தேடுதல்

இயேசு, நல்லாயர் இயேசு, நல்லாயர் 

விவிலியத் தேடல் - திருப்பாடல் 23 - ஆண்டவரே நம் ஆயர்

திருப்பாடல் 23, திருவிவிலியத்தில் மிகவும் பிரசித்திப் பெற்றதும் அனைவராலும் விரும்பி தியானிக்கப்படுகின்ற பாடல்களில் ஒன்றுமாக இருக்கின்றது
திருப்பாடல் - 23

செல்வா -  வத்திக்கான்

பழைய ஏற்பபாட்டின் தொடக்க நூல் தொடங்கி திருவிவிலியம் முழுவதுமே கடவுள் ஒரு நல்ல ஆயனாகவே அறியப்படுகிறார். நமது அனைவரின் வீடுகளின் வாசல் கதவுகளின் மேல் நல்லாயன் படத்தை மாட்டி வைத்திருக்கிறோம். இயேசு, ஆட்டுக்குட்டி ஒன்றை தன் கையில் வைத்திருக்கும் அப்படத்தில் “நல்ல ஆயன் நானே” என்ற இறை வசனம் எழுதப்பட்டிருக்கும். பழைய ஏற்பாட்டின் இறை வசனங்கள் எல்லாமே இறைவனை நல்ல ஆயனாகவே சித்தரிக்கின்றன. குறிப்பாக, இஸ்ரயேல் எனப்படும் யாக்கோப்பு தனது இரு மகன்களான எப்ராயிம், மனாசே ஆகியோரை ஆசிர்வதிக்கும்போது கடவுளை ஒரு ஆயனாகவே குறிப்பிட்டுப் பேசுகிறார். அவர் யோசேப்புக்கு ஆசி வழங்கிக் கூறியது:  “என் தந்தையரான ஆபிரகாமும் ஈசாக்கும் எந்தக் கடவுள் திருமுன் நடந்து வந்தனரோ அந்தக் கடவுளே இன்று வரை என் வாழ்நாள் முழுவதும் எனக்கு ஆயராக விளங்கி வருகிறார். (தொ.நூ 46:15) என்று மொழிகின்றார்.

இறைவாக்கினர்களில் பலர் கடவுளை, இஸ்ரயேல் மக்களுக்கு உணவூட்டி வழிநடத்தி அவர்களைப் பாதுகாக்கும் ஆயராகவே எடுத்துரைத்துள்ளனர். “ஆயனைப்போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார். (எசா 40:11) என எசாயா புத்தகம் 40 -வது  பிரிவு 11-வது வசனம் எடுத்துரைக்கிறது.

கடவுள் தனது அன்புக்குரிய மக்களை மேய்ப்பதற்குத் தாவீதை அவர்களின் ஆயராகத் தேர்ந்து கொள்கிறார். தாவீதும் கடவுளின் முழு பராமரிப்பில் ஒரு பொறுப்புள்ள ஆயராக இருந்து அம்மக்களைக் கண்ணும் கருதுமாகப் பாதுகாத்துக் கொள்கிறார். இந்தப் பின்னணியில் திருப்பாடல் 23 ஐ உற்றுநோக்கிச் சிந்திப்போம். இந்தத் திருப்பாடல் திருவிவிலியத்தில் மிகவும் பிரசித்திப் பெற்றதும் அனைவராலும் விரும்பி தியானிக்கப்படுகின்ற பாடல்களில் ஒன்றுமாக இருக்கின்றது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது

இஸ்ரயேல் மக்களின் பேரரசராகப் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்பு, தாவீது அரசர்,  வயல் வெளிகளில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அவ்வாடுகளை அவர் நாள்தோறும் மிகவும் பொறுப்புடன் கவனித்துக்கொண்டார். பலமுறை அவற்றை  பேராபத்துக்களிலிருந்து அவர் காப்பாற்றி இருக்கிறார். அவைகளுக்கு உணவளித்து பராமரித்திருக்கிறார். அவ்வாடுகளோடு அவர் எப்போதும் கூடவே ஒன்றாகப் பயணித்திருக்கிறார்.

இந்த அடிப்படை அனுபவங்களைப் பெற்றவராக அவர் இஸ்ரயேல் மக்களின் ஆயராக அல்லது தலைவராக அருள்பொழிவு செய்யப்பட்டபோது ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் தனது மக்களை இறைத் துணையில் சிறப்பாக வழி நடத்திச் சென்றார் என்பதை நாம் இங்குப் புரிந்து கொள்ளலாம். எனவேதான், இறைவனை ஆயராகவும் இஸ்ரயேல் மக்களை ஆடுகளாகவும் உருவகப்படுத்தி, தாவீது இந்தப் பாடலை இயற்றி இருப்பதாக விவிலிய அறிஞர்கள் கருதுகிறார்கள்.

இந்தத் திருப்பாடல் நான்கு முக்கிய கருத்துக்களை உள்ளடக்கி இருக்கின்றது.

முதலாவதாக, கடவுள் நமது தேவைகளை நிறைவு செய்பவர்

கடவுளே என் தலைவராக இருக்கின்றபோது நான் எதைக் குறித்தும் அஞ்சவும் கவலைப்படவும் தேவை இல்லை. எல்லாவற்றையும் அவரே பார்த்துக்கொள்வார். அவரது அளவு கடந்த அன்பும் பராமரிப்பும் எனக்கு எப்போதும் துணை இருக்கும்; அவரில் நான் இளைப்பாறுவேன் என்பது கடவுளின் மீதான தாவீதின் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது. “ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்” என்ற வார்த்தைகள் இதனை வலியுறுத்துகின்றன. இதனையே நமதாண்டவர் இயேசுவின் வாழ்விலும் காண்கின்றோம். அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். (மாற் 6:34) என்று  மாற்கு நற்செய்தி 6-வது பிரிவு 34 வது இறைவசனத்தில் வாசிக்கிறோம்.

இரண்டாவதாக, கடவுள் நமது ஆன்மிக வாழ்விற்க்கு ஊட்டம் அளிப்பவர்

மனித வாழ்வு மனம், அறிவு, தேவைகள் மற்றும் உணர்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டி எழுப்பப்பட்டவை. ஆகவே, மனித வாழ்வில் துன்பங்களும் துயரங்களும் தவிர்க்க முடியாதவை. சிலுவைகள் இல்லாமல் சிம்மாசனம் இல்லை என்பது மாபெரும் உண்மை. இவற்றை நாம் கடந்து செல்ல வேண்டும் என்றால் இறைவனின் உதவி அவசியம் தேவை. எனவே, நமது ஆன்மிக வாழ்வில் தெளிவும் முதிர்ச்சியும் கடவுளின் அருளால் மட்டுமே நாம் பெற்றிட முடியும். "பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்." என்ற இறை வசனம் இதனை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. மேலும் “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.  ஆகவே, என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” (மத் 11:29-30) என்ற ஆண்டவர் இயேசுவின் அற்புத வரிகளும் இதற்கு உரம் சேர்க்கின்றன.

மூன்றாவதாக, கடவுள் நம்மை பாதுகாக்கின்றார்

பொதுவாக, ஆடுகள் வலு குறைந்தவை. பயந்த சுபாவம் கொண்டவை. எதிரிகள் அவைகளைச் சுலபமாக உணவாக்கிட முடியும். ஆகவே, அவற்றிக்கு ஆயனின் உதவி அவசியம் தேவை. இவை அப்படியே மனித வாழ்விற்கும் கச்சிதமாய்ப் பொருந்தும்.                          எனவேதான், தாவீது அரசர் தனக்கான பாதுகாப்பை கடவுளிடம் மட்டுமே தேடுகின்றார். “சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்” என்ற வரிகள் கடவுளின் பராமரிப்பை நமக்குத் தெரிவிக்கின்றன.

நான்காவதாக, கடவுள் நம்மை ஆசிர்வதிக்கின்றார்

சுமக்கத் தெரிந்தவர்களே சுகம் பெறுகிறார்கள். ஆகவே, வாழ்வில் துன்ப துயரங்களையும் வேதனை சோதனைகளையும் அமைந்த மனதுடன் ஏற்றுக் கொள்பவர்களே இறுதியில் இறைவனின் இரக்கத்தையும் இளைப்பாறுதலையும் பெற்றுக் கொள்கின்றனர். இதற்குப்  பழைய ஏற்பாட்டில் யோபுவும் புதிய ஏற்பாட்டில் ஏழை லாசரும் மிகப் பெரும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர். இதனையே தாவீது அரசரும் "உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்” என்று கூறி இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார்.

இன்றைய நிலையில் மக்களை ஆளும் தலைவர்களைப் பார்த்தோம் என்றால் அவர்களின் கொடிய நிலைகள் நம் மனங்களைப் பதை பாதைகச் செய்கின்றன. பெரும்பாலான தலைவைர்கள் அக்கரையற்றவர்களாக, ஆணவம் மிகுந்தவர்களாக, பொறுப்பற்றவர்களாக, போக்கிரித்தனம் கொண்டவர்களாக, தங்களின் அற்ப சுகங்களுக்காக அப்பாவி மக்களை பலி கொடுப்பவர்களாக வலம் வருவதைப் பார்க்கின்றோம். நமது ஒப்பற்ற அரசரான ஆண்டவர் இயேசு பயிரைக் காக்கும் வேலியாகத் திகழ்ந்தார். ஆனால், நம்மை ஆளும் இன்றையத் தலைவர்களோ பயிர்களை மேயும் வேலிகளாக வாழ்கின்றனர். ஆயர்களாலேயே ஆடுகள் பலிகொடுக்கப்படும் அவல நிலையைக் காண்கின்றோம். மக்களின் பாரங்களைச் சுமக்க வேண்டியவர்கள் அவர்களின் தோள்களின் மேல் சுமக்க முடியா பாரங்களைச் சுமத்துகிறார்கள்.  

ஒரு நல்ல மன்னருக்கு இருக்க வேண்டிய நான்கு நற்குணங்களை திருவள்ளுவர் தனது 390 -வது குறளில் பட்டியலிடுகின்றார்.

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்

உடையானாம் வேந்தர்க் கொளி. (குறள் 390)

தேவைப்படுவோருக்குத் தேவையான நேரத்தில் தேவையான அளவிற்கு உதவி செய்வது, எதிரிகளையும் மதித்துப் போற்றுவது, நீதி வழுவாமல் ஆட்சி செய்வது, தளர்ந்த குடி மக்களைக் காப்பாற்றுவது ஆகிய நான்கு நற்பண்புகளைக் கொண்ட மன்னரே மன்னர்களுக்கெல்லாம் ஒளி தரும் விளக்கைப் போன்றவன் என்கிறார் வள்ளுவர்.

நமது ஆண்டவர் இயேசு தன்னை ஒரு நல்ல ஆயராக வெளிப்படுத்தினார். தனது ஆடுகளான மக்களை அறிந்துகொண்ட அவர், அவ்வாடுகளாகிய நாம் நிலை வாழ்வு  பெறும்பொருட்டு, அதனையும் நிறைவாகப் பெறும்பொருட்டு, தனது இன்னுயிரையும் ஈந்தார்.  "நான், ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன். நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்” (யோவா 10: 10-11) என்ற இயேசுவின் வார்த்தைகள் நம்மில் வாழ்வாகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 December 2021, 14:39