தேடுதல்

மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் சிலை மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் சிலை   (2022 Getty Images)

மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் வாழ்வைப் பின்பற்ற அழைப்பு

நல்மனம் படைத்த அனைவரும் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் வன்முறையற்ற வழிகள் மற்றும் உடன்பிறந்த நிலைக்கான அழைப்பை ஏற்று செயல்படவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் நல்மனம் படைத்த அனைவரும், மனித உரிமை நடவடிக்கையாளர் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் நினைவை கெளரவிக்கும் விதமாக, சரிநிகர்தன்மை மற்றும் நீதிக்கானப் போராட்டத்தைத் தொடர வேண்டும் என அழைப்புவிடுத்துள்ளனர் அமெரிக்க ஆயர்கள்.

1983லிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் 3ம் திங்கள்கிழமையன்று சிறப்பிக்கப்படும் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்களின் தினத்தையொட்டி செய்தி வெளியிட்ட அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், நல்மனம் படைத்த அனைவரும் இத்தலைவரின் வன்முறையற்ற வழிகள், மற்றும் உடன்பிறந்த நிலைக்கான அழைப்பை ஏற்று செயல்படவேண்டுமென அழைப்புவிடுத்துள்ளனர்.

மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்களைப் பற்றி நாம் எண்ணும்போது, அவர் எத்தகைய நீதியைப் பெற்றார் என்பதைவிட, அவர் எத்தகைய வழிகளைப் பின்பற்றினார் என்பதை அறிய, முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என அச்செய்தியில் வலியுறுத்தியுள்ளார் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் Jose Gomez.

நேர்மை, உண்மை என்ற விவிலியக் கண்ணோட்டத்தில் தூண்டப்பட்ட மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அவர்கள், வாழ்வு, விடுதலை மற்றும் சரிநிகர் தன்மைக்குரிய உரிமை அனைவருக்கும் உள்ளது என்ற அமெரிக்க ஐக்கிய நாட்டு சித்தாந்தத்தில் முழு நம்பிக்கைக் கொண்டு செயல்பட்டார், என இச்செய்தியில் மேலும் கூறியுள்ளார் Los Angels பேராயர் Gomez.

1968ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் தேதி மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் கொல்லப்பட்டு 54 ஆண்டுகள் கடந்த பின்னரும், அமெரிக்க ஐக்கிய நாடு, பொருளாதார சரிநிகரற்ற நிலை, இனப்பாகுபாடு, வன்முறை, புலம்பெயர்ந்தோரை வரவேற்பதில் சிரமம், எனப் பல்வேறு சவால்களைத் தொடர்ந்து சந்தித்துக்கொண்டு வருகிறது என ஆயர்களின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 January 2022, 15:45