திருத்தந்தை இரண்டாம் கலிஸ்துஸ் திருத்தந்தை இரண்டாம் கலிஸ்துஸ் 

திருத்தந்தையர் வரலாறு – திருத்தந்தை இரண்டாம் கலிஸ்துஸ்

திருத்தந்தை இரண்டாம் பாஸ்கலை கட்டாயப்படுத்தி, ஒப்பந்தத்தில் பேரரசர் கையெழுத்திட வைத்தபோது, அந்த ஒப்பந்தத்திற்கு எதிராக பிரான்சில் தலைமை தாங்கி போராடியவர் பேராயர் Guido

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை இரண்டாம் பாஸ்காலுக்குப்பின் இரண்டாம் ஜெலாசியுஸ் என்பவர் 1118ம்ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டதும், உடனே பேரரசர் 5ம் ஹென்றிக்கு ஆதரவான இத்தாலிய துருப்புகள் அவரை சிறைபிடித்ததும், மக்களால் விடுவிக்கப்பட்டு இத்தாலியின் கயெத்தா(Gaeta)வுக்கு தப்பி ஓடியதும், அங்குதான் திருத்தந்தையாக பொறுப்பேற்றதும் கண்டோம். இதற்கிடையில், பேரரசர்  ஐந்தாம் ஹென்றி,  எட்டாம் கிறகரி என்ற பெயருடன் ஒருவரை திருத்தந்தையாக நியமித்ததும், 1119 ஜனவரியில் அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட ஓராண்டிலேயே திருத்தந்தை இரண்டாம் ஜெலாசியுஸ் அவர்கள், பிரான்சின் Cluny எனுமிடத்தின் துறவுமடத்தில் உயிரிழந்ததும் நாம் கடந்த வாரம் இதே நிகழ்ச்சியில் அறிந்தவை. இப்போது, அதற்கு அடுத்துவந்த திருத்தந்தை இரண்டாம் கலிஸ்துஸ் குறித்து நோக்குவோம்.

பிரான்சின் Clunyயில் திருத்தந்தை இரண்டாம் ஜெலாசியுஸ் உயிரிழந்தபோது அங்கிருந்த கர்தினால்கள் நான்கு நாட்களுக்குப்பின் ஒத்த மனதாக பிப்ரவரி முதல் தேதியன்று தென்பிரான்சின் Vienne ஆயரை திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தனர். இந்த ஆயர் குய்தோ(Guido) அதே மாதம் 9ந்தேதி Vienneல் வைத்தே திருத்தந்தையாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இவ்விவரம் உரோம் நகரில் கூடியிருந்த கர்தினால்களுக்குத் தெரிவிக்கப்பட, அவர்களும் மார்ச் முதல்தேதி இத்தேர்தலையும், பதவியேற்பையும் ஒத்தமனதாக அங்கீகரித்தனர்.

திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட Vienne ன் பேராயர் குய்தோ அவர்கள், புகழ்வாய்ந்த பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் பெற்றோர் வழியாக, இவருக்கு ஐரோப்பாவின் அரச பரம்பரையிலும் உறவினர்கள் இருந்தனர். இவரின் சகோதரர் Hughம், பிரான்சின் Besançonன் பேராயராக இருந்தார். புதிய திருத்தந்தை பேராயராக இருந்தபோது, திருத்தந்தை இரண்டாம் Paschal அவர்களால் பிரான்சிற்கான திருப்பீடத் தூதுவராகவும் நியமிக்கப்பட்டார். பேரரசர் ஐந்தாம் ஹென்றி, எவ்வாறு திருத்தந்தை இரண்டாம் பாஸ்கலை கட்டாயப்படுத்தி, கொடுமைப்படுத்தி, பல உரிமைகளை தக்கவைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தார் என்பதை இரு வாரங்களுக்கு முன்னால் இத்தொடரில் நாம் கண்டோம். அந்த சமயத்தில் அந்த ஒப்பந்தத்திற்கு எதிராக பிரான்சில் தலைமை தாங்கி போராட்டங்களை நடத்தியவர் பேராயர் Guido. பிரான்சில் ஆயர் பேரவையைக் கூட்டி, பேரரசரை திருஅவையிலிருந்து விலக்கி வைப்பதாக அறிவித்து, அவ்வறிவிப்பை உரோம் நகருக்கு அனுப்பி வைத்ததும் பேராயர் Guidoவேயாகும்.    

பேரரசரை பேராயர் Guido இவ்வளவு தீவிரமாக எதிர்த்தது குறித்து, திருத்தந்தை இரண்டாம் பாஸ்கலுக்கு அவ்வளவு உடன்பாடில்லை, எனினும், பேராயர் Guidoவை கர்தினாலாக உயர்த்தினார் திருத்தந்தை. இந்த Vienne பேராயர், கர்தினால் குய்தோதான், 1119ம் ஆண்டு பிப்ரவரி 9ந்தேதி இரண்டாம் கலிஸ்துஸ் என்ற பெயருடன் திருத்தந்தையாக பிரான்சிலேயே பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் பதவிக்கு வந்தவுடன் முதலில் செய்ய விரும்பியது, திருஅவையின் ஆயர் நியமனங்களில் மன்னர்களின் தலையீட்டை விலக்குவதாகும். பேரரசருடன் திருத்தந்தை ஏழாம் ஹென்றி ஏற்படுத்திய ஒப்பந்தத்தின் வழி, திருஅவை பெற்ற உரிமைகள் திருத்தந்தை இரண்டாம் பாஸ்கலின் காலத்தில் பலவந்தமாக மீண்டும் பேரரசரால் பறிக்கப்பட்டதை திரும்ப பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார் புதிய திருத்தந்தை இரண்டாம் கலிஸ்துஸ். முதலில் பேரரசர் ஐந்தாம் ஹென்றியுடன் சமாதான உடன்படிக்கையை மேற்கொள்ள முயன்றார்.

எதிர்திருத்தந்தை எட்டாம் கிறகரிக்கு, தான் அளித்து வந்த ஆதரவை விலக்கி வந்ததால், பேரரசருக்கும் திருப்பீடத்துக்கும் இடையே அமைதியான உடன்பாடு ஏற்படும் என்ற நம்பிக்கை பிறந்தது. இக்காலக்கட்டத்தில், அதாவது, 1119ம் ஆண்டு ஜூன் மாதம் 8ந்தேதி பிரான்சின் Toulouse எனுமிடத்திலும், அக்டோபரில் Reimsலும் ஆயர் பேரவைகளைக் கூட்டினார் பாப்பிறை இரண்டாம் கலிஸ்துஸ். Reimsல் கூடிய கூட்டத்தில் 400க்கும் மேற்ப்பட்ட ஆயர்கள் மற்றும் துறவு இல்ல அதிபர்களுடன் பிரான்ஸ் மன்னர் நான்காம் லூயியும் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில்தான் திருத்தந்தையும் பேரரசர் 5ம் ஹென்றியும் Mousson எனுமிடத்தில் தனியாகச் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்துவது என முடிவாகியது. இரு தரப்பிலும் ஒப்புதல் பெறப்பெற்று, திருத்தந்தை இரண்டாம் கலிஸ்துஸ் அவர்கள், Mousson நோக்கி பயணமானார். இதற்கிடையில்,  Mousson வந்த பேரரசர்  5ம் ஹென்றி, ஏற்கனவே ஏற்றுக்கொண்டபடி தனியாக வரவில்லை. 30 ஆயிரம் படைவீரர்களுடன் அங்கு வந்து முகாமிட்டிருந்தார்.   ஏற்கனவே,  திருத்தந்தை இரண்டாம் பாஸ்கலை சிறைப்பிடித்து அநியாய ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிய இந்த பேரரசரின் இச்செயல் கண்டு அஞ்சிய திருத்தந்தை, Mousson  செல்லாமல் பாதிவழியிலேயே Reims திரும்பிவிட்டார். இங்கிருந்த ஆயர் பேரவையின் முன்னிலையில், பேரரசரும் அவரால் நியமிக்கப்பட்டிருந்த எதிர் திருத்தந்தை எட்டாம் கிறகரியும் திருஅவையிலிருந்து விலக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

பழங்காலத்திலிருந்தே உரோமின் ஆயர் என்பவர் தாம் திருத்தந்தையாக இருப்பது வழக்கம். ஆனால் இங்கோ, திருத்தந்தை ஓராண்டிற்கு மேலாக பிரான்சிலேயே இருந்து வந்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்டதும், பதவியேற்றதும், திருஅவையை வழிநடத்தியதும் பிரான்சிலிருந்துதான் என்றாகிவிட்டது. காரணம் என்னவெனில், பேரரசரை திருத்தந்தையர்கள் எதிர்த்து வந்ததால், உரோம் நகருக்குள் பேரரசரின் படைகளைக் தாண்டி நுழைய முடியா நிலை. மற்றும், பேரரசரால் நியமிக்கப்பட்ட ஒருவர், திருத்தந்தை என்ற பெயரில் உரோம் புனித பேதுரு பெருங்கோவிலை ஆக்ரமித்திருந்தார். இத்தகைய ஒரு சூழலில், 1120ம் ஆண்டு இத்தாலிக்குள் முதன் முறையாக காலடி எடுத்துவைத்தார் திருத்தந்தை இரண்டாம் கலிஸ்துஸ். இவர் இத்தாலியின் லொம்பார்தி, மற்றும் டஸ்கனி மாவட்டங்கள் வழியாக வந்தபோது மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர். இத்தாலிய மக்களின் பேராதரவு புதிய திருத்தந்தைக்கு இருப்பதைப் பார்த்த எதிர்திருத்தந்தை எட்டாம் கிறகரி, உரோம் நகரிலிருந்து தப்பியோடி sutri எனுமிடத்தில் அடைக்கலம் புகுந்தார். மக்கள் அவரை விடவில்லை. அவரை இழுத்து வந்து அவமானப்படுத்த முயன்றனர். ஆனால், திருத்தந்தை இரண்டாம் கலிஸ்துஸ் அவர்கள், மக்களின் கைகளில் இருந்து அவரை விடுவித்து ஒரு துறவு இல்லத்தில் வைத்தார்.

1120ம் ஆண்டு, ஜூன் மாதம் 3ந்தேதி உரோம் நகருக்குள் நுழைந்த திருத்தந்தை இரண்டாம் கலிஸ்துஸ் அவர்கள், மீண்டும் பேரரசருடன் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்த விரும்பி, மூன்று கர்தினால்கள் கொண்ட குழுவை ஜெர்மனிக்கு அனுப்பினார். ஓர் ஒப்பந்தம் 1122ம் ஆண்டு செப்டம்பர் 23ந் தேதி இருதரப்பினரிடையே ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தம் வழி, ஆயர் நியமனங்களில் பேரரசரின் தலையீடு குறைக்கப்பட்டது. அதாவது, ஜெர்மனியில் ஆயர் நியமனங்களில் தன் விருப்பம்தான் செயல்பட வேண்டும் என்ற பேரரசரின் விருப்பம் மட்டும் தக்க வைக்கப்பட்டது. ஏனைய இடங்களில் திருத்தந்தையின் விருப்பமே முதன்மை பெற்றதாக மாறியது. ஓரளவு அமைதி திரும்பிய சூழலில், திருத்தந்தை, உரோம் நகரையும் புனித பேதுரு பெருங்கோவிலையும் அழகுபடுத்தும் பணியில் தன் முழுக் கவனத்தையும் செலுத்தினார். 1124ம் ஆண்டு டிசம்பர்மாதம் 13ந் தேதி காலமானார் திருத்தந்தை இரண்டாம் கலிஸ்துஸ்.

தன் திருத்தந்தை பொறுப்பின் 5 ஆண்டுகளும், பல்வேறு வழிகளில் போராடி திருஅவையின் சில உரிமைகளைப் பெற்றுத்தந்த, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த திருத்தந்தை இரண்டாம் கலிஸ்துஸுக்குப்பின் பொறுப்பேற்றார் திருஅவையின் 163வது திருத்தந்தையாகிய இரண்டாம் ஹொனாரியுஸ்(Honorius). இவர் குறித்து வரும் வாரம் காண்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 November 2021, 14:10