தேடுதல்

சிகிச்சை பெறும் தொழுநோயாளர்கள் சிகிச்சை பெறும் தொழுநோயாளர்கள்  

தொழுநோய் தினம்: அருள்சகோதரியின் அன்புப் பணி

ஆராவாரமற்ற அன்புச் சகோதரிகளின் அர்ப்பணம் நிறைந்த பணியை ஆதரிப்பதை நாங்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறோம் - சகோதரி, Clare McIntosh

செல்வராஜ் சூசைமாணிக்ககம் - வத்திக்கான்

தொழுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக தொழுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

உலகளவில் ஏறக்குறைய நான்கு மில்லியன் மக்கள் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று ICN செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்த ஆண்டு, இங்கிலாந்தைச் சேர்ந்த St Francis Leprosy Guild என்ற தொண்டு நிறுவனம், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனிப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் கத்தோலிக்க அருள்சகோதரிகளின் பணியைப் பற்றி சிந்திக்கவும், அவர்களுக்காக இறைவேண்டல் செய்யவும் கத்தோலிக்க சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும்  இச்செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

தொழுநோயாளர்களுக்கான எங்கள் அருள்சகோதரிகளின் பணிகள், அவர்கள் வாழ்க்கையை எந்தளவுக்கு மாற்றியுள்ளது என்பதை கணக்கிட முடியாது என்றும், சகோதரிகளின் அன்பும் அக்கறையும் அளவிட முடியாதது என்றும், ஆரவாரமற்ற இவர்களின் மகத்தான பணியை ஆதரிப்பதை நாங்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறோம் என்றும் புனித பிரான்சிஸ் அமைப்பின் தலைமை நிர்வாக சகோதரி, Clare McIntosh அவர்கள் கூறியதாக இச்செய்தி நிறுவனம் மேலும் எடுத்துரைக்கிறது.

எடுத்துக்காட்டாக, இலங்கையின் கீழ், மத்திய மலைப்பகுதியில் அமைந்துள்ள பதுளை தொழுநோய் மையத்தின் தொழுநோயாளிகளுடன் பணிபுரியம் Franciscan Missionaries of Mary சபையைச் சேர்ந்த  அருள்சகோதரி லலிதா பெர்னாண்டோ, தனது நீண்ட நெடிய பயணங்களையும்  சோர்வையும் களைப்பையும் குறித்து கவலை கொள்ளாமல்,  புனித பிரான்சிஸ் செய்து வந்த இந்தப் பணியை மனமுவந்து செய்கிறேன் என்று கூறியதாக ICN செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

இங்கிலாந்து, மற்றும் வேல்ஸின் கத்தோலிக்க ஆயர் பேரவையின் அனைத்துலக விவகாரங்களுக்கான தலைமை ஆயராகவும், கிளிஃப்டனின் (Clifton) ஆயராகவும் விளங்கும் டெக்லான் லாங் (Declan Lang) அவர்கள், தனது ஆதரவை St Francis Leprosy Guild தொழுநோய் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கி வருகிறார் என்பது நினைவுகூரத்தக்கது (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 January 2022, 16:20