பஹ்ரைனில், அரேபியாவின் நம்தன்னை பேராலயத்தின் உருவப்படம் திறப்பு விழா - கோப்புப் படம், 2018 பஹ்ரைனில், அரேபியாவின் நம்தன்னை பேராலயத்தின் உருவப்படம் திறப்பு விழா - கோப்புப் படம், 2018 

பஹ்ரைனில், அரேபியாவின் நமதன்னை பேராலயம் அர்ச்சிப்பு

பாரசீக வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில், அரேபியாவின் நம்தன்னை என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள மரியன்னையின் பேராலயத்தை, டிசம்பர் மாதம் 10ம் தேதி, கர்தினால் தாக்லே அவர்கள், அர்ச்சிக்கவுள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், வருகிற டிசம்பர் மாதம் 10ம் தேதி, பாரசீக வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில், அரேபியாவின் நம்தன்னை என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள மரியன்னையின் பேராலயம் ஒன்றை அர்ச்சிக்கவுள்ளார் என்று CNA கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

இந்தப் பேராலயம் கட்டுவதற்குத் தேவையான நிலத்தை, 2002ம் ஆண்டு நன்கொடையாக வழங்கிய பஹ்ரைன் மன்னர் Hamad bin Isa Al Khalifa அவர்கள், டிசம்பர் 9ம் தேதி, இந்தப் பேராலயம் அமைந்துள்ள வளாகத்தையும், பேராலயக் கட்டடத்தையும் திறந்துவைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், நவம்பர் 25, கடந்த வியாழனன்று, பஹ்ரைன் அரசரின் தூதரக விவகாரங்களின் ஆலோசகர் Sheikh Khalid bin Ahmed bin Mohammed அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து, அந்நாட்டில், திருத்தந்தை திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளுமாறு, மன்னர் Hamad Khalifa அவர்கள் அனுப்பிய அதிகாரப்பூர்வ அழைப்பை, திருத்தந்தையிடம் சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே 2014ம் ஆண்டு மன்னர் Hamad Khalifa அவர்கள் திருத்தந்தையைச் சந்தித்தபோது பகிர்ந்துகொள்ளப்பட்ட நினைவுப் பரிசுகளில், அரேபியாவின் நம்தன்னை என்ற பெயரில் கட்டப்பட்டு வந்த மரியன்னை பேராலயத்தின் உருப்படிவம் ஒன்றை திருத்தந்தைக்கு வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

95,000 சதுர அடி நிலப்பரப்பு கொண்ட இந்த வளாகத்தின் நடுவே, ஒரு பேழை வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பேராலயத்தில், 2,300 பேர் அமரமுடியும் என்று கூறப்படுகிறது.

1948ம் ஆண்டு அரேபியாவின் நம்தன்னை என்ற பெயரில் குவைத்தில் ஒரு சிற்றாலயம் உருவாக்கப்பட்ட வேளையில், மரியன்னைக்கு வழங்கப்பட்ட அந்த பெயரை அங்கீகரித்த திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், அரேபியாவின் நம்தன்னையை, குவைத் பகுதியின் பாதுகாவலராக அறிவித்தார். அதைத் தொடர்ந்து, 2011ம் ஆண்டு, அரேபியாவின் நம்தன்னை, குவைத் மற்றும் அரேபியாவிற்கு பாதுகாவலர் என்று வத்திக்கான் அறிவித்தது.

80,000த்திற்கும் அதிகமான கத்தோலிக்கர்கள் வாழும் பஹ்ரைன் நாட்டில், பெரும்பான்மையானோர், ஆசியாவிலிருந்து, குறிப்பாக, பிலிப்பீன்ஸ் நாட்டிலிருந்து அங்கு பணியாற்றச் சென்றிருக்கும் கத்தோலிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 November 2021, 14:41