திருத்தந்தை பிரான்சிஸ் , மொரோக்கோவில், துறவி Schumacher அவர்களைச் சந்தித்து, அவரது கையை முத்தமிட்டார் - கோப்புப்படம் 2019 திருத்தந்தை பிரான்சிஸ் , மொரோக்கோவில், துறவி Schumacher அவர்களைச் சந்தித்து, அவரது கையை முத்தமிட்டார் - கோப்புப்படம் 2019 

படுகொலையில் தப்பிப்பிழைத்தவர்களில் கடைசி துறவி மரணம்

அல்ஜீரியாவில், ஏழு துறவிகள், இஸ்லாம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இரவில், துறவி Schumacher அவர்கள், அச்சபை இல்லத்திற்கு அருகிலிருந்த கட்டடத்தில், சுமைதூக்கும் வேலை செய்துகொண்டிருந்தார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

1996ம் ஆண்டில் அல்ஜீரியா நாட்டில், டிராபிஸ்ட் ஆழ்நிலை துறவு சபை இல்லத்தில் இடம்பெற்ற கடுமையான படுகொலையில் தப்பிப் பிழைத்து, உயிர்வாழ்ந்தவர்களில் கடைசி துறவியான Jean-Pierre Schumacher அவர்கள், தனது 97வது வயதில், நவம்பர் 21, இஞ்ஞாயிறன்று இறைபதம் சேர்ந்தார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டிராபிஸ்ட் சபை துறவி Schumacher அவர்கள், மொரோக்கா நாட்டின் மையப் பகுதியிலுள்ள, Atlas நமதன்னை டிராபிஸ்ட் துறவியர் இல்லத்தில், அமைதியான மரணத்தைத் தழுவினார் என்று, Rabat தலத்திருஅவை அறிவித்தது.

அல்ஜீரியாவில் பத்தாண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது, 1996ம் ஆண்டு  மார்ச் மாதம் 27ம் தேதி இரவில், Tibhirine டிராபிஸ்ட் சபைத் துறவியரின் இல்லத்தில், அவ்வில்லத் தலைவர் Christian de Chergé அவர்கள் உட்பட, ஏழு துறவிகள், இஸ்லாம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்டனர். அக்கடத்தல் நடந்து இரு மாதங்கள் சென்று, Tibhirine இல்லத்திற்கு அருகில், அந்த ஏழு பேரின் தலைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்படவேயில்லை.

அக்கடத்தலில், துறவியர் Jean-Pierre Schumacher அவர்களும், Amédée அவர்களும் தப்பிப் பிழைத்தனர். Amédée அவர்கள் 2008ம் ஆண்டில் இறைபதம் சேர்ந்தார். அக்கடத்தல் இடம்பெற்ற இரவுநேரத்தில், துறவி Schumacher அவர்கள், அவ்வில்லத்திற்கு அருகிலிருந்த கட்டடத்தில், சுமைதூக்கும் வேலை செய்துகொண்டிருந்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2019ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி, மொரோக்காவில் துறவி Schumacher அவர்களைச் சந்தித்து, அவரது கையை முத்தமிட்டார்.

அல்ஜீரியாவில் முப்பது ஆண்டுகள்

1924ம் ஆண்டில் பிரான்சின் Lorraineல் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த துறவி Schumacher அவர்கள், 1953ம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டு, 1957ம் ஆண்டில் Brittanyயில், Notre-Dame de Timadeuc துறவு இல்லத்தில் சேர்ந்தார். அப்போதைய அல்ஜீரிய பேராயரின் வேண்டுகோளின்பேரில், இவர், மற்ற மூன்று துறவியரோடு அல்ஜீரியாவுக்கு வந்து, ஏழைகள் மத்தியில் ஏழையாக வாழ்ந்தார். 

அல்ஜீரியாவில் முப்பது ஆண்டுகள் பணியாற்றிய துறவி Schumacher அவர்கள், 1996ம் ஆண்டில் இடம்பெற்ற படுகொலைகளுக்குப்பின், மொரோக்கோ நாட்டின் Atlasலுள்ள டிராபிஸ்ட் துறவியர் இல்லத்தில், 2000மாம் ஆண்டுமுதல், 8 துறவியரோடு வாழ்ந்துவந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 November 2021, 14:55