தேடுதல்

செபவாழ்வு செபவாழ்வு  (AFP or licensors)

விவிலியத் தேடல் - திருப்பாடல் 25 – கற்பிக்கும் கடவுள் - V

நாம் பாடம் கற்பிப்பதைவிட நாமே ஒரு வாழ்க்கைப் பாடமாக மாறும்போதுதான் அது உண்மையான கற்பித்தலாகிறது
விவிலியத் தேடல் - திருப்பாடல் 25 - V

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத்தேடலில், திருப்பாடல் 25ல் 9 முதல் 11 வரையுள்ள இறைவசனங்களை நமது சிந்தனைக்கு எடுத்துக்கொண்டோம். அதில், ‘எளியோருக்கே கடவுளின் நன்மைதனம்’ என்ற தலைப்பில் தியானித்தோம். இந்த நாளில், அதன் தொடர்ச்சியாக வரும் 12 முதல் 15 வரையுள்ள இறைவசனங்களைத் தியானிப்போம்.

ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் எவரோ அவருக்குத் தாம் தேர்ந்துகொள்ளும் வழியை அவர் கற்பிப்பார். அவர் நலமுடன் வாழ்வார்; அவருடைய மரபினர்  நாட்டைச் சொந்தமாக்கிக்கொள்வர். ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போருக்கே உரித்தாகும்; அவர் அவர்களுக்கு தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார்; என் கண்கள் எப்போதும் ஆண்டவரை நோக்கியிருக்கின்றன;

அவரே என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பார். (வசனம் 12-15)

இந்த நான்கு வசனங்களையும் மிக ஆழமாக நாம் தியானிக்கும்போது, "கடவுள் தனக்கு அஞ்சி நடப்போருக்குக் கற்பிக்கிறார்" அதாவது  ‘கற்பிக்கும் கடவுள்’ என்ற உயரிய சிந்தனையை நமக்கு வழங்குகிறது.

தற்போது வருகின்ற புதியவகை கைப்பேசிகளில், ‘navwoman’ என்ற புதிய செயலி ஒன்று இருக்கிறது. அதில் நீங்கள் அடையவேண்டிய இலக்குப் பகுதியை type செய்தால், மிகவும் புத்திசாலியான பெண் ஒருவர் தோன்றி, நீங்கள் உங்கள் இலக்கை அடைய வேண்டிய வழியை மிகத் துல்லியமாகக் காண்பித்து, அது குறித்த அனைத்துத் தரவுகளையும் உங்களுக்கு மிக நேர்த்தியாகக் கற்றுத் தருகிறார். ஒருவேளை, நீங்கள் இடதுபுறம் திரும்புவதற்குப் பதிலாக வலதுபுறம் திரும்பிவிட்டீர்கள் என்றால், அச்செயலை பொறுத்துக்கொண்டு, மன்னித்து, அமைந்த மனதுடன் உங்களை நோக்கி, ‘Recalculating’ என்று சொல்கிறார் அப்பெண். அதாவது, ‘நீங்கள் சரியான பாதையில் செல்வதற்கு நான் மீண்டும் கற்றுத் தருகிறேன் என்பதுதான் இதன் அர்த்தம்.  கிறிஸ்தவர்கள் அனைவருமே வாழ்வின் ஒவ்வொரு படிநிலையிலும் கடவுள் நமக்கு இப்படித்தான் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். சேசு சபையை நிறுவிய புனித இஞ்ஞாசியார், தான் எழுதிய ‘ஆன்மிகப் பயிற்சிகள்’ என்னும் புத்தகத்தில், “கடவுள் ஒரு தலைமை ஆசிரியரைப் போல எனக்குக் கற்றுக்கொடுத்து என்னை வழிநடத்துகிறார்” என்கிறார். இக்கருத்துக்கு வலுவூட்டும் இன்னும் சில இறைவார்த்தைகளைக் காண்போம்.

“நான் உனக்கு அறிவு புகட்டுவேன்; நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்னைக் கண்ணோக்கி, உனக்கு அறிவுரை கூறுவேன். (திபா 32:8) என்று திருப்பாடல் ஆசிரியரும், உங்கள் போதகரை நீங்கள் கண்ணால் காண்பீர்கள். நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும் “இதுதான் வழி, இதில் நடந்து செல்லுங்கள்” என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்” (எசா 30:20-21) என்று இறைவாக்கினர் எசாயாவும் எடுத்துரைக்கின்றனர்.

நமதாண்டவர் இயேசுவும், “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே, என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்” (மத் 11:18-19). என்கிறார்.

இயேசு ஆண்டவர் 30வது வயதில் தனது பணிவாழ்வைத் தொடங்கும் வரையிலும் அன்னை மரியா அவருக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கிறார். கானா ஊரிலே, இயேசு தனது முதல் அரும் அடையாளத்தை நிகழ்த்தும் வேளையில், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” (யோவா 2:5) என்று அன்னை மரியா கூறுவதன் வழியாக அவர் நமக்கும் கற்றுத்தருகிறார். ஆண்டவர் ஏற்படுத்திய நமது அன்னையாம் திருஅவையும், நமக்குப் பல்வேறு பாடங்களை மறைக்கல்வியாகக் கற்றுத் தருகிறது.

இத்தருணத்தில், என் சொந்த வாழ்வின் அனுபவங்களை உங்களோடுப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். நான் இந்தக் குருத்துவப் பணியைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, ஓர் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். நான் ஆசிரியர் பணியைத் தெரிவுசெய்வதற்கு முக்கியமான காரணம், எனக்குள் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஓர் ஆசிரியரின் வாழ்க்கைதான். அவர் பெயர் சுப்ரமணியன். நான் எனது சொந்த ஊரிலுள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது, அவர் எங்கள் ஊருக்குப் பணியாற்ற வந்தார். எங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஒரு பெரிய ஊரிலிருந்து தினமும் மிதிவண்டியில் வருவார்.   அவருடைய குடும்பம் பெரியது. அவருக்கு மொத்தம் ஏழு பிள்ளைகள்.

தினமும் காலையில் பத்து மணிக்குத்தான் வகுப்புகள் தொடங்கும். ஆனால், அவர்  காலையில் எட்டு மணிக்கெல்லாம் பள்ளிக்கு  வந்துவிடுவார். வகுப்புகள் தொடங்கும் வரையிலும், படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பார். அதுபோலவே, மாலை நான்கு மணிக்கு வகுப்புகள் முடிந்ததும், உடனே வீட்டிற்குப் போகமாட்டார். எங்களோடு சேர்ந்து பள்ளியைச் சுற்றியுள்ள தோட்டத்தில் வேலை செய்வார். பல்வேறு காய்கறிகளைப் பயிரிடுவார். அதன்பிறகு, மீண்டும் ஒரு மணிநேரம் படிப்பில் பின் தங்கிய மாணவர்களுக்குப் பாடம் கற்றுக்கொடுத்துவிட்டு, ஏறக்குறைய மாலை ஆறு மணிக்கு மேல்தான் வீட்டிற்குச் செல்வார். அவரது குடும்பத்தின்மேல் அவர் கொண்டிருந்த அக்கறையைவிட, எங்கள்மீதுதான் அதிக அக்கறை கொண்டிருந்தார்.   

இவை எல்லாவற்றிக்கும் மேலாக, அவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தது, பகிர்ந்து வாழும் குணம். தினமும் ஒரு பெரிய டிபன் கேரியரில்தான் சாப்பாடு கொண்டு வருவார். ஆனால், எல்லாவற்றையும் அவரே சாப்பிட மாட்டார். மாறாக, உணவின்றி பள்ளிக்கு வரும் மாணவர்களுத் தினமும் உணவு கொடுப்பார். ஒருநாள், ஒரு மாணவனை அழைத்து, “நாளைக்கு உனக்கு என்வீட்டு சாப்பாடு, தயாராக வா” என்றார். அந்த மாணவனும் மிகவும் ஆசையோடு அடுத்த நாள் பள்ளிக்கு வந்தான். மதிய உணவு இடைவேளையின்போது, ஆசிரியரின் வீட்டுச் சாப்பாட்டை சுவைக்க ஆவலோடு அவரிடம் ஓடினான். அப்போது சுப்பிரமணியன் ஆசியர் சொன்னார், “இன்னைக்கு நம்ம இரண்டு பேருக்குமே சாப்பாடு இல்ல. ஏன்னா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு வயதான அம்மா பசியோடு வந்தாங்க, அந்தம்மாவுக்கு எல்லா சாப்பாட்டையும் கொடுத்துட்டேன். வருத்தப்படாதே... நாளைக்கு சாப்பிடலாம்…” என்றார். தனது ஆசிரியர்  செய்த அறச்செயலைப் பார்த்த அந்த மாணவனும், ‘பரவாயில்ல சார்’ என்று முக மலர்ச்சியோடு கூறிச் சென்றான். நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிப்பையும் முடித்து, தொடர்ந்து எனது ஆசிரியர் பயிற்சிப் படிப்பையும் முடித்துவிட்டு வருகின்ற வரையிலும் அவர் எனது ஊரில்தான் இருந்தார். அங்குதான் அவர் பணிஓய்வும் பெற்றார்.

மாணவப் பருவம் என்பது எதையும் அப்படியே உள்வாங்கிக்கொள்ளும் பருவம். அதை நன்கு உணர்ந்திருத்தவராய், வாழ்வின் உயர்ந்த விழுமியங்களை அவர் எங்களுக்குக் கற்றுத்தந்தார். இவரைப் பற்றி இன்று நினைத்தாலும், இந்தச் சம்பவம்தான் உடனே என் நினைவிற்கு வருகிறது. இந்த நிகழ்வுதான், அவரைப்போல நானும் ஆசிரியராகி கல்வி கற்பிக்க வேண்டும் என்ற உயரிய கனவினை என்னுள் விதைத்தது. இன்றும் எனது உள்ளத்தில் உயர்ந்து நிற்கின்றார் ஆசிரியர் சுப்ரமணியன் அவர்கள்.   

நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பது போல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார். (எசா 50: 4-7) என்கிறார் இறைவாக்கினர் எசாயா.

 “நமக்குக் கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்ல. யாரிடம் நாம் கற்றுக்கொள்கிறோமோ அவரே நமக்கு ஆசிரியர்” என்கிறார் ஒரு மூத்த அறிஞர். நாம் பிறருக்குப் பாடம் கற்பிப்பதைவிட நாமே மற்றவர்களுக்கு ஒரு வாழ்க்கைப் பாடமாக மாறும்போதுதான் அது உண்மையான கற்பித்தலாக அமைகிறது. புனித பவுலடியாரின் கடிதங்கள் அனைத்துமே கற்பித்தல் வகையைச் சார்ந்ததுதான். அதிலும் குறிப்பாக, திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டு திருமுகங்களும், தீத்துவுக்கு எழுதிய திருமுகமும் கற்பித்தல் வகையைச் சார்ந்தவை. புனித பவுலடியாரின் வாழ்வே நாம் அனைவரும் காற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடமாகவும் அமைகிறது. தான் சந்தித்த எல்லா மக்களுக்கும் அவர் பாடங்களைச் சொல்லித் தருகின்றார். உதாரணமாக, பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் எதுவெல்லாம் மக்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்பதை எடுத்துக்காட்டுவதுடன் தன்னிடமிருந்து கற்றுக்கொண்டதையும் மனதில் நிறுத்துங்கள் என்கிறார்.  

“இறுதியாக, சகோதர சகோதரிகளே, உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள். நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்டவை, என் வழியாய்ப் பெற்றுக்கொண்டவை, என்னிடம் கேட்டறிந்தவை, என் வாழ்வில் நீங்கள் கண்டுணர்ந்தவை யாவற்றையும் கடைப்பிடியுங்கள். அப்போது அமைதியை அருளும் கடவுள் உங்களோடிருப்பார்” (பிலி 4:8-9)

ஆகவே, கற்பிப்பதிலும், கற்றுக்கொள்பவர்களுக்கு ஒரு பாடமாக அமைவதிலும் நம் கடவுளே நமக்கு சிறந்ததொரு முன்மாதிரியாக விளங்குகிறார். இதன் அடிப்படையில்தான் தாவீது அரசரும் கடவுளை கற்றுக்கொடுக்கும் ஒரு மிகச் சிறந்த ஆசிரியராக நமக்குக் காட்டுகின்றார். எனவே, நமது அன்றாட வாழ்வில் நாமும் பிறர் கற்றுக்கொள்ளும் பாடங்களாக அமைவதோடு, பிறருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்களாகவும் வாழ்வோம். ஆசிரியரும் போதகருமான நமதாண்டவர், இந்த மேலான கொடையை நமக்கு வழங்கிட இறையருள் வேண்டி மன்றாடுவோம்.

திருப்பாடல் 25ன் ஆறாம் பகுதியை அடுத்தவார நமது விவிலியத் தேடலில் தியானிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 January 2022, 15:18