குடும்பத்தில் ஆன்மீகம் குடும்பத்தில் ஆன்மீகம் 

மகிழ்வின் மந்திரம் : குடும்ப அன்பின் ஆன்மீகம்

ஒருவரொருவர் மீதான அக்கறை, மனிதத்தையும் தெய்வீகத்தையும் ஒன்றிணைத்துக் கொண்டுவருகிறது, ஏனெனில் இது இறையன்பால் நிரம்பியுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், திருமண உறவிலும், குடும்ப வாழ்விலும் நிலவும் ஆன்மீகத்தின் ஒரு சில பரிமாணங்களை விவரித்துள்ள 9ம் பிரிவின், அதாவது, இறுதிப் பிரிவின்கீழ், ‘தெய்வீகமான கூட்டுறவின் ஆன்மீகம்’ என்ற உபதலைப்பில், 314, மற்றும் 315 பத்திகளில் கூறியுள்ளதன் தொகுப்பு இதோ:   

தன் அருளில் வாழ்பவர்களின் இதயங்களில் கடவுள் எவ்வாறு வாழ்கிறார் என்பதை நாம் எப்போதும் பேசிவந்துள்ளோம். திருமணக் கூட்டுறவு எனும் ஆலயத்தில் தூய மூவொரு கடவுள் குடிகொண்டிருக்கிறார் என்பதையும், இன்று நாம் இணைத்துக் கொள்ளலாம். கடவுள் தம் மக்களின் புகழுரைகளில் குடியிருப்பதுபோல், அவருக்கு மகிமைதரும் திருமண அன்பிலும் அவர் ஆழமாக வாழ்கிறார்.

தங்களின் அன்றாட பிரச்சனைகள், போராட்டங்கள், மகிழ்ச்சிகள், மற்றும் நம்பிக்கைகள் மத்தியிலும், உண்மையாகவும் உறுதியாகவும் இருக்கும் குடும்பங்களில் இறைவன் குடிகொள்வது உள்ளது. ஒரு குடும்பத்தில் வாழ்வது என்பது, போலியாக வாழ்வதையோ, பொய் சொல்வதையோ கடினமாக்குகிறது. குடும்பங்களில் நாம் ஒரு முகமூடிக்குள் ஒளிந்துகொள்ளமுடியாது. நம் நம்பகத்தன்மை, அன்பால் தூண்டப்பட்டதாக இருக்கும்போது, இறைவன் அங்கு தனது மகிழ்ச்சி மற்றும் அமைதியில் ஆட்சி செய்கிறார். குடும்ப அன்பின் ஆன்மீகம் என்பது, ஆயிரக்கணக்கான சிறிய, ஆனால், உண்மையான செயல்பாடுகளை உள்ளடக்கியது. கூட்டுறவை ஆழமாக்கும் பல்வேறு விதமான கொடைகள், மற்றும் சந்திப்புக்களில், கடவுள் தன்னுடைய குடியிருப்பைக் கொண்டுள்ளார். இந்த, ஒருவரொருவர் மீதான அக்கறை, மனிதத்தையும் தெய்வீகத்தையும் ஒன்றிணைத்துக் கொண்டுவருகிறது, ஏனெனில் இது இறையன்பால் நிரம்பியுள்ளது. இறுதியில், திருமண ஆன்மீகம் என்பது, தெய்வீக அன்பு குடிகொள்ளும் ஓர் ஒப்பந்த பிணைப்பின் ஆன்மீகமாகும்.(அன்பின் மகிழ்வு 314,315)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 November 2021, 14:34