தேடுதல்

புனித பிரான்சிஸ் சவேரியார் புனித பிரான்சிஸ் சவேரியார்  

விண்மீன் காட்டும் பாதையில்.... ஆண்டவர் என்னைக் காக்கின்றார்

எவற்றை எல்லாம் சொல்லக் கட்டளை இடுகின்றேனோ அவற்றைச் சொல். அவர்கள்முன் அஞ்சாதே. ஏனெனில், உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கின்றேன் (எரே.1:7-8)

மேரி தெரேசா: வத்திக்கான்

எனக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்; மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்.” நான், “என் தலைவராகிய ஆண்டவரே, எனக்குப் பேசத் தெரியாதே, சிறுபிள்ளைதானே” என்றேன். ஆண்டவர் என்னிடம் கூறியது: “‘சிறுபிள்ளை நான்’ என்று சொல்லாதே; யாரிடமெல்லாம் உன்னை அனுப்புகின்றேனோ அவர்களிடம் செல்; எவற்றை எல்லாம் சொல்லக் கட்டளை இடுகின்றேனோ அவற்றைச் சொல். அவர்கள்முன் அஞ்சாதே. ஏனெனில், உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கின்றேன் என்கிறார் ஆண்டவர்.” (எரே.1:4-8).

அந்த ஊரில் அற்புதமாக மறைப்பணியாற்றிவந்த அருள்பணியாளர் ஒருவர் மீது பொறாமைகொண்ட ஒரு கூட்டம், அவர் மீது அநியாயமாய் பழிசுமத்தியது. அக்கூட்டத்தின் புகார்களை நம்பிய நீதிமன்றமும் அவருக்கு மரண தண்டனை விதித்தது. அத்தண்டனை நிறைவேற்றப்படும் நாளில், அவர் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது சிறை அதிகாரிகள் அவரிடம், நீ கடைசியாக சொல்ல விரும்புவது ஏதாவது இருந்தால் சொல் என்றார்கள். அந்த அருள்பணியாளரோ, ஆண்டவர் என்னைக் காப்பார், ஆண்டவர் என்னைக் காப்பார் என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்ட எல்லாருக்கும் ஒரே வியப்பு. பின்னர் முகம் கறுப்புத் துணியால் மூடப்பட்டு, தலைவழியாக கழுத்தில் மரண தண்டனை கயிற்றை மாட்டினார்கள். ஆனால் அந்த அருள்பணியாளர் இறக்கவில்லை. ஏனெனில் அந்தக் கயிற்றில் முடிச்சு இருந்தது. அன்று வேடிக்கை பார்க்கவந்த கூட்டமும், இவர் உண்மையிலேயே குற்றமற்றவர் என்பதால்தான் இவர் நம்பியிருந்த ஆண்டவர் இவரைக் காப்பாற்றினார் என்று பேசிக்கொண்டது.

ஆம். தம்மை நம்புவோரை ஆண்டவர் கைவிடுவதே இல்லை. எனக்குப் பேசத் தெரியாதே, சிறுபிள்ளைதானே என்று, ஆண்டவரின் அழைப்புக்கு மறுப்பு தெரிவித்த இறைவாக்கினர் எரேமியாவுக்கு, எவற்றை எல்லாம் சொல்லக் கட்டளை இடுகின்றேனோ அவற்றைச் சொல். அவர்கள்முன் அஞ்சாதே. ஏனெனில், உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கின்றேன் (எரே.1:7-8) என்று ஆண்டவர் கூறிய வார்த்தைகள், இந்த அருள்பணியாளர் வாழ்விலும் உண்மையாயின. இந்தியாவிலும் ஜப்பானிலும் பத்து ஆண்டுகள் நற்செய்திக்காக அயராது உழைத்த புனித பிரான்சிஸ் சவேரியாரும் ஆண்டவரின் உடனிருப்பை முழுமையாக நம்பி நற்செய்திப் பணியாற்றினார். கோவாவில் புனித சவேரியார் திருத்தலத்தில் (Basilica of Bom Jesus) வைக்கப்பட்டுள்ள அவரது அழியாத உடல், நம்மையும் ஆண்டவரை நம்பி வாழ ஊக்கப்படுத்துகிறது. டிசம்பர் 3, இவ்வெள்ளி புனித பிரான்சிஸ் சவேரியார் திருநாள். மாற்றுத்திறனாளிகள் உலக நாளும் கடைப்பிடிக்கப்படும் டிசம்பர் 3, இவ்வெள்ளியன்று, அம்மக்கள் மாண்புடன் வாழ புனித சவேரியாரிடம் இறைஞ்சுவோம். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 December 2021, 15:16