ஆப்ரிக்காவுக்கு கொரியாவின் புனித ஆன்ட்ரூவின் திருப்பொருள் ஆப்ரிக்காவுக்கு கொரியாவின் புனித ஆன்ட்ரூவின் திருப்பொருள்  

ஆப்ரிக்காவுக்கு கொரியாவின் புனித ஆன்ட்ரூவின் திருப்பொருள்

2020ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி துவங்கிய புனித ஆன்ட்ரூ கிம் யூபிலி ஆண்டு, 2021ம் ஆண்டு நவம்பர் 27, இச்சனிக்கிழமையன்று நிறைவுற்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மறைபரப்புப்பணியில் ஒத்துழைப்பை உருவாக்குவதன்  அடையாளமாக, தென்கொரியாவின் முதல் கத்தோலிக்க அருள்பணியாளரான புனித Andrew Kim Tae-gon அவர்களின் திருப்பொருள்கள், ஆப்ரிக்க நாடான புர்கினா ஃபாசோவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

தென் கொரியாவின் சோல் உயர்மறைமாவட்டத்தின் Yeouido பங்குத்தள மக்கள் அளித்த நன்கொடையால், புர்கினா ஃபாசோ நாட்டின் Koupéla உயர்மறைமாவட்டத்தின் Koupéla புனித யோசேப்பு பங்குத்தள ஆலயம் அண்மையில் புதுப்பிக்கப்பட்டது.

தென் கொரியாவுக்கும், புர்கினா ஃபாசோ நாட்டிற்கும் இடையே மறைப்பணியில் ஒத்துழைப்பு இடம்பெறுவதன் ஒரு பகுதியாக, Yeouido பங்குத்தள மக்கள், Koupéla புனித யோசேப்பு பங்குத்தளத்திற்கு நன்கொடைகளை வழங்கியுள்ளனர்.

தென் கொரிய கர்தினால் Andrew Yeom Soo-jung அவர்கள், Koupéla உயர்மறைமாவட்டத்தின் ஆயர் Julien Kaboré அவர்களுக்கு, புனித ஆன்ட்ரூ கிம் அவர்களின் திருப்பொருள்களை வழங்கி உரையாற்றுகையில், இப்புனிதர் பிறந்ததன் 200வது ஆண்டை முன்னிட்டு கொண்டாடப்பட்ட யூபிலி ஆண்டில் (நவ.29,2020-நவ.27,2021) இத்திருப்பொருளை ஆப்ரிக்காவுக்கு வழங்குவது மகிழ்ச்சி தருகின்றது என்று கூறினார்.

புனித ஆன்டரூ கிம் அவர்கள் வழியாக, கொரியா மற்றும், புர்கினோ ஃபாசோ கத்தோலிக்கத் திருஅவைகளுக்கு இடையே உடன்பிறப்பு உணர்வுகொண்ட தோழமையைக் கட்டியெழுப்ப, இந்நிகழ்வு நல்ல வாய்ப்பாக அமைந்தது குறித்து மகிழ்கிறேன் எனவும் கர்தினால் Andrew Yeom அவர்கள் கூறினார்.

2020ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி துவங்கிய புனித ஆன்ட்ரூ கிம் யூபிலி ஆண்டு, 2021ம் ஆண்டு நவம்பர் 27, இச்சனிக்கிழமையன்று நிறைவுற்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 November 2021, 15:35