கூட்டுக் குடும்பம் கூட்டுக் குடும்பம் 

மகிழ்வின் மந்திரம் : சிலுவை மறையுண்மையில் பங்குபெறுதல்

இயேசுவின் சிலுவை மறையுண்மையில் பங்குபெறும்போது, நம் சிரமங்களையும் கடின நேரங்களையும், அன்பின் கொடையாக அது மாற்றுகின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருமண உறவிலும், குடும்ப வாழ்விலும் நிலவும் ஆன்மீகத்தின் ஒருசில பரிமாணங்களை, தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 9ம் பிரிவில் விளக்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இயேசுவின் உயிர்ப்பின் ஒளியில், செபத்தில் ஒன்றுகூடுதல்' என்ற உபதலைப்பில், அதன் 317ம் பத்தியில் கூறியிருக்கும் கருத்துக்களின் தொகுப்பு :

ஒரு குடும்பம், கிறிஸ்துவை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தால், அக்குடும்பத்தை ஒன்றிணைத்து அதன் முழுவாழ்வையும் ஒளிரச்செய்வார் இறைவன். வாழ்வின் வலி மற்றும் சிரம நேரங்களில், அவைகளை நாம் இயேசுவின் சிலுவையோடு இணைத்து உணர்வதுடன், அத்துயர்களை வெற்றிகொள்ள இயேசுவின் அருகாமை நமக்கு உதவும். ஒரு குடும்ப வாழ்வின் இருண்ட நேரங்களின்போது, இயேசு கைவிடப்பட்டதில் நாமும் ஒன்றிணையும்வேளையில், குடும்பங்களின் பிளவுகளை தவிர்க்க அது உதவுகின்றது. படிப்படியாக, தூய ஆவியாரின் அருளுடன் தம்பதியர் தங்கள் திருமண வாழ்வின் வழியாக புனிதத்துவத்தில் வளர்கின்றனர். இயேசுவின் சிலுவை மறையுண்மையில் பங்குபெறும்போது, நம் சிரமங்களையும் கடின நேரங்களையும், அன்பின் கொடையாக அது மாற்றுகின்றது. மேலும், மகிழ்ச்சி, ஓய்வு, கொண்டாட்டம், ஏன், பாலியல் செயல்பாடுகூட, உயிர்ப்பின் முழு வாழ்வில் பகிர்வதுபோல், அனுபவிக்கமுடியும். திருமணமான தம்பதியர், தங்களின் வெவ்வேறு தினசரி செயல்பாடுகளுடன் “கடவுளின் ஒளியூட்டப்பட்ட ஓர் இடத்தை உருவாக்கி, அங்கு உயிர்த்தெழுந்த இறைவனின் மறைவான இருப்பை அனுபவிக்கிறார்கள்”. (அன்பின் மகிழ்வு 317)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 November 2021, 16:09