நாக்பூரில் நடைபெற்ற பல்சமயக் கூட்டம்  நாக்பூரில் நடைபெற்ற பல்சமயக் கூட்டம்  

சகிப்புத்தன்மை, ஏற்றுக்கொள்தல், மதங்களுக்கு பொதுவான கூறுகள்

கர்தினால் கிரேசியஸ் : வேறுபாடுகளில் கவனம் செலுத்துவதை விடுத்து, நம்மை இணைப்பவை குறித்து கவனம் செலுத்துவோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பல மதங்களின் இல்லமாகிய இந்தியா, உலகம் அனைத்தும் ஒரே குடும்பம் என்ற கருத்தில் உறுதியாக உள்ளது என, பல்மத கூட்டமொன்றில் உரையாற்றினார் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ்.

இந்தியாவின் நாக்பூர் நகரில் அக்டோபர் 24, ஞாயிறன்று இடம்பெற்ற ஒருநாள் பல்மத கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், நம்மிடையே காணப்படும் வேறுபாடுகளில் கவனம் செலுத்துவதை விடுத்து, நம்மை இணைப்பவை எவை என்பது குறித்து கவனம் செலுத்துவோம் என அழைப்பு விடுத்தார்.

இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக, பல்வேறு பாரம்பரியங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து வாழ்ந்து வந்துள்ளதை காப்பாற்றி, ஊக்குவித்து எடுத்துச் செல்லவேண்டியது ஆன்மீகத் தலைவர்களின் உன்னதக் கடமை என்பதையும் சுட்டிக்காட்டினார், மும்பை பேராயர், கர்தினால் கிரேசியஸ்.

எல்லா மதங்களுக்குள்ளும் மதப்பிரிவுகள் இருப்பினும், சகிப்புத்தன்மையும், ஏற்றுக்கொள்ளுதலும் அனைத்திற்கும் பொதுவான கூறுகள் என்றார், இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய, இந்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி.

ஒருநாள் தேசிய பல்மத கருத்தரங்கில் கலந்துகொண்ட, வாழ்வுகலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ இரவி சங்கர் உரையாற்றுகையில், மனித வாழ்வு பன்முகத்தன்மையை எதிர்பார்க்கும் வேளை, பகைமை என்பது நம் அறியாமையிலிருந்து பிறக்கிறது என்பதை வலியுறுத்தியதுடன், அனைத்து சமூகங்களும் முக்கியத்துவம் நிறைந்தவை என்பதால், ஒருவர் ஒருவரை மதித்து ஒன்றிணைந்து நடைபோடவேண்டியது அவசியம் என்பதை எடுத்துரைத்தார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2021, 15:00