போலந்து நாட்டுக்குள் செல்ல இயலாமல் குளிரில் தவிக்கும் பெலாருஸ் மக்கள் போலந்து நாட்டுக்குள் செல்ல இயலாமல் குளிரில் தவிக்கும் பெலாருஸ் மக்கள் 

செயல்பாடுடன் கூடிய ஒருமைப்பாட்டிற்கு அழைக்கும் ஆயர்கள்

ஐரோப்பிய ஆயர்கள் - புலம்பெயர்ந்தோரின் மாண்பும், அடிப்படை உரிமைகளும் மதிக்கப்படுவதை உறுதிசெய்ய, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முன்வரவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள் 

போலந்து மற்றும் பெலாருஸ் நாடுகளின் எல்லையில், புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடம் தேடுவோர், பெரும் நெருக்கடிகளை சந்தித்துவரும் சூழலில், ஐரோப்பிய நாடுகளும், நல்மனதுடையோரும், துயருறும் இம்மக்களுடன் செயல்பாடுடன் கூடிய ஒருமைப்பாட்டை வழங்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது, ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் ஒருங்கிணைப்பு.

புலம்பெயர்ந்தோர் அடைந்துவரும் பெரும் நெருக்கடி ஏற்படுத்தியுள்ள இழப்புகள் குறித்து ஆழந்த கவலையை வெளியிடும் ஐரோப்பிய ஆயர்கள், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்காக செபிக்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

போலந்து, லித்துவேனியா, மற்றும் பெலாருஸ் நாடுகளுக்கிடையே, எல்லைப் பகுதிகளில் தடுக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோரின் மாண்பும், அடிப்படை உரிமைகளும் மதிக்கப்படுவதை உறுதிசெய்ய, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முன்வரவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளனர் ஆயர்கள்.

சமூக பொருளாதார வாய்ப்புகள் இன்மை, போர், வன்முறை ஆகிய காரணங்களுக்காக தங்கள் சொந்த நாட்டைவிட்டு வெளியேறும் மக்கள், அவர்கள் அடைக்கலம் தேடிவரும் நாடுகளின் எல்லையிலேயே இறக்கும் அவலம், தடுக்கப்படவேண்டும் என, ஆயர்கள், ஐரோப்பிய அரசியல் தலைவர்களிடம் மேலும் விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கிடையே, பெலாருஸ், போலந்து, லித்துவேனியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் அடைக்கலம் தேடியுள்ள ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு, தங்குமிடம், மருத்துவ வசதி, புகலிடம் கோருவதற்கான உரிமைகள், போன்ற அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுவதாக கவலையை வெளியிட்டுள்ளது, ஐரோப்பாவின் கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனம்.

ஐரோப்பாவுக்குள் அடைக்கலம் தேட முயன்ற ஆயிரக்கணக்கான மக்கள், பெலாருஸ் மற்றும் போலந்து நாடுகளின் எல்லையில், கடுங்குளிரில் வாடிவருவதாகக் கூறும் காரித்தாஸ் அமைப்பு, பல குடும்பங்கள், இளம் குழந்தைகளுடன் துயர்களை அனுபவித்து வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

போலந்துக்கும் லித்துவேனியாவுக்கும் இடையே, புகலிடம் தேடும் முயற்சியில் துன்புற்றுவரும் மக்களுக்கு, அனைத்து மனிதாபிமான உதவிகளையும் ஆற்றிவருகின்றது, கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 November 2021, 14:13