பெலாருஸ் - போலந்து எல்லையில் போலந்து இராணுவத்தினரின் காவல் பணி பெலாருஸ் - போலந்து எல்லையில் போலந்து இராணுவத்தினரின் காவல் பணி 

புலம்பெயர்ந்தோரை வரவேற்பது, கிறிஸ்தவரின் கடமை

பெலாருஸ் நாட்டிலிருந்து, போலந்து நாட்டிற்குள் தஞ்சம் புகுந்துள்ள புலம்பெயர்ந்தோருக்கு உதவி செய்யும்வண்ணம், போலந்து நாட்டின் அனைத்து ஆலயங்களிலும், நவம்பர் 21, ஞாயிறன்று, நிதி திரட்டப்படும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பெலாருஸ் நாட்டிலிருந்து, போலந்து நாட்டிற்குள் தஞ்சம் புகுந்துள்ள புலம்பெயர்ந்தோருக்கு உதவி செய்யும்வண்ணம், போலந்து நாட்டின் அனைத்து ஆலயங்களிலும், நவம்பர் 21, ஞாயிறன்று, நிதி திரட்டப்படும் என்று, அந்நாட்டு ஆயர்கள் அறிவித்துள்ளனர்.

புலம்பெயர்ந்தோரின் வருகையால், போலந்து மற்றும் பெலாருஸ் நாடுகளின் அரசுகளுக்கிடையே இறுக்கமான சூழல் உருவாகியிருந்தாலும், தஞ்சம் புகுந்துள்ள புலம்பெயர்ந்தோரை வரவேற்பது, ஒவ்வொரு கிறிஸ்தவரின் கடமை என்பதை, போலந்து ஆயர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

தஞ்சம் புகுந்திருக்கும் மக்களின் தினசரி தேவைகளையும், ஆன்மீகத் தேவைகளையும் நிறைவு செய்வது அவசரமான தேவை என்பதை சுட்டிக்காட்டிய போலந்து ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் Stanislaw Gądecki அவர்கள், இந்த நெருக்கடி நிலையை சமாளிக்க, நவம்பர் 21ம் தேதி ஆலயங்களில் நிதி திரட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.

2'020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பெலாருஸ் நாட்டில், அரசுத்தலைவர் Alexander Lukashenko அவர்கள், குடியரசு விதிகளை மீறி, ஆறாவது முறையாக, தான் வெற்றிபெற்றதாக அறிவித்துக்கொண்டதை, ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகள் கண்டனம் செய்ததைத் தொடர்ந்து, Lukashenko அவர்கள், புலம் பெயர்வு பிரச்சனையைத் துவக்கியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், மத்தியக் கிழக்குப் பகுதி, ஆப்ரிக்கா, லித்துவேனியா, லாத்வியா மற்றும் பெலாருஸ் நாடுகளிலிருந்து, 30,000த்திற்கும் அதிகமானோர் ஆவணங்கள் ஏதுமின்றி போலந்து நாட்டிற்குள் நுழைய முயற்சித்துள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

பெலாருஸ் நாட்டுடன் போலந்து நாடு மேற்கொண்டுள்ள மோதலில், போலந்து நாடு தன் எல்லைகளைப் பாதுகாப்பது அதன் உரிமை என்பதை தெளிவுபடுத்தியுள்ள போலந்து ஆயர்கள், இருப்பினும், இச்சூழலில், புலம்பெயர்ந்தோரை வரவேற்று, ஆதரவளிப்பது நற்செய்தி நமக்கு விடுக்கும் முக்கிய அழைப்பு என்று கூறியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 November 2021, 13:12