புத்தாண்டில் புனித பூமியில் நம்பிக்கை கொள்ள அழைப்பு
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
புதிய ஆண்டின் தொடக்கத்தில், யெருசலேமின் இலத்தின் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, பேராயர் Pierbattista Pizzaballa அவர்கள், புனித பூமியில் உள்ள கத்தோலிக்கர்களை, தற்போதைய நிலையில் சிரமங்கள் இருந்தபோதிலும், அவர்களின் எதிர்காலத்தைப் பற்றிய நேர்மறையான கண்ணோட்டத்தை கொண்டிருக்கவவும், திருஅவை மற்றும் சமூக வாழ்வின் செயல்பாடுகளில் தீவிரமாக பங்கேற்கவும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனவரி முதல் தேதியன்று, 'அன்னை மரியா இறைவனின் தாய்' என்ற பெருவிழாத் திருப்பலியில் தான் ஆற்றிய மறையுரையில், உள்ளூர் கிறிஸ்தவர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பல சிரமங்கள், மற்றும் பகைமைகளிலிருந்து தாங்கள் ஒரு கண்ணாடி அறையில் பாதுகாக்கப்படுவதையும் தஞ்சமடைவதையும் எதிர்பார்க்கக் கூடாது, மாறாக, அவர்கள் தாங்கள் வாழும் சமூகத்தின் குடிமை மற்றும் சமய வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், உள்ளூர் கிறிஸ்தவ சமூகம் எப்போதும் புகார் செய்யக்கூடாது, மாறாக, வாழ்க்கை மற்றும் மகிழ்ச்சிக்கான வழிகளைத் திறக்கும் இறைவனில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் கூறிய அவர், நமது செயல்களிலிருந்தும் முயற்சிகளிலிருந்தும் உடனடி முடிவுகளை எதிர்பார்க்கும் மனநிலையை விடுத்து, விதைப்பவரின் நம்பிக்கையையும் பொறுமையையும் நாம் பெற வேண்டும், என்று அறிவுறுத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்