Boko Haram  அமைப்பின் தலைவர் அபுபக்கர் ஷேகாவ் Boko Haram அமைப்பின் தலைவர் அபுபக்கர் ஷேகாவ் 

Boko Haramத்தோடு ஒப்புரவாகும் முயற்சிக்கு ஆயர்கள் வரவேற்பு

ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு சமுதாயத்தோடு இணைய விரும்புவோருக்கு, பொது மன்னிப்பு வழங்குவதற்கு நைஜீரிய அரசு, கடந்த பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நைஜீரியா நாட்டில், இராணுவமாக உருவாக்கப்பட்டுள்ள Boko Haram இஸ்லாம் தீவிரவாத அமைப்பின் தலைவர்களோடு ஒப்புரவு நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்நாட்டு அரசு இரகசியமாகத் திட்டமிட்டுவருவதை, நைஜீரிய கத்தோலிக்க ஆயர்கள் வரவேற்றுள்ளனர்.

ஆயுதப்போராட்டத்தைக் கைவிட்டு, சமுதாயத்தோடு ஒருங்கிணைந்த பாதையில் இணைவதற்கு முன்வரும் Boko Haram அமைப்பினர் யாராய் இருந்தாலும், அவர்களை அரசின் மறுஒருங்கிணைப்புத் திட்டத்தில் இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

நைஜீரியாவிலும், அதன் சில அருகாமை நாடுகளிலும் பல ஆண்டுகளாகத் தீவிரமாக இயங்கிவரும் Boko Haram அமைப்பில், இவ்வாறு விரும்புவோருக்கு, முறைப்படி, முதலில் சமூக-உளவியல் சார்ந்த சிகிச்சை வழங்கப்பட்டு, பின்னர் அவர்களைச் சமுதாயத்தில் ஒருங்கிணைப்பதற்கும் அரசு திட்டமிட்டுள்ளது.

Suhlu எனப்படும் அரசின் இத்திட்டம் குறித்து, பீதேஸ் செய்திக்குப் பேட்டியளித்த, Maiduguri மறைமாவட்டத்தின் நிர்வாகி அருள்பணி Donatus Tizhe அவர்கள், Suhlu என்றால் அமைதி மற்றும், ஒப்புரவுக்கு மக்களைக் கொண்டுவருவது என்று அர்த்தம் எனவும், இத்திட்டம் இரகசியமாக இடம்பெறுவதால், இதைக் குறித்து, தெளிவாக, ஒன்றும் சொல்லமுடியவில்லை எனவும் கூறினார்.

அண்மை ஆண்டுகளில், Boko Haram அமைப்போடு உரையாடல் நடத்த அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன என்றும், இதற்கு மாற்றுமுறைகளும் வெற்றியடையவில்லை என்றும் கூறிய அருள்பணி Donatus Tizhe அவர்கள், Boko Haram அமைப்பின் வன்முறைகளால், மக்கள் நீண்டகாலமாகத் தொடர்ந்து துன்புற்றுவருகின்றனர் என்று தெரிவித்தார்.

ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு சமுதாயத்தோடு இணைய விரும்புவோருக்கு, பொது மன்னிப்பு வழங்கவும், அந்த அமைப்பின் தலைவர்களை நேரிடையாகச் சந்தித்து, இம்முயற்சியின் பலன்களை விவரிக்கவும் நைஜீரிய அரசு, கடந்த பல ஆண்டுகளாக முயற்சித்துவருகிறது, ஆனால் கடந்த இரு மாதங்களில் மட்டும், அந்த அமைப்பைச் சார்ந்த இரண்டாயிரத்திற்கும் அதிகமானத் தலைவர்கள் காடுகளுக்குச் சென்றுவிட்டனர் என்றும், அருள்பணி Donatus Tizhe அவர்கள் கவலைதெரிவித்தார். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 October 2021, 15:16