ஆண்டவன் அன்பு, அயலவர் அன்பு - மாற்கு 12:28-34 ஆண்டவன் அன்பு, அயலவர் அன்பு - மாற்கு 12:28-34 

பொதுக்காலம் 31ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

உண்மை அன்பைக் குறித்து, இறைமகன் இயேசு, இன்றைய நற்செய்தியில் நமக்குச் சொல்லித்தரும் பாடங்களை, மீண்டும் ஒருமுறை கற்றுக்கொள்ள முயல்வோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 31ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

கத்தோலிக்கத் திருஅவையில், 2016ம் ஆண்டு, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டாக சிறப்பிக்கப்பட்டது. அவ்வாண்டு செப்டம்பர் மாதம், அருளாளரான அன்னை தெரேசா அவர்கள் புனிதராக உயர்த்தப்பட்டார். அத்தருணத்தையொட்டி, "A Call to Mercy - Hearts to Love, Hands to Serve" "இரக்கத்திற்கு ஓர் அழைப்பு - அன்புகூர இதயங்களும், பணியாற்ற கரங்களும்" என்ற பெயரில் நூலொன்று வெளியானது. இந்நூலில், அன்னை தெரேசா அவர்கள், பரிவையும் அன்பையும் மையப்படுத்தி, வாழ்வில் தான் பெற்ற அனுபவங்கள் பலவற்றைப் பகிர்ந்துள்ளார். அந்த அனுபவங்களில் ஒன்று, நமது ஞாயிறு சிந்தனையைத் துவக்க உதவியாக உள்ளது.

அன்பிற்கு ஓர் இலக்கணமாக வாழ்ந்த புனித அன்னை தெரேசா அவர்கள், அன்பைப் பற்றிய அழகான பாடங்கள் சிலவற்றை, ஏழ்மையில் வாடிய ஒரு பெண், தனக்குக் கற்றுத்தந்ததாகக் கூறியுள்ளார். இந்நிகழ்வை, அன்னை அவர்கள் சொன்னது போலவே கேட்போம்:

  • மிகச்சிறந்த அன்பு அனுபவத்தை, ஓர் இந்து குடும்பத்தினரிடமிருந்து அடைந்தேன். ஒருநாள், ஒருவர், எங்கள் இல்லத்திற்கு வந்து, "அன்னையே, அருகில் ஒரு குடும்பத்தில் இருப்பவர்கள் பலநாள்கள் ஒன்றும் சாப்பிடாமல் உள்ளனர், அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள்" என்று கூறினார். நான் உடனே, கொஞ்சம் அரிசியை எடுத்துக்கொண்டு அங்கு விரைந்தேன். அக்குழந்தைகளின் கண்களில் பசி பற்றியெரிந்ததைக் கண்டேன். அந்த வீட்டின் தாய், நான் தந்த அரிசியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார். அவர் திரும்பி வந்ததும், அவரிடம், "எங்கே சென்றாய்? என்ன செய்தாய்?" என்று கேட்டேன். அவர் என்னிடம், "அடுத்த வீட்டில் (ஓர் இஸ்லாமியக் குடும்பம்) இருப்பவர்களும் பசியுடன் உள்ளனர்" என்று, எளிமையான ஒரு பதிலைத் தந்தார்.
  • நான் மீண்டும் என் இல்லத்திற்குச் சென்று கூடுதல் அரிசியைக் கொண்டுவரவில்லை. ஏனெனில், அவ்விரு குடும்பங்களும் - ஒரு இந்துக்குடும்பமும், இஸ்லாமியக் குடும்பமும் - பகிர்வின் மகிழ்வை அடையட்டும் என்று எண்ணினேன். ஒருவர் தன்னை வருத்தி வழங்குவதே உண்மையான பகிர்வு, அன்பு என்பதை, அன்று ஆழமாக உணர்ந்தேன்.

அந்த தாய் உணவைப் பகிர்ந்து கொண்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை. வறியோர் பலரிடம் அத்தகையப் பகிர்வை நான் பார்த்திருக்கிறேன். என்னை அன்று ஆச்சரியமடையச் செய்தது, மற்றொரு விடயம். பட்டினியால் வாடிக்கொண்டிருந்த அக்குடும்பத்தின் தாய், அதுவும், பட்டினியால் துடித்துக்கொண்டிருந்த தன் குழந்தைகளின் அழுகுரலைத் தினமும் கேட்டுவந்தத் தாய், அடுத்த வீட்டில் உள்ளவர்களும் பட்டினியாய் இருந்தனர் என்பதைத் தெரிந்து வைத்திருந்தாரே என்பதுதான், என்னை, பெரிதும் ஆச்சரியமடையச்செய்தது. பொதுவாக, நாம் துன்பப்படும்போது, நம்மைப்பற்றி மட்டுமே நமது கவனம் அதிகம் இருக்கும். அடுத்தவர்களைப்பற்றி சிந்திக்க நமக்கு மனமோ, நேரமோ, சக்தியோ, இருக்காது. ஆனால், இந்தத் தாயிடம் நான் கண்ட அன்பு, என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அன்பைப் பற்றிய பாடங்களைச் சொல்லித்தந்த்து.

புனித அன்னை தெரேசா அவர்கள் பகிர்ந்துகொண்ட இந்த அனுபவம், அன்பின் ஆழத்தை, இலக்கணத்தை நமக்குச் சொல்லித்தருகிறது.

‘அன்பு’ என்ற சொல்லுக்கு இவ்வுலகம், குறிப்பாக, வர்த்தக, விளம்பர உலகம் வகுக்கும் இலக்கணம் நமக்கு வேதனையளிக்கிறது. இத்தைகையச் சூழலில், இஞ்ஞாயிறு வழிபாடு, உண்மை அன்பைக் குறித்து சிந்திக்க, நம்மை அழைக்கிறது. இந்த அன்பைப்பற்றி, இறைமகன் இயேசு, இன்றைய நற்செய்தியில் நமக்குச் சொல்லித்தரும் பாடங்களை, மீண்டும் ஒருமுறை கற்றுக்கொள்ள முயல்வோம்.  

இயேசுவின் அறிவுத்திறனைக் கண்டு வியந்த ஒரு மறைநூல் அறிஞர், இயேசுவை அணுகியதாக இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. "அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" என்பது, அவர் இயேசுவிடம் கேட்ட கேள்வி. தன்னைச் சிக்கவைப்பதற்காக, மறைமுக நோக்கங்களுடன், குதர்க்கமான எண்ணங்களுடன், கேள்விகள் கேட்கும் ஏனைய மதத் தலைவர்களைப் போல், இம்மறைநூல் அறிஞர், கேட்காமல், உண்மையைத் தேடுகிறார், என்பதை இயேசு உணர்ந்ததால், அவரிடம், கிறிஸ்தவ மறையின் மிக முக்கியமான கட்டளைகளைக் கூறுகிறார். அவற்றை, அந்த மறைநூல் அறிஞருக்கு மட்டுமல்லாமல், கூடியிருந்த அனைத்து மக்களுக்கும் இயேசு கூறுகிறார். "இஸ்ரயேலே கேள்" என்ற சிறப்பான அறைகூவலுடன், இயேசு, மூன்று கட்டளைகளைக் கூறுகிறார்.

மூன்று கட்டளைகளா? இறையன்பு, பிறரன்பு என்ற இரு கட்டளைகளைத்தானே இயேசு அளித்துள்ளார்? என்ற கேள்விகள் எழலாம். இயேசு கூறிய இரண்டாம் கட்டளையை ஆழமாகப் பார்த்தால், அங்கு, இரு அன்புகளை இணைத்து, இயேசு பேசியுள்ளதை உணரலாம். 'ஒருவர் அடுத்திருப்பவர் மீது அன்புகொள்ள வேண்டும்' என்று மட்டும் இயேசு சொல்லவில்லை. மாறாக, ‘ஒருவர் தன் மீது அன்பு கூர்வதுபோல், அடுத்தவர் மீது அன்புகொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார். அடுத்தவர் மீது அன்பு கொள்வதற்கு ஓர் உந்துசக்தியாக, ஒருவர், தன் மீது கொள்ளும் அன்பை இயேசு குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் சிறிது ஆழமாகச் சிந்தித்தால், இதை, இயேசு, ஒரு நிபந்தனையாகச் சொன்னார் என்றும் எண்ணிப்பார்க்கலாம். அதாவது, அடுத்தவர்மீது அன்புகூர்வதற்குமுன், ஒருவர் தன்மீது முதலில் அன்புகூர வேண்டும் என்று, இயேசு கூறுவதுபோல் தெரிகிறது. நம்மீது நாம் கொள்ளும் அன்பு, அக்கறை, மரியாதை என்ற அடித்தளம் உறுதியாக அமையவில்லையென்றால், அடுத்தவர் மீது அன்பு, ஆண்டவர் மீது அன்பு, என்ற வானளாவியக் கோபுரங்களை நம்மால் எழுப்ப இயலாது.

'உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக' என்று இயேசு கூறிய வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்த மறைநூல் அறிஞர், இன்னும் ஒரு படி மேலேச் சென்று, “கடவுளிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும், எரிபலிகளையும், வேறுபலிகளையும்விட மேலானது” என்று கூறினார் (மாற்கு 12:33) என்று, இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம்.

மறைநூல் அறிஞர் ஒருவர் இவ்விதம் பேசியது, பெரும் ஆச்சரியம்தான். கோவிலை மையப்படுத்திய பலிகளும், காணிக்கைகளுமே இஸ்ரயேல் மக்களின் தலைசிறந்த கட்டளைகள் என்று நம்பி, அவ்விதமே மக்களையும் நம்பவைத்தவர்கள், மதத்தலைவர்களும், மறைநூல் அறிஞர்களும். அவர்களில் ஒருவர், அன்பு செலுத்துவது, எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது என்று சொன்னது, இயேசுவுக்கு மகிழ்வையும் வியப்பையும் வழங்கியிருக்கவேண்டும். மனப்பாடம் செய்த கட்டளைகளை, கிளிப்பிள்ளைப் பாடமாய்ச் சொல்லாமல், உண்மையான ஆர்வத்தோடு, மறைநூல் அறிஞர் பேசியதைக் கண்ட இயேசு, அவரிடம், 'நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை' என்ற சொற்கள் வழியே, அவருக்கு, விண்ணரசில் இடமுண்டு என்ற உறுதியை வழங்குகிறார்.

அன்பு செலுத்துவதையும், எரிபலிகளையும் இணைத்து, மறைநூல் அறிஞர் பேசியது, அழகான ஓர் எண்ணம். ஆழமாகச் சிந்தித்தால், அன்புநிறைந்த வாழ்வு, உண்மையிலேயே, ஒரு பலிவாழ்வு, தியாக வாழ்வு என்பதை உணரலாம். வெளிப்படையான பலிகளைவிட, நமது சொந்தப் பலிவாழ்வு எவ்வளவோ மேலானதுதான். இத்தகையத் தியாகவாழ்வைக் கூறும் பல்லாயிரம் நிகழ்வுகளை நாம் அறிவோம். அவற்றில் ஒன்று இதோ...

2006ம் ஆண்டு, இந்தியாவின் மீரட் நகரில் ஒரு கண்காட்சித் திடலில் ஏற்பட்டத் தீவிபத்தில், 6 பள்ளிக்குழந்தைகள் அகப்பட்டனர். அந்தக் கண்காட்சியைக் காண வந்திருந்த 18 வயது நிறைந்த Mohammed Javed என்ற இளைஞர், அக்குழந்தைகள் அனைவரையும் காப்பாற்றினார். தீயினால் பற்றியெரிந்த பிளாஸ்டிக் தடுப்புக்களை கிழித்து, அக்குழந்தைகளை வெளியே கொணர்ந்த இளைஞர் Javed அவர்களின் உடல் தீக்காயங்களால் 70 விழுக்காடு சிதைந்து, அடுத்தநாள், மருத்துவமனையில் இறந்தார்.

அந்த இளைஞருக்கும், அவரால் காப்பாற்றப்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அடுத்தநாள், தன் பெயர் நாளிதழ்களில் புகைப்படத்துடன் வரும் என்ற எதிர்பார்ப்பில், Javed அவர்கள், இந்தத் தியாகச்செயலை மேற்கொள்ளவில்லை. மனித உயிர்களை, அதுவும் பிஞ்சு உயிர்களைக் காக்கவேண்டும் என்ற ஒரே உந்துதலால், அவர், இத்தியாகச் செயலைச் செய்தார். இந்த இளைஞரைப் போல், பல தியாக உள்ளங்கள், அறிமுகமே இல்லாதவர்களைக் காத்த முயற்சியில், தங்கள் உயிரை இழந்துள்ளனர். குறிப்பாக, இந்த பெருந்தொற்று காலத்தில், தங்கள் உயிரைப் பணயம் வைத்து, பல உயிர்களைக் காத்த, இன்னும் காத்துவரும் நலப்பணியாளர்களை, இப்போது நன்றியோடு நினைவுகூர்கிறோம். 'நீங்கள் இறையாட்சியினின்று தொலையில் இல்லை' என்ற உறுதிமொழியுடன், இவர்கள் அனைவரையும், இயேசு, விண்ணரசில், மகிழ்வோடு வரவேற்றிருப்பார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.   

இத்தகைய தியாக உள்ளங்கள் விண்ணரசில் இடம் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் தங்கள் பணிகளை செய்யவில்லை என்பதை அறிவோம். அயலவருக்கு அன்பு செலுத்துவதன் வழியே விண்ணரசில் இடம் பெறுவதைவிட, விண்ணரசையே இவ்வுலகிற்கு கொணரமுடியும் என்பதை உலகிற்கு உணர்த்தியவர்கள் இவர்கள். பிறரன்பின் வழியே விண்ணரசை இவ்வுலகிற்குக் கொணரமுடியும் என்ற உண்மையை உணர்த்தும் ஒரு கதையுடன், நம் சிந்தனைகளை இன்று நிறைவுசெய்வோம்.

  • கிராமத்தில் இரும்பு வேலைகள் செய்துவந்த கொல்லர் ஒருவர், மிகுந்த அன்போடும், திறமையோடும் மக்களுக்கு உதவிகள் செய்துவந்தார். ஒருநாள், அவரைச் சந்தித்த வானதூதர், "உங்களுக்காக இறைவன் விண்ணரசில் ஓர் இடம் ஒதுக்கிவைத்துள்ளார். நீங்கள் அங்கு செல்லும் நேரம் வந்துவிட்டது" என்று கூறினார்.
  • கொல்லர், வானதூதரிடம், "இறைவன் எனக்காக வழங்கியுள்ள இந்த அழைப்புக்கு நன்றி கூறுகிறேன். ஆனால், இன்னும் சில நாள்களில் மழைக்காலம் வருகிறது. அப்போது, மக்கள் வயலை உழுது, விதைகள் விதைக்கவேண்டும். அவர்கள் தங்கள் கலப்பைகளைத் தயார் செய்வதற்கு, இந்தக் கிராமத்தில் என்னை அதிகம் நம்பி உள்ளனர். எனவே, நான் விண்ணரசில் நுழையும் நாளை, தயவுசெய்து, சிறிது காலம் தள்ளிவைக்கமுடியுமா?" என்று கேட்டார். வானதூதர், அவரை அன்புடன் பார்த்து, புன்னகைத்தவாறு விடைபெற்றார்.
  • கொல்லர் தன் வேலைகளையெல்லாம் முடித்த நேரத்தில், அவரது நண்பர் ஒருவர், நடவு நேரத்தில் நோயுற்றார். அவரது வயலில் மட்டும் நடவு இடம்பெறவில்லை. வானதூதர் மீண்டும் வந்தபோது, கொல்லர் அவரிடம், நாற்றுகள் நடப்படாமல் கிடந்த அந்த நிலத்தைச் சுட்டிக்காட்டி, "விண்ணக வாழ்வு இன்னும் சில நாள்கள் காத்திருக்க முடியுமா? என் நண்பருக்கு நான் உதவி செய்யவில்லையெனில், அவரது குடும்பம் மிகவும் துன்புறும்" என்று கூறினார். வானதூதர், மீண்டும் ஒரு புன்னகையுடன், விடைபெற்றுச் சென்றார்.
  • கொல்லரின் நண்பர் சுகமானதும், கிராமத்தில் ஒருவரின் வீட்டில் தீப்பிடித்தது, அடுத்தவரின் மனைவி திடீரென மரணமடைந்தார், மற்றொருவர்... மற்றொருவர்... என்று, கிராமத்தில் தேவைகள் தொடர்ந்து எழுந்தன.
  • ஒவ்வொருமுறையும் வானதூதர் வரும்போது, கொல்லர் யாரோ ஒருவருக்கு உதவிகள் செய்யவேண்டிய சூழல்கள் உருவாயின. ஆண்டுகள் கழிந்தன. கொல்லருக்கு அதிக வயதானது. எனவே, அவர் இறைவனிடம், "இறைவா, இப்போது உமது தூதரை அனுப்பும். அவரைக்காண ஆவலாய் இருக்கிறேன்" என்று வேண்டினார்.

அவர் வேண்டி முடிப்பதற்குள், வானதூதர் அவருக்கு முன் வந்து நின்றார். கொல்லர் அவரிடம், "இப்போது நீர் விரும்பினால், என்னை அழைத்துச்செல்லும். விண்ணரசில் வாழ நான் தயாராக இருக்கிறேன்" என்று கூறினார். வானதூதர், அவரை அன்புடன் பார்த்து, "இத்தனை ஆண்டுகள் நீர் எங்கு வாழ்ந்ததாக எண்ணிக்கொண்டிருக்கிறீர்?" என்று கேட்டார்.

உண்மை அன்பை, கலப்படமான, போலியான ஓர் உணர்ச்சியாகச் சொல்லித்தரும் இவ்வுலகில், புனித அன்னை தெரேசா, அவருக்கு அன்பு பாடங்களைச் சொல்லித்தந்த அந்த ஏழைப்பெண், கண்காட்சித் திடலில் குழந்தைகளை நெருப்பிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் தன்னையே தகனமாக்கிய இளையவர் Javed, கோவிட் பெருந்தொற்று காலத்தில் உயிர்பலி தந்த நலப்பணியாளர்கள் என்று... பல்லாயிரம் தியாக உள்ளங்கள் வழியே, உண்மையான, கலப்படமற்ற அன்பின் இலக்கணத்தை நாம் கற்றுக்கொள்ள இறைவனின் அருளை இறைஞ்சுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 October 2021, 12:14