தேடுதல்

திருத்தந்தை இரண்டாம் ஹொனாரியுஸ் திருத்தந்தை இரண்டாம் ஹொனாரியுஸ் 

திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தை இரண்டாம் ஹொனாரியுஸ்

ஒரு திருத்தந்தையின் திருவழிபாட்டுச் சடங்கின்போது, புதிய திருத்தந்தையாக கர்தினால்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை இரண்டாம் கலிஸ்துஸ் காலமானபோது, அதாவது 1124ம் ஆண்டு, அடுத்த திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் திருத்தந்தை இரண்டாம் ஹொனாரியுஸ். இவர் உரோம் நகருக்கு அருகே உள்ள Ostia என்ற குறு நகரின் கர்தினாலாக செயலாற்றி வந்தபோது, திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தை இரண்டாம் ஜெலாசியுஸ், உரோமைவிட்டு வெளியேற்றப்பட்டபோது, அவருடன் சென்ற கர்தினால்களுள் இரண்டாம் ஹொனாரியுஸும் ஒருவர். 1119ம் ஆண்டு இவர்தான்  திருத்தந்தை இரண்டாம் கலிஸ்துஸால் ஜெர்மன் நாட்டிற்கு அனுப்பப்பட்டு, பேரரசர்  5ம் ஹென்றியைச் சந்தித்து, மன்னருக்கும் திருஅவைக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் ஜெர்மனியில் தங்கியிருந்து தனக்கு அளிக்கப்பட்ட பணியில் வெற்றியும் கண்டார் இவர். இத்திருத்தந்தை இரண்டாம் ஹொனாரியுஸ் கர்தினாலாக  இருந்தபோது எடுத்த முயற்சியால்தான், திருஅவைக்கும் பேரரசருக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டு, திருஅவையின் நடவடிக்கைகளில் தலையிடும் தன் பல உரிமைகளை விட்டுக் கொடுத்தார் பேரரசர். 1123ம் ஆண்டு செப்டம்பர் 23ந் தேதி அமலுக்கு வந்தது இச்சட்டம். ஆனால் அடுத்த ஆண்டே,  அதாவது 1124ம் ஆண்டு டிசம்பர் 13ந்தேதி  திருத்தந்தை இரண்டாம் கலிஸ்துஸ் காலமானார். இப்போது, திருத்தந்தை இரண்டாம் ஹொனாரியுஸ் பொறுப்பேற்ற வழி குறித்து கொஞ்சம் காண்போம்.

திருத்தந்தை இரண்டாம் கலிஸ்துஸ் இறந்ததும் பெரும்பான்மை கர்தினால்கள் ஒன்றிணைந்து வயது முதிர்ந்த கர்தினால் Teobaldo Boccadipecora என்பவரை அடுத்த திருத்தந்தையாக தேர்ந்தெடுத்தனர். அவரும் இரண்டாம் செலாஸ்டின் என்ற பெயரை எடுத்தார். இது நடந்தது 1124ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ந் தேதி. ஆனால், இன்னொரு பக்கமோ பேரரசருக்கு ஆதரவான கர்தினால்கள் இணைந்து, முன்னாள் திருத்தந்தையர்களுக்கு பிரச்சனை கொடுத்து வந்த Frangipaniயின் ஆதரவுடன் ஓஸ்தியா நகர் கர்தினாலை திருத்தந்தையாக தேர்ந்தெடுத்தனர். அவரும் இரண்டாம் ஹொனாரியுஸ் என்ற பெயரை எடுத்துக்கொண்டார். இப்போது இரு கர்தினால்கள் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். ஆனால், கர்தினால்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இரண்டாம் செலாஸ்டின் அவர்கள்தான் முறையான திருத்தந்தை என்பதால், அவர் பொறுப்பேற்பதற்கான சடங்குகள் துவங்கின. அவருக்கு, திருத்தந்தைக்குரிய ஆடைகள் அணியப்பட்டு, அச்சடங்கில், நன்றி நவிலல் பண்ணாக Te Deum  பாடப்பட்டது. இவ்வேளையில் அத்துமீறி உள்ளே நுழைந்தார் Roberto Frangipani. திருத்தந்தையாக  இரண்டாம் செலாஸ்டின்  திருநிலைபடுத்தப்படுவதற்கு முன்னர், அவரின் தேர்வு செல்லாது எனவும், தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாம் ஹொனாரியுஸ் அவர்களே புதிய திருத்தந்தை எனவும் வாள்முனையில் அறிவித்தார் Frangipani. இந்தப்போராட்டத்தில் இரண்டாம் செலாஸ்டின் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட வயதான இரண்டாம் செலாஸ்டின், தானே முன்வந்து தனக்கு இந்த பொறுப்பு வேண்டாம் என விலகிக் கொண்டார்.  பதவியேற்காத இவர், எனக்கு இந்த பதவி வேண்டாம் என விலகிக்கொண்டதால், அங்கேயே கர்தினால்கள், இரண்டாம் ஹொனாரியுஸ் அவர்களை திருத்தந்தையாக தேர்ந்தெடுத்தனர். ஆனால் இந்த அவசர தேர்தல் குறித்து ஆழ்ந்து சிந்தித்த திருத்தந்தை ஹோனாரியுஸ் அவர்கள், ஐந்தே நாட்களில் கர்தினால்களைக்கூட்டி, தான் பதவி விலக விரும்புவதாகத் தெரிவித்தார். கர்தினால்கள் அனைவரும் ஒரே மனதாக அவரையே தேர்வு செய்வதாக மீண்டும் கூறியதால், ஏற்றுக்கொண்டார். இதற்கிடையில் 1125ம் ஆண்டு (23 மே, 1125) பேரரசர் ஐந்தாம் ஹென்றி காலமானார். திருத்தந்தை இரண்டாம் ஹொனாரியுஸ் அவர்கள், திருஅவையில் ஆன்மீகப் புதுப்பித்தலில் அதிகக் கவனம் செலுத்தினார். இன்று பல்வேறு பணிகளில் ஆர்வமுடன் செயல்பட்டு வரும் நார்பட்டைன்  துறவு சபையை அங்கீகரித்தவரும் இத்திருத்தந்தையே. பேரரசர் ஐந்தாம் ஹென்றியின் மரணத்திற்குப்பின், மூன்றாம் Lothair என்பவர் மன்னராக முடிசூட்டப்பட உதவியவரும் இத்திருத்தந்தையே. பிரான்ஸ் மன்னர் 6ம் லூயியுடன் உடன்பாடு கொண்டு அந்நாட்டில் திருஅவை பலப்பட வழிவகுத்தவரும் திருத்தந்தை இரண்டாம் ஹொனாரியுஸ் அவர்களே. இவர், 1130ம் ஆண்டு ஜனவரி மாதம் நோயுற்றபோது, புனித கிரகரி (San Gregorio) துறவு இல்லத்திற்கு மாற்றப்பட்டார். அடுத்த மாதம், பிப்ரவரி 13ந் தேதி இரவில் காலமானார் திருத்தந்தை இரண்டாம் ஹொனாரியுஸ். இவரின் உடல் முதலில் அத்துறவு மடத்தில் அடக்கம் செய்யப்பட்டு, சில காலத்திற்குப்பின் இலாத்ரன் பெருங்கோவிலுக்கு மாற்றப்பட்டது. இவருக்கு அடுத்த வந்த திருத்தந்தை இரண்டாம் இன்னொசென்ட் குறித்து வரும் வாரம் காண்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 December 2021, 15:15