நீடித்து பலனளிக்கும் வேளாண்மை, பதிய வேலைவாய்ப்புக்களுக்கு...

"சுற்றுச்சூழல், வேலை, வருங்காலம் ஆகியவற்றோடு தொடர்புடைய நாம் எதிர்நோக்கும் பூமிக்கோளத்தை அமைப்பதற்கு” என்ற தலைப்பில், இத்தாலிய கத்தோலிக்கர் 49வது சமுதாய வாரத்தைத் துவக்குகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

"சுற்றுச்சூழல், வேலை, வருங்காலம் ஆகியவற்றோடு தொடர்புடைய நாம் எதிர்நோக்கும் பூமிக்கோளத்தை அமைப்பதற்கு” என்ற தலைப்பில், அக்டோபர் 21ம் தேதி வருகிற வியாழனன்று இத்தாலிய கத்தோலிக்கர், 49வது சமுதாய வாரத்தைத் துவக்குகின்றனர்.

தென் இத்தாலியின் Taranto நகரில் நடைபெறவிருக்கும் இந்த சமுதாய வாரத்தை ஏற்பாடுசெய்த நிர்வாக குழுவின் தலைவரான Taranto பேராயர் பிலிப்போ சந்தோரோ அவர்கள், அந்நிகழ்வு குறித்து செய்தியாளர் கூட்டத்தில் விளக்குகையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Laudato si' திருமடலை மையப்படுத்தி கலந்துரையாடல்கள் நடைபெறும் என்று கூறினார்.

2017ம் ஆண்டில், பெருந்தொற்றுக்குமுன், Cagliari நகரில் நடைபெற்ற 48வது சமுதாய வாரத்தில், "நாம் விரும்பும் வேலை" என்பது பற்றி கலந்துரையாடினோம் என்றுரைத்த பேராயர் சந்தோரோ அவர்கள், வேலையும் சுற்றுச்சூழலும் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புடையன என்பது பற்றி விளக்கினார். 

சுற்றுச்சூழல் பாதிப்பால் விவசாயிகளின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எடுத்துரைத்த பேராயர் சந்தோரோ அவர்கள், உடலுக்கு நலமளிக்கும் உணவு தயாரிக்கும் முறைகள் ஊக்குவிக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

2014ம் ஆண்டிலிருந்து, முழுவதும் இயற்கை முறையில் விவசாயம் செய்வதற்கு குறிப்பிடத்தக்க வகையில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும், வருவாய் மற்றும் வேலைவாய்ப்புக்களை அதிகரிக்க உதவும், நீடித்து பலனளிக்கும் விவசாயமுறைகளை, நடைபெறவிருக்கும் சமுதாய வாரத்தில் பரிந்துரைக்க உள்ளதாகவும் பேராயர் சந்தோரோ அவர்கள் தெரிவித்தார்.

இம்மாதம் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறவிருக்கும், இத்தாலிய 49வது சமுதாய வாரத்தில், 218 மறைமாவட்டங்களிலிருந்து 140க்கும் மேற்பட்ட ஆயர்களும், அரசியல், பொதுநல அமைப்புகள், கலாச்சார அமைப்புகள் ஆகியவற்றிலிருந்து 670 பிரதிநிதிகளும் கலந்துகொள்வார்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 October 2021, 14:24