ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக! - திருப்பாடல் 18,46 ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக! - திருப்பாடல் 18,46 

விவிலியத்தேடல்: திருப்பாடல் 18 - அரசரின் வெற்றிப் பாடல் 4

மன்னர் தாவீது அடைந்த துன்பங்கள், அவரை, எவ்வாறு இறைவனிடம் இன்னும் நெருங்கிவரச் செய்தன என்பதை, 18வது திருப்பாடல் பறைசாற்றுகிறது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

திருப்பாடல் 18 - அரசரின் வெற்றிப் பாடல் 4

நாம் அடையும் வேதனைகளும், துயரங்களும், கவிதைகளாக, வேறு பல கலைப்படைப்புக்களாக உருவாகின்றன என்பதையும், மன்னர் தாவீது, தன் வாழ்வில் அடைந்த வேதனைகளின் வெளிப்பாடாக, 18வது திருப்பாடலை, கவிதைநயத்துடன் உருவாக்கியுள்ளார் என்பதையும், சென்ற விவிலியத்தேடலில் சிந்தித்தோம்.

பொதுவாகவே, வேதனைகள் நம்மை வதைக்கும்போது, கடவுளைப்பற்றிய எண்ணங்கள் எழும். இந்த எண்ணங்கள், பல வேளைகளில், 'கடவுள் எங்கே?' என்ற கேள்வியாகவோ, 'கடவுள் இல்லை' என்ற அறிக்கையாகவோ உருவாக வாய்ப்புண்டு. இருப்பினும், பல வேளைகளில், வேதனைகள், கடவுளின் அருகே நம்மை இன்னும் அதிகமாக அழைத்துச்செல்லக்கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

1968ம் ஆண்டு. அமெரிக்க ஐக்கிய நாட்டின், கொலொராடோ (Colorado) என்ற நகரில், ஓர் அரங்கம், விளையாட்டு வீரகளால் நிரம்பிவழிந்தது. அரங்கத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டன. ஒரு பெரியத் திரையில் திரைப்படம் ஒன்று ஆரம்பமானது. கழி கொண்டு உயரம் தாண்டும் Pole Vault என்றழைக்கப்படும் போட்டியில், இளைஞர் ஒருவர், உலகச் சாதனை செய்ததை, அந்தத் திரைப்படம் காட்டியது. திரைப்படம் முடிந்ததும், அரங்கத்தில் கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று, கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர். ஆரவாரம் அடங்கியதும், அரங்கம் மீண்டும் இருளில் மூழ்கியது. இம்முறை, மேடையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த நாற்காலியின் மீது, ஒளிவட்டம் விழுந்தது. மேடையின் ஓர் ஓரத்திலிருந்து ஒரு விளையாட்டு வீரர், தன் இரு கரங்களில் பெரியதொரு துணி பொம்மை போன்ற ஓர் உருவத்தைச் சுமந்துவந்தார். அந்தப் பொம்மை போன்ற உருவத்தை, மேடையின் நடுவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமரவைத்து, சுற்றிலும் தலையணைகளை வைத்து முட்டுக்கொடுத்து, ஒரு புறமாய்ச் சாய்ந்திருந்தத் தலையை நிமிர்த்தி வைத்துவிட்டு, மேடையை விட்டு வெளியேறினார்.

ஒரு சில நிமிடங்களுக்கு முன், திரைப்படத்தில், உலகச்சாதனை நிகழ்த்திய Pole Vault உலகச் சாம்பியன் Brian Sternberg என்ற அந்த இளைஞர்தான், இப்போது, கழுத்துக்குக்கீழ் எல்லா உணர்வுகளையும், செயல்களையும் இழந்தவராய், ஒரு துணி பொம்மைபோல் அந்த நாற்காலியில் வைக்கப்பட்டார். ஆழ்ந்த அமைதி அரங்கத்தில் நிலவியது. மிகவும் சன்னமானக் குரலில் Brian அவர்கள், சிரமப்பட்டு பேச ஆரம்பித்தார்.

“என்னருமை நண்பர்களே, விளையாட்டு வீரர்களே, ஐந்தாண்டுகளுக்கு முன் வரை உங்களில் ஒருவனாக நான் இருந்தேன். புகழின் உச்சியில் இருந்தேன். இன்று, இதோ இந்த நிலையில் இருக்கிறேன். எனக்கு நடந்தது, உங்கள் யாருக்கும், இந்த உலகில் எந்த மனிதருக்கும் நடக்கக்கூடாதென்று தினமும் நான் இறைவனை வேண்டுகிறேன். சராசரி மனிதர்கள் செய்யக்கூடிய செயல்கள் எதையும் செய்யமுடியாமல், நான் தினமும் அனுபவிக்கும் அவமானத்தை, சித்ரவதையை நீங்கள் யாரும் அனுபவிக்கக்கூடாதென வேண்டுகிறேன். எனக்கு நடந்தது, உங்களில் யாருக்கும் நடக்கக்கூடாது என்பதே, என் செபம், என் விருப்பம், என் நம்பிக்கை... ஆனால்...” Brian அவர்கள், பேசுவதை கொஞ்சம் நிறுத்தினார். அரங்கமே ஆழ்ந்த அமைதியில் அவர் சொல்லப்போவதை இன்னும் உன்னிப்பாகக் கேட்டது. “ஆனால், இந்த வழியாகத் தான் கடவுள் உங்கள் வாழ்வின் மையத்திற்கு வரவேண்டும் என்றால், அப்படியே வரட்டும்” என்று சொல்லி முடித்தார்.

Brian அவர்கள், சொன்ன அனைத்து வார்த்தைகளும், முக்கியமாக, அவர் சொன்ன அந்த இறுதி வார்த்தைகள், அனைவர் மனதிலும் ஆழமாய்ப் பதிந்தன. "இந்த வழியாகத்தான் கடவுள் உங்கள் வாழ்வின் மையத்திற்கு வரவேண்டும் என்றால், அப்படியே வரட்டும்."

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மாணவனாய் இருந்த Brian Sternberg அவர்கள்,  pole vault போட்டியில், ஈடு இணையற்ற வீரராய் இருந்தார். 1963ம் ஆண்டு மே மாதம், 20 வயது நிரம்பிய Brian அவர்கள், பல்கலை கழக மாணவராய் இருந்தபோதே, pole vaultல் உலகச்சாதனை படைத்தார். அதே ஆண்டு, Moscowவில் நடைபெறவிருந்த உலகத் தடகளப் போட்டிகளில் பங்கேற்க, ஜூலை 6ம் தேதி, மற்ற வீரர்களுடன், வாஷிங்டனைவிட்டு, கிளம்ப தயாராக இருந்தார் Brian. ஜூலை 3ம் தேதி பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கீழே விழுந்து, தண்டுவடம் பாதிக்கப்பட்டதால், கழுத்துக்குக்கீழ், உடலெல்லாம் உணர்விழந்து, அடுத்த 50 ஆண்டுகள், சக்கர நாற்காலியில் வாழ்வைக் கழித்து, 2013ம் ஆண்டு மே, 23ம் தேதி, இறையடி சேர்ந்தார்.

20 வயதில் Brian அவர்கள், pole vaultல் உலகச்சாதனை படைத்தபோது, மிகுந்த கர்வத்துடன், யாருடனும் சமமாகப் பழகாமல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. தான், தனது சாதனைகள் என்று தன்னையே மையப்படுத்தி வாழ்ந்து வந்த Brian அவர்கள், அந்த விபத்திற்குப் பின், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, இறைவன் தன் வாழ்வின் மையமானார் என்று பல்லாயிரம் இளையோரிடம் கூறி, அவர்களது வாழ்வின் மையத்திற்கு இறைவனைக் கொண்டு வந்துள்ளார்.

Brian அவர்கள் அடைந்த வேதனைகள், அவரை இறைவனிடம் நெருங்கிவரச் செய்ததைப்போல, மன்னர் தாவீது அடைந்த துன்பங்கள், அவரை, எவ்வாறு இறைவனிடம் இன்னும் நெருங்கிவரச் செய்தன என்பதை, 18வது திருப்பாடல் பறைசாற்றுகிறது. மன்னர் தாவீது, ஆண்டவரை நெருங்கி வந்துள்ளதை உணர்த்த, 18வது திருப்பாடலில், ஆண்டவருடன் நேரடியான உரையாடலை நடத்துகிறார். இப்பாடலின் முதல் வரியில், "என் ஆற்றலாகிய ஆண்டவரே, உம்மிடம் நான் அன்புகூர்கிறேன்" என்று ஆண்டவரிடம் நேரடியாகப் பேசும் தாவீது, தொடர்ந்துவரும் வரிகளில், இந்த உரையாடல் வடிவத்தை விட்டுவிட்டு, இறைவனைப்பற்றிய கூற்றுகளை வெளியிடும் ஓர் அறிக்கை வடிவத்தை  பயன்படுத்தியுள்ளார். 2ம் இறைவாக்கியத்திலிருந்து, 24ம் இறைவாக்கியம் முடிய உள்ள 23 இறைவாக்கியங்களில், தனக்கு நேர்ந்த துன்பங்களைப்பற்றியும், அவ்வேளைகளில், ஆண்டவர் தனக்கு என்னென்ன செய்துள்ளார், அவரது இயல்பு எத்தகையது என்பனவற்றையும் ஓர் அறிக்கை வடிவில் வெளியிட்டுள்ளார். மீண்டும், 25ம் இறைவாக்கியத்தில், "ஆண்டவரே, மாறா அன்பர்க்கு மாறா அன்பராகவும், மாசற்றோர்க்கு மாசற்றவராகவும் நீர் விளங்குவீர்" என்று இறைவனை நோக்கி பேச ஆரம்பிக்கிறார் தாவீது. தொடர்ந்துவரும் 25 இறைவாக்கியங்களில், தாவீது, உரையாடல் வடிவத்தையும், அறிக்கை வடிவத்தையும், மாற்றி, மாற்றி, பயன்படுத்தியுள்ளார்.

‘அவர்’ என்று ஆண்டவரைப்பற்றி பேசும் தாவீது, ‘நீர்’ என்று ஆண்டவரிடம் பேசுவது, அழகான மாற்றம், நம்மை ஆழமாகச் சிந்திக்க வைக்கும் ஒரு மாற்றம். 'அவர்' என்ற வர்ணனை, ஆண்டவரைப்பற்றிப் பேசுவது. 'நீர்' என்பது, ஆண்டவரைப் பற்றிக்கொண்டு, அவரோடு பேசுவது.

மற்றவர்களோடு நாம் கொள்ளும் உறவில், 'நான்-தாங்கள்' (I–Thou) என்ற உயர்ந்த உறவும், 'நான்-அது' (I–It) என்ற தாழ்வான உறவும் வெளிப்படும் என்பதைச் சொன்னவர், Martin Buber என்ற மெய்யியலாளர். இதே அறிஞர், ஆண்டவரைப்பற்றி பேசுவது, ஆண்டவரை அனுபவிப்பது என்ற இரு நிலைகளைப்பற்றிக் குறிப்பிடுகிறார். ஆண்டவரைப்பற்றி பேசுவதை, அவர், இறையியல் என்றும், ஆண்டவரை அனுபவிப்பதை, மதஉணர்வு என்றும் கூறுகிறார்.

இந்த வேறுபாட்டைக் காட்ட அவர் பயன்படுத்தும் எடுத்துக்காட்டு, நமது இயல்பு வாழ்விலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. உணவு விடுதிக்குச் செல்கிறோம். அந்த உணவகத்தில் இருக்கும் உணவு வகைகளின் பட்டியல், நமது கையில், 'மெனு' (Menu) என்ற வடிவத்தில் தரப்படுகிறது. என்னதான் அழகானப் படங்களுடன், அங்குள்ள உணவு வகைகளை 'மெனு' விவரித்தாலும், அது, ஒருவேளை, நம் கண்ணுக்கு விருந்தாகுமே தவிர, நாவுக்கு விருந்தாகாது, 'மெனு'வை நம்மால் உண்ணமுடியாது. அந்தப் பட்டியலில் உள்ள உணவுவகைகளை உண்ணும்போதுதான் நமது பசி அடங்கும்.

ஒரு சில நட்சத்திர உணவு விடுதிகளில் அந்த 'மெனு'வைப் பார்த்ததும், முக்கியமாக அதில் குறிக்கப்பட்டுள்ள விலைகளைக் கண்டதும், பசியெல்லாம் பயந்து ஒளிந்துகொண்ட அனுபவங்களும் நம்மில் பலருக்கு இருக்கும். 'மெனு'வை வாசிப்பதற்கும் அதிலுள்ள உணவை உண்பதற்கும் உள்ள வேறுபாடு பெரிது. அதேபோல், இறைவனைப்பற்றி பேசுவதற்கும், அவரைப்பற்றிய புத்தகங்களை வாசிப்பதற்கும், இறைவனை வாழ்வில் அனுபவிப்பதற்கும், வேறுபாடுகள் அதிகம் உண்டு.

கடவுளைப்பற்றி 'அவர்', 'இவர்' என்று பேசும்போது அது இறையியல் ஆகிறது.  கடவுளிடம் 'நீர்' என்று மரியாதை கலந்த பாசத்தோடும், வேறு சில சமயங்களில் 'நீ' என்று நெருங்கிய உறவோடும், உரிமையோடும் பேசும்போது, அது செபமாகிறது. இறைவனை உரிமையோடு, ஆழ்ந்த உறவோடு 'நீ' என்று அழைத்து எழுதப்பட்டுள்ள பக்தி இலக்கியங்கள், தமிழ் மொழியில் உண்டு என்பது, நாம் அனைவரும் பெருமை கொள்ளும் ஓர் அம்சம்.

ஆண்டவரோடு நேரடியாக உரையாடும் பகுதிகளைக் கொண்ட ஒரு செபமாகவும், ஆண்டவரின் பண்புகளையும், அவரது உதவிகளையும் தொகுத்துரைக்கும் நன்றி அறிக்கையாகவும் விளங்கும் 18வது திருப்பாடலின் பல வரிகளை மீண்டும், மீண்டும் அசைபோடுவது, பயனுள்ள ஒரு முயற்சியாக அமையும். இம்முயற்சிக்கு உதவியாக, இத்திருப்பாடலின் ஒருசில வரிகளில் பதிவாகியுள்ள அறிக்கைகளையும், செபங்களையும நினைவுகூர்ந்து, 18வது திருப்பாடலில் நாம் மேற்கொண்ட தேடலை நிறைவுசெய்வோம்:

திருப்பாடல் 18: 1-2, 28-30, 46

  • என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்பு கூர்கின்றேன். ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண்.
  • ஆண்டவரே, நீர் என் விளக்குக்கு ஒளியேற்றுகின்றீர். என் கடவுளே, நீர் என் இருளை ஒளிமயமாக்குகின்றீர். உம் துணையுடன் நான் எப்படையையும் நசுக்குவேன்: என் கடவுளின் துணையால் எம்மதிலையும் தாண்டுவேன்.
  • இந்த இறைவனின் வழி நிறைவானது: ஆண்டவரின் வாக்கு நம்பத்தக்கது: அவரிடம் அடைக்கலம் புகும் அனைவர்க்கும் அவரே கேடயமாய் இருக்கின்றார்.

ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர் போற்றப் பெறுவராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2021, 14:38