தேடுதல்

இலாத்ரன் திருத்தந்தையர் இல்லத்தின் ஓர் அறை இலாத்ரன் திருத்தந்தையர் இல்லத்தின் ஓர் அறை  

திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தை இரண்டாம் இன்னொசென்ட்

திருத்தந்தை இரண்டாம் இன்னசென்ட்டுக்கும், எதிர்திருத்தந்தை இரண்டாம் Anacletusக்கும் இடையேயான மோதல் 8 ஆண்டுகள் நீடித்தது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை இரண்டாம் ஹொனாரியுஸ் அவர்கள் இறந்த மறுநாள் காலையிலேயே, அதாவது, 1130ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 14ம் தேதி, திருத்தந்தை இரண்டாம் ஹொனாரியுஸ் அவர்களுக்கு ஆதரவான கர்தினால்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான், திருத்தந்தை இரண்டாம் இன்னொசென்ட்.  ஆனால், இது நடந்த மூன்று மணி நேரத்திலேயே, வயது முதிர்ந்த ஏனைய ஆயர்களோ,  Pietro Pierleoni  என்ற கர்தினாலை திருத்தந்தையாக தேர்ந்தெடுத்தனர். அவரும் இரண்டாம் Anacletus என்ற பெயரை தெரிவுசெய்தார். மீண்டும் திருஅவையில்  இரண்டு திருத்தந்தையர்களின் தேர்வுகள். பெரும்பாலான ஆயர்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட திருத்தந்தை இரண்டாம் Anacletus அவர்கள், புனித பேதுரு பெருங்கோவிலில், 1130ம் ஆண்டு பிப்ரவரி 23ந் தேதி, திருத்தந்தையாக பொறுப்பேற்க, அதே நாளில் புதிய திருத்தந்தை இரண்டாம் இன்னொசென்ட் அவர்கள், Santa Maria Nuova என்ற கோவிலில் திருத்தந்தையாக பொறுப்பேற்றார். திருத்தந்தை இரண்டாம் இன்னொசென்ட் அவர்களால், புனித பேதுரு பெருங்கோவிலிலோ, இலாத்தரன் பெருங்கோவிலிலோ நுழையமுடியாத நிலை இருந்தது. ஏனெனில், உரோமுக்குள் எதிர்திருத்தந்தை இரண்டாம் Anacletusக்கே நல்ல ஆதரவு இருந்தது. எனவே, திருத்தந்தை இரண்டாம் இன்னொசென்ட் அவர்கள், தனக்கான ஆதரவைத் தேடி பிரான்சுக்கு பயணமானார். பிரான்சின் மன்னர் 6ம் லூயியும், இங்கிலாந்து மன்னர் முதலாம் ஹென்றியும், திருத்தந்தை இரண்டாம் இன்னொசென்ட் அவர்களுக்கே தங்கள் ஆதரவை வழங்கினர். நார்பர்ட்டைன் துறவு சபையை ஆரம்பித்த ஆயர் நார்பர்ட் உதவியுடன் ஜெர்மன் மன்னர் 3ம் Lothairன் ஆதரவையும் பெற்றார் திருத்தந்தை இரண்டாம் இன்னொசென்ட்.

திருத்தந்தை இரண்டாம் இன்னொசென்ட் அவர்களுக்கு ஆதரவாக தன் படைகளை 1133ம் ஆண்டு உரோம் நோக்கி வழிநடத்திச் சென்றார் ஜெர்மன் மன்னர் 3ம் Lothair. இருப்பினும், புனித பேதுரு பெருங்கோவிலை அவரால் கைப்பற்ற முடியவில்லை. ஆகவே, இலாத்தரன் பெருங்கோவிலில் மன்னர் 3ம் Lothairன் முடிச்சூட்டுவிழா திருத்தந்தை இரண்டாம் இன்னொசென்ட் அவர்களால் நடத்திவைக்கப்பட்டது. மன்னர் 3ம் Lothair  உரோமில் இருந்த வரையில், திருத்தந்தைக்கு எவ்வித பிரச்சனையும் இருக்கவில்லை. ஆனால், அவர் ஜெர்மனிக்குத் திரும்பியபின் பிரச்சனைகள் துவங்கின. திருத்தந்தை இரண்டாம் இன்னொசென்ட், உரோம் நகரில் இருக்க முடியாமல் Pisa நகர் சென்றார்.  இப்படி திருத்தந்தை இரண்டாம் இன்னொசென்ட்டுக்கும், எதிர்திருத்தந்தை இரண்டாம் Anacletusக்கும் இடையேயான மோதல் 8 ஆண்டுகள், அதாவது 1138ம் ஆண்டு ஜனவரி 25ந் தேதி, திருத்தந்தை இரண்டாம் Anacletus இறக்கும் வரை தொடர்ந்தது. இதற்கிடையில், அத்திருத்தந்தை இறந்தவுடன், அவரது இடத்தில் 4ம் விக்டர் என்பவர் எதிர் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் இப்பிரச்சனைகளில் ஈடுபட விருப்பமின்றி பதவி விலகியதால், எல்லாம் சுமுகமாகியது. 1139ம் ஆண்டு, திருத்தந்தை இரண்டாம் இன்னொசென்ட் அவர்கள், ஆயிரம் ஆயர்கள் மற்றும் திருஅவை அதிகாரிகளுடன், இரண்டாம் இலாத்தரன் அவையைக் கூட்டி, எதிர்திருத்தந்தை இரண்டாம் Anacletus அவர்களின் 8 ஆண்டு பதவி காலத்தில் மேற்கொண்ட செயல்பாடுகள் அனைத்தும் செல்லாதவை என அறிவித்தார். 1143ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ந் தேதி காலமானார், திருத்தந்தை இரண்டாம் இன்னொசென்ட்.

1143ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ந் தேதி பதவிக்கு வந்த திருத்தந்தை இரண்டாம் செலஸ்டின் குறித்து வரும் வாரம் நோக்குவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 December 2021, 15:54