தேடுதல்

கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் தீவில் அமைந்துள்ள புலம்பெயர்ந்தோர் முகாம் கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் தீவில் அமைந்துள்ள புலம்பெயர்ந்தோர் முகாம் 

லெஸ்போஸ் தீவிலிருந்து, 46 புலம்பெயர்ந்தோர் இத்தாலியில்...

கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் தீவிலிருந்து, இத்தாலி நாட்டை அடைந்துள்ள 46 புலம்பெயர்ந்தோரை, இந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியமர்த்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள சாந்த் எஜிதியோ அமைப்பு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நவம்பர் 30, இச்செவ்வாயன்று, கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் (Lesbos) தீவிலிருந்து, இத்தாலி நாட்டை அடைந்துள்ள 46 புலம்பெயர்ந்தோரை, இந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியமர்த்தும் முயற்சிகளில், சாந்த் எஜிதியோ (Sant’Egidio) பிறரன்பு அமைப்பு ஈடுபட்டுள்ளது.

டிசம்பர் 2, இவ்வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சைப்பிரசு நாட்டிலும், கிரேக்க நாட்டிலும் திருத்தூதுப்பயணத்தை துவங்கியுள்ள இவ்வேளையில், இப்பயணத்தின் ஓரு முக்கிய நிகழ்வாக, அவர் செல்லும் லெஸ்போஸ் தீவிலிருந்து புலம்பெயர்ந்தோர் ஏற்கனவே இத்தாலி நாட்டில் குடியமர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

சாந்த் எஜிதியோ அமைப்பு, இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளில் பணியாற்றும் ஏனைய பிறரன்பு அமைப்புக்களோடு இணைந்து மேற்கொண்டுள்ள இம்முயற்சியின் வழியே, இத்தாலி வந்தடைந்துள்ள புலம்பெயர்ந்தோரில், பெற்றோர் இன்றி வருகை தந்துள்ள மூன்று வளர் இளம் பருவத்தினரும் உள்ளனர்.

இந்த மூன்று வளர் இளம் பருவத்தினரையும், பள்ளிகளில் பதிவுசெய்யும் முயற்சிகள் துவங்கியுள்ள இவ்வேளையில், ஏனையோருக்கு இத்தாலி மொழியை கற்றுக்கொள்ளுதல், ஒரு சில தொழில் பயிற்சிகள் வழங்குதல் ஆகிய முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் லெஸ்போஸ் தீவுக்கு முதல்முறை சென்ற வேளையில், அங்கிருந்து திரும்பும்போது, சிரியா நாட்டைச் சேர்ந்த 12 பேர், அவருடன், இத்தாலிக்கு வந்து சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 December 2021, 14:36