குணப்படுத்தமுடியாத நோயால் துன்புறும் நோயாளிக்கு உதவுதல் குணப்படுத்தமுடியாத நோயால் துன்புறும் நோயாளிக்கு உதவுதல்  

வாழ்வதற்கு உதவுவதே திருஅவையின் பணி

ஒருவரின் அருகில் இருந்து ஆறுதல் கூறி, அவரை அன்புகூர்வதன் வழியாக, வாழ்வதற்கான நம்பிக்கையை, அவரில் ஏற்படுத்தலாம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனித உயிர் புனிதமானது, அதை மற்றவரிடமிருந்து பறிக்கும் உரிமை எவருக்கும் இல்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர், நியுசிலாந்து நாட்டு ஆயர்கள்.

பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பு வழியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அங்கீகரிக்கப்பட்ட, கருணைக்கொலைக்கு அனுமதியளிக்கும் சட்டம் நவம்பர் மாதம் 7ம் தேதி முதல் அமலுக்கு வருவதையொட்டி, தங்கள் கவலையை தெரிவித்து, அறிக்கையொன்றை தங்கள் வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளனர், நியுசிலாந்து ஆயர்கள்.

நியுசிலாந்து நாட்டில் தற்போது கருணைக்கொலைக்கு சட்ட அனுமதி கிட்டியுள்ளது, தலத்திருஅவையின் கருணைக்கொலைக்கு எதிரான உறுதிப்பாடுகளில் எவ்வித மாற்றத்தையும் கொணரவில்லை எனவும் தெரிவிக்கும் ஆயர்கள், அடுத்தவரின் வாழ்வை பறிக்கும் உரிமை எவருக்கும் இல்லை என்பது, எக்காலத்திலும் மாற்றமுடியாதது என்ற தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிசெய்துள்ளனர்.

குணப்படுத்த முடியாத நோயால் துன்புறும் 18 வயதிற்கு மேற்பட்டோரும், 6 மாதங்களுக்குள்ளேயே இறந்துவிடலாம் என மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டு நோயால் துன்புறும் மக்களும், தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள விரும்பினால், அதற்கு உதவ வழிசெய்ய உள்ள இந்த சட்டம், நவம்பர் மாதம் 7ம் தேதி முதல் அமலுக்கு வருவதையொட்டி, இந்தப் புதிய சட்டம் கத்தோலிக்க மருத்துவமனைகளில் நடைமுறைப்படுத்தப்படாது என தெரிவித்துள்ளனர் ஆயர்கள்.

தங்கள் நோயின் காரணமாக சமுதாயத்திற்கும் குடும்பத்திற்கும் சுமையாக இருக்க விரும்பாத வயதுமுதிர்ந்தோர், தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பும் வேளைகளில், அவர்கள் வாழ்வதற்கு உதவுவதே, திருஅவையின் பணியேயன்றி, அவர்கள் இறப்பதற்கு உதவுவதல்ல என, தங்கள் வலைப்பக்கத்தில் உரைக்கும் நியுசிலாந்து ஆயர்கள், ஒருவரின் அருகில் இருந்து ஆறுதல் கூறி, அவரை அன்புகூர்வதன் வழியாக, வாழ்வதற்கான நம்பிக்கையை, அவரில் ஏற்படுத்தலாம் எனவும் கூறியுள்ளனர்.

துன்புறும் நோயாளிகள் மத்தியில் பணிபுரியும் மருத்துவப்பணியாளர்கள், நல்ல சமாரியர்போல் செயல்படுவதுடன், தங்கள் மனச்சான்றிற்கு எதிராக நடக்கும்படி எந்த பணியாளரையும் வலியுறுத்தக்கூடாது எனவும், மருத்துவத்துறையினருக்கு சில  விதிகளையும் முன்வைத்துள்ளனர் ஆயர்கள்.

மனித மாண்பு எக்காரணத்தைக் கொண்டும் மீறமுடியாதது என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ள நியுசிலாந்து ஆயர்கள், தீராத நோயால் துன்புறும் நோயாளிகளின் குடும்பத்தோடு ஒருமைப்பாட்டை அறிவித்து, அவர்களோடு உடனிருக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 October 2021, 12:01