டெல்லி பேராயர் Anil Joseph Couto டெல்லி பேராயர் Anil Joseph Couto 

ஒருவர் மற்றவரின் மத நம்பிக்கைகளை மதிக்கும் பண்பு பரவிட...

இந்தியாவில் திருத்தந்தையின் திருத்தூதுப்பயணம் விரைவில் இடம்பெறவேண்டும் என அழைப்புவிடுக்கின்றது, டெல்லியின் பல்மதக் கருத்தரங்கு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப்பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது குறித்தும், அத்தகைய வாய்ப்பு, பல்வேறு மதங்களுக்கிடையே இணக்கத்தையும் அமைதியையும் உருவாக்கும் எனவும் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர், பல்வேறு மதங்களின் தலைவர்கள்.

பல்வேறு மதங்களின் தலைவர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், பொதுநிலையினர், பத்திரிகைத் துறையினர் என எண்ணற்றோர், 'எதிர்கொண்டு சந்தித்தல்' என்ற தலைப்பில் இந்திய தலைநகர் புது டெல்லியில் கலந்துகொண்ட கருத்தரங்கின்போது, திருத்தந்தையின் திருத்தூதுப்பயணத்திற்கான தயாரிப்புகளும் அதிகாரப்பூர்வமாக துவக்கப்பட்டன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் அக்டோபர் மாதம் 30ம் தேதி வத்திக்கானில் சந்தித்ததும், இந்தியாவிற்கு வர அழைப்புவிடப்பட்டதும், தற்போது புது டெல்லியில் அனைத்து மத கருத்தரங்கு இடம்பெறுவதும், மதங்களிடையே நல்லிணக்கத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் உரமூட்டுவதாக இருக்கும் என, நவம்பர் 22ம் தேதி இடம்பெற்ற இக்கருத்தரங்கில் துவக்க உரையாற்றினார், டெல்லி பேராயர் Anil Joseph Couto.

பல்வேறு மதங்கள், இனங்கள், பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள், மற்றும் கலாச்சாரங்களின் பன்முகத்தன்மையையும், பன்மைக்கோட்பாட்டையும் தன்னுள்ளே கொண்டுள்ள இந்தியா, இத்தகைய தனித்தன்மையை போற்றி பாதுகாக்கவேண்டிய கடமையைக் கொண்டுள்ளது என்பதை நினைவூட்டினார் பேராயர்.

மதங்களின் பாராளுமன்றம் என அழைக்கப்படும் அமைப்பின் இந்திய தேசியத் தலைவர் Goswami Sushil Ji Maharaj அவர்கள் உரையாற்றுகையில், திருத்தந்தையின் இந்திய திருத்தூதுப்பயணம் விரைவில் இடம்பெறும் என்ற நம்பிக்கையை வெளியிட்டதுடன், ஒருவர் மற்றவரின் மத நம்பிக்கைகளை மதிக்கும் பண்பு, அடிமட்ட நிலையில் இருக்கும் மக்களிலும் பரவவேண்டும் என்ற ஆவலையும் தெரிவித்தார்.

இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், ஜெயின், சீக்கியம் உட்பட பல்வேறு மதங்களின் தலைவர்கள், நாட்டில் பகைமையுணர்வுகளின் இடத்தில் அன்பும், வன்முறைகளின் இடத்தில் அமைதியும் நிலவவேண்டும் எனவும், இரக்கம் மற்றும் நன்மைத்தனத்தின் செயல்பாடுகளை கைக்கொள்வோம் எனவும் அழைப்புவிடுத்தனர். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 November 2021, 14:56