COP26 காலநிலை மாநாட்டிற்கு விண்ணப்பம் COP26 காலநிலை மாநாட்டிற்கு விண்ணப்பம் 

பழைய பாயில் அமர்ந்துகொண்டு புதியதை தயாரிக்கிறோம்

வளமையான ஆப்ரிக்க கலாச்சாரங்களில் ஒன்றாக இருப்பது, காடுகள் பாதுகாப்பு பற்றிய கல்வி. அக்கல்வியில், காடுகளின் புனிதத்துவத்தைப் போற்றவேண்டும் எனக் கற்றுத்தரப்படுகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

‘பழைய பாயில் அமர்ந்துகொண்டு புதிய பாய் ஒன்றைத் தயாரிக்கிறோம்’ என்ற ஆப்ரிக்க முதுமொழிக்கேற்ப, அக்கண்டத்தின் கலாச்சாரங்கள் அமைந்துள்ளன என்றும், இன்றைய உலகம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளுக்கு, ஆப்ரிக்க கலாச்சாரங்கள் சிலநேரங்களில் போதிய பதலிறுப்புக்களைக் காணமுடியும் என்றும், ஆப்ரிக்க மறைபோதக சபையின் (SMA) அருள்பணியாளர் ஒருவர், பீதேஸ் செய்தியிடம் கூறினார்.

கிளாஸ்கோவில் நடைபெற்றுவரும், COP 26 காலநிலை உலக உச்சி மாநாட்டையொட்டி  பீதேஸ் செய்திக்குப் பேட்டியளித்த ஆப்ரிக்க மறைபோதக சபையின் ஐவரி கோஸ்ட் நாட்டின் மறைப்பணியாளர் அருள்பணி Donald Zagore அவர்கள் இவ்வாறு கூறினார்.

காலநிலை உலக மாநாட்டில் இடம்பெற்றுவரும் நிகழ்வுகள் பற்றிய தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட அருள்பணி Zagore அவர்கள், வளமையான ஆப்ரிக்க கலாச்சாரங்களில் ஒன்றாக இருப்பது, காடுகள் பாதுகாப்பு பற்றிய கல்வி எனவும், அக்கல்வியில், காடுகளைப் புனிதமாகப் போற்றவேண்டும் என்பதுபற்றி கற்றுத்தரப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

காடுகளின் புனிதம் பற்றிய வரலாறு, ஒரு புராணக்கதை அல்ல, மாறாக, அது ஓர் உண்மையான கலாச்சாரக் கலை என்றும், அதனைப் பாதுகாப்பதற்கு, நன்னெறிப்படி நோக்கம் உள்ளது என்றும் கூறிய, அபிஜான் நகரின் மறைப்பணியாளர் அருள்பணி Zagore அவர்கள், காடுகள் ஒரு புனிதத்தலம், அதனை மிகுந்த மரியாதை மற்றும் அன்போடு நடத்தவேண்டும் என ஆப்ரிக்கக் கலாச்சாரத்தில் கற்றுத்தரப்படுகின்றது என்று கூறினார். 

ஐரோப்பிய கலாச்சாரத்திலும், அதன் மெய்யியல் கலை வழியாக, காடுகளின் மதிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றும், Chateaubriand என்ற கலைஞர், காட்டை, இறைமையின் ஆலயம் என்று குறிப்பிட்டுள்ளார் எனக் கூறிய அருள்பணி Zagore அவர்கள், 100க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொள்ளும் COP26 உலக மாநாட்டில், இயற்கையின், குறிப்பாக, காடுகளின் புனிதம் மதிக்கப்படுவதற்கு வலியுறுத்தப்படவேண்டும் என்று கூறினார். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 November 2021, 15:47