பால்டிமோர் நகரில் அமெரிக்க ஆயர்கள் மேற்கொண்ட ஆண்டு கூட்டம் பால்டிமோர் நகரில் அமெரிக்க ஆயர்கள் மேற்கொண்ட ஆண்டு கூட்டம் 

திருநற்கருணை பக்தியைக் குறித்து ஆயர்களின் ஏடு

கோவிட் பெருந்தொற்று உருவாக்கிய நெருக்கடியின் விளைவாக, திருப்பலிகளில் மக்களின் பங்கேற்பு குறைந்துள்ளதை, மீண்டும் இயல்பு நிலைக்குக் கொணர்வதற்கு உதவியாக, அமெரிக்க ஆயர்கள் வெளியிட்ட திருநற்கருணை ஏடு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருநற்கருணையில் பிரசன்னமாகியிருக்கும் கிறிஸ்துவின் மீது அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்கள் தங்கள் பக்தியை மீண்டும் புதுப்பிக்கும் நோக்கத்துடன், அந்நாட்டு ஆயர்கள், "திருஅவையின் வாழ்வில் திருநற்கருணையின் மறையுண்மை" என்ற ஓர் ஏட்டினை வெளியிட்டுள்ளனர்.

நவம்பர் 15, திங்கள் முதல், 18, இவ்வியாழன் முடிய, அமெரிக்க ஐக்கிய நாட்டின் பால்டிமோர் நகரில் ஆயர்கள் மேற்கொண்ட ஆண்டு கூட்டத்தில் வெளியிடப்பட்ட இந்த ஏடு, திருநற்கருணையில் தன்னையே வழங்கும் இயேசு, மற்றும் அந்தக் கொடைக்கு நமது பதிலிறுப்பு என்ற இரு பகுதிகளை உள்ளடக்கியது என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் அறிக்கை கூறுகிறது.

கோவிட் பெருந்தொற்று உருவாக்கிய நெருக்கடியின் விளைவாக, திருப்பலிகளில் மக்களின் பங்கேற்பு குறைந்துள்ளதை, மீண்டும் இயல்பு நிலைக்குக் கொணர்வதற்கு, இந்த ஏடு உதவியாக இருக்கும் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் ஹோஸே கோமஸ் அவர்கள் கூறினார்.

மேலும், 2024ம் ஆண்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டின் இந்தியானோப்பொலிஸ் நகரில் திட்டமிடப்பட்டுள்ள தேசிய திருநற்கருணை மாநாட்டிற்கு, இந்த ஏடு, ஒரு தயாரிப்பாக அமையும் என்றும் பேராயர் கோமஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

திருநற்கருணையில் உள்ள கிறிஸ்துவின் பிரசன்னத்தைக் குறித்து மக்களிடையே எழும் பல்வேறு ஐயங்களுக்கு பதிலளிக்கும் வண்ணம் இந்த ஏடு உருவாக்கப்பட்டுள்ளது என்று பேரவையின் அறிக்கை கூறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 November 2021, 14:42