குடும்ப ஆன்மீகம் குடும்ப ஆன்மீகம்  

மகிழ்வின் மந்திரம்: கிறிஸ்தவத் தம்பதியரின் ஆன்மீகம்

கிறிஸ்தவத் தம்பதியர், ஒருவர் ஒருவருக்காக, தங்கள் பிள்ளைகளுக்காக மற்றும், தங்களின் உறவினர்களுக்காக, அருளின் ஒத்துழைப்பாளர்களாகவும், நம்பிக்கையின் சான்றுகளாகவும் இருக்கின்றார்கள்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடலின் 9ம் இறுதிப்பிரிவின், 321ம் பத்தியில், கிறிஸ்தவத் தம்பதியரின் ஆன்மீகம் பற்றிக் கூறியுள்ள கருத்துக்கள்..

கிறிஸ்தவத் தம்பதியர், ஒருவர் ஒருவருக்காக, தங்கள் பிள்ளைகளுக்காக மற்றும், தங்களின் உறவினர்களுக்காக, அருளின் ஒத்துழைப்பாளர்களாகவும், நம்பிக்கையின் சான்றுகளாகவும் இருக்கின்றார்கள். கடவுள் அவர்களை, வாழ்வை வழங்கவும், வாழ்வைப் பராமரிக்கவும் அழைப்புவிடுத்துள்ளார். இக்காரணத்தினாலே, குடும்பம், மிக அருகாமையிலுள்ள மருத்துவமனையாக எப்போதும் விளங்குகிறது. ஆதலால் நாம் ஒருவர் ஒருவர் மீது அக்கறைகொள்வோம், ஒருவர் ஒருவரை வழிநடத்தி ஊக்குவிப்போம், இதனை, நம் குடும்ப ஆன்மீகத்தின் ஒரு பகுதியாக அனுபவிப்போம். தம்பதியராக வாழ்கின்ற வாழ்க்கை, கடவுளின் படைப்பாற்றல் பணியை, தினமும் பகிர்ந்துகொள்வதாகும், மற்றும், ஒவ்வொரு மனிதரும் மற்றவருக்காக இருக்கிறார் என்று தூய ஆவியாரிடமிருந்து தொடர்ந்து பெறும் சவாலை ஏற்று வாழ்வதாகும். கடவுளின் அன்பு, வாழும்முறை மற்றும் வார்த்தை வழியாக அறிவிக்கப்படுகின்றது. இவ்வாறு ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தங்களின் திருமண அன்பையும் வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறு தம்பதியர் இறையன்பை பிரதிபலிக்கின்றனர். அவ்வன்பு, ஒரு சொல், ஒரு பார்வை, உதவும் ஒரு கரம், அக்கறை ஆகியவற்றால் ஆறுதலளிக்கின்றது. இக்காரணத்திற்காகவே, குடும்பம் என்பதை அமைக்க விரும்புவது, கடவுளின் கனவின் ஒரு பகுதியாக உள்ளது. அது, அவரோடு கனவைத் தெரிவுசெய்யவும், அவரோடு சேர்ந்து குடும்பத்தைக் கட்டியமைக்கவும், எவரும் தனிமையை உணராதவண்ணம் ஞானம் நிறைந்த ஓர் உலகை அமைப்பதில் இணையவும் செய்கிறது (அன்பின் மகிழ்வு 321) 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 November 2021, 12:49