காலநிலை மாற்றப் பிரச்சனைக்கு உலக தலைவர்களிடம் தீர்வு கேட்டுப் போராடும் மக்கள் காலநிலை மாற்றப் பிரச்சனைக்கு உலக தலைவர்களிடம் தீர்வு கேட்டுப் போராடும் மக்கள்  

மனிதகுலத்தால் உருவாக்கப்பட்ட நெருக்கடிக்கு மனித குலத்திடமே..

உலகின் சுற்றுச்சூழல் நெருக்கடி, மனிதகுலத்தை அச்சுறுத்திவரும்வேளையில், நல்மனதுடைய மக்கள் அனைவரும் இணைந்து உலகின் மீதுள்ள அக்கறையை வெளிப்படுத்தவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

COP26 என்ற பெயரில் ஐ.நா.வின் காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு துவங்குவதற்கு முன்னர், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுக்கு மடல் ஒன்றை எழுதியுள்ள அந்நாட்டு கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள், பொது இல்லமாகிய உலகின் மீது அக்கறையை வெளிப்படுத்தவேண்டிய தேவையை வலியுறுத்தியுள்ளார்.

உலகின் சுற்றுச்சூழல் நெருக்கடி என்பது, மனிதகுலத்தின்மீது கருமேகமாக அச்சுறுத்தி வரும்வேளையில்,  நல்மனதுடைய மக்கள் அனைவருடன் இணைந்து உலகின் மீதுள்ள அக்கறை வெளிப்படுத்தப்படவேண்டும் என தன் மடலில் குறிப்பிட்டுள்ள கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், மனித குலத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கு, மனித குலத்தாலேயே தீர்வு காணப்படவேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளார்.

கத்தோலிக்கப் பங்குத்தளங்கள், கல்விநிலையங்கள், மறைமாவட்டங்கள் என, அனைத்தும், சுற்றுச்சூழல் சவால்களைக் களைவதில் தொடர்ந்து உழைத்துவருவதையும், பிரதமருக்கு எழுதிய தன் மடலில் குறிப்பிட்டுள்ளார், கர்தினால் நிக்கோல்ஸ்.

இன்றைய உலக சமுதாயம் எதிர்நோக்கிவரும் நெருக்கடிகளுக்கு தீர்வுகாண உதவும் நோக்கத்தில், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை சமுதாயங்களுக்கு உதவுதல், புதுப்பிக்கவல்ல பசுமை ஆற்றல் திறனை உருவாக்கி ஊக்குவித்தல், நச்சு வாயுவை வெளிப்படுத்துவதை கட்டுப்படுத்தி, உலகம் வெப்பமயமாக்குதலை தடுக்கும் பரிந்துரைகளைச் செயல்படுத்தல் என்ற மூன்று வழிகளையும் முன்வைத்துள்ளார், வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர், கர்தினால் நிக்கோல்ஸ்.

ஸ்காட்லாந்தின் Glascow நகரில், காலநிலை மாற்றம் குறித்து விவாதிக்க ஐ.நா. ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கு, அக்டோபர் மாதம் 31ம் தேதி, இஞ்ஞாயிற்றுக்கிழமை முதல் நவம்பர் 12ம் தேதி வரை, 200 நாடுகளின் தலைவர்கள், மற்றும் பிரதிநிதிகளுடன் இடம்பெறுகிறது. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 October 2021, 12:10