மகிழ்வான குடும்பம் மகிழ்வான குடும்பம் 

மகிழ்வின் மந்திரம்: குடும்ப இறைவேண்டலின் பலன்கள்

பல்வேறு பொதுவான பக்திமுயற்சிகள், பல குடும்பங்களுக்கு ஆன்மீகக் கருவூலமாக அமைந்துள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடலின் ஒன்பதாம் இறுதிப் பிரிவில், திருமண உறவிலும், குடும்ப வாழ்விலும் நிலவும் ஆன்மீகத்தின் ஒருசில பரிமாணங்களை எடுத்துரைத்துள்ளார். அந்தப் பிரிவில், 'இயேசுவின் உயிர்ப்பின் ஒளியில் இறைவேண்டலில் ஒன்றுகூடுதல்' என்ற பகுதியின் 318ம் பத்தியில் திருத்தந்தை பதிவுசெய்துள்ள கருத்துக்கள்..

தம்பதியர், பாஸ்கா பேருண்மை மீது வைத்திருக்கும் நம்பிக்கையை, குடும்ப இறைவேண்டல், ஒரு சிறப்பான முறையில் வெளிப்படுத்துகிறது மற்றும், அந்நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றது. தினமும் ஒருசில நிமிடங்களை ஒதுக்கி, வாழும் கடவுள்முன் குடும்பமாகக்கூடி, நம் கவலைகளை அவரிடம் எடுத்துச் சொல்லி, நம் குடும்பத்தின் தேவைகளுக்காக மன்றாடலாம், இன்னல்களை எதிர்கொள்ளும் நபர்களுக்காகச் செபிக்கலாம், நாம் அன்பை வெளிப்படுத்துவதற்கு உதவுமாறு அவரிடம் கேட்கலாம், வாழ்வுக்காகவும், அதில் அடையும் ஆசீர்களுக்காகவும் நன்றி கூறலாம், மற்றும், நம் அன்னை மரியா, தனது தாய்மைக்குரிய அரவணைப்பில் நம்மைப் பாதுகாக்குமாறு வேண்டலாம். எளிய சொற்களைக் கொண்ட ஒருசில நிமிட இறைவேண்டல், நம் குடும்பங்களுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொணரும். பல்வேறு பொதுவான பக்திமுயற்சிகள், பல குடும்பங்களுக்கு ஆன்மீகக் கருவூலமாக அமைந்துள்ளன. குடும்பமாகக்கூடி இறைவேண்டல் செய்வது, திருப்பலியில், குறிப்பாக, ஞாயிறு திருப்பலியில் குடும்பமாகப் பங்குகொள்வதில் உச்சநிலையை எட்டுகிறது. குடும்பங்களோடு திருவிருந்தைப் பகிர்ந்துகொள்வதற்காக, இயேசு அவற்றின் கதவுகளைத் தட்டுகிறார் (காண்க.தி.வெ.3:20). அத்திருவிருந்தில், தம்பதியர், தங்களை ஒன்றிணைக்கின்ற, மற்றும், கடவுள், சிலுவையில் மனித சமுதாயத்தோடு நிலைப்படுத்திய உறவைச் சிந்திக்க வைக்கின்ற, பாஸ்கா உடன்படிக்கையை எப்போதும் புதுப்பிக்கலாம். திருநற்கருணை, கிறிஸ்துவின் மீட்புப்பணி நடந்தேறிய புதிய உடன்படிக்கையின் அருளடையாளமாகும் (காண்க.லூக்.22:20). இவ்வாறு, திருமண வாழ்வுக்கும், திருநற்கருணைக்கும் இடையேயுள்ள நெருங்கிய பிணைப்பு மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறது. திருநற்கருணை எனும் ஆன்மீக உணவு, தம்பதியருக்கு வலிமையை அளிக்கின்றது. அதோடு, “இல்லத் திருஅவையாக”, ஒவ்வொரு நாளும் திருமண உடன்படிக்கையை வாழ்வதற்குத் தேவையான உந்துசக்திகளையும் அவ்வுணவு வழங்குகின்றது (அன்பின் மகிழ்வு 318).

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 November 2021, 14:52