் வேளையில், மக்களுக்கென அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிலிப்பீன்ஸ் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள், அரசுத் தலைவரின் தேர்தலுக்கு போட்டியிடுபவர்களின் சேவைபுரியும் தலைமைத்துவம் குறித்து மக்கள் யோசிக்கவேண்டும் என அதில் அழைப்பு விடுத்துள்ளனனர்.
பிலிப்பீன்ஸ் கிறிஸ்தவ சபைகளின் தேசிய அவையின் பொதுச்செயலர் ஆயர் Ruel Norman Marigza, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையின் பேராயர் Angelito Lampon ஆகியோர் இணைந்து கையெழுத்திட்டுள்ள இவ்வறிக்கை, வாழ்வையும் இறைவனின் படைப்பையும் பாதுகாத்து மதிப்பதில் நாம் அனைவரும் ஒன்றிணைத்து உழைக்கவேண்டும் என மக்களிடம் விண்ணப்பிக்கிறது.
தற்போதைய பிலிப்பீன்ஸ் அரசின், போதைப்பொருள் தடுப்பு, மற்றும் தேசியப் பாதுகாப்பு என்ற திட்டங்களின் கீழ் இராணுவத்தின் வன்முறைச் செயல்களும் சட்டவிரோதக் கொலைகளும் இடம்பெற்றது குறித்தும் தங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர் கிறிஸ்தவத் சபைகளின் தலைவர்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்