தேடுதல்

மலேசியாவில் வெள்ளப்பெருக்கு மலேசியாவில் வெள்ளப்பெருக்கு  

மலேசியாவில் காரித்தாஸ் அமைப்பின் பணிகள்

மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 1,25,000 மக்களுக்கு கத்தோலிக்கர் உதவி

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த ஞாயிறன்று மலேசியாவின் 7 மாநிலங்களில் பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 1,25,000க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர் என்றும், மோசமான இப்பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாட்டின் தலத்திருஅவை உடனடி உதவிகளைச் செய்து வருகிறது என்றும் UCA செய்திகள் தெரிவிக்கின்றன.

மலேசியாவின் கத்தோலிக்கத் திருஅவை, அதனுடைய பங்குத்தளங்கள், மற்றும் விசுவாசிகள் வழியாக வெள்ளப் பகுதிகளில் சிக்கித் தவித்தவர்களுக்கும், உதவியின்றி நம்பிக்கை இழந்த மக்களுக்கும் உடனடியாக உதவ, நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என்றும் இச்செய்தி நிறுவனம் கூறுகிறது.

நாட்டின் பணக்கார, மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் ஒன்றான சிலாங்கூர் உட்பட, பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களுக்கும் ஆதரவளிக்கும் வகையில் ஜனவரி 22ம் தேதி வரை நடைபெறும் நிதி திரட்டும் பிரச்சாரத்தை மலேசியாவின் காரித்தாஸ் அமைப்பு அறிவித்துள்ளது என்றும் UCA செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

அண்மை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, வழக்கத்திற்கும் மாறாக ஏற்பட்ட மழைப்பொழிவால் மிக மோசமான அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல கிராமங்களையும் நகரங்களையும் மூழ்கடித்து சாலைகளைத் துண்டித்தது என்பதை கண்டதும், மலேசிய ஆயர்களின் உதவியோடும் ஆசிர்வாதத்தோடும் தேசிய வெள்ள நிவாரண உதவியை உருவாக்கி, முடிந்தவரை பாதிக்கப்பட்டுள்ளவர்களை சென்றடைய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் காரித்தாஸ் அமைப்பு கூறியதாகவும் UCA  செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 January 2022, 16:52