மேய்ப்புப்பணி உதவி பெறும் குடும்பங்கள் மேய்ப்புப்பணி உதவி பெறும் குடும்பங்கள் 

மகிழ்வின் மந்திரம்: அருள், வளர்ச்சியின் பாதைகளை அடைத்துவிடாமல்..

வெளிப்புறத்தில் ஒழுங்குமுறையாகக் காட்சியளிப்பதைவிட, பெரிய மனிதப் பலவீனங்களுக்கு மத்தியில் மனம்மாற எடுத்துவைக்கப்படும் ஒரு சிறிய முயற்சி கடவுளுக்கு மிகவும் விருப்பமானது

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 8ம் பிரிவில், திருஅவையின் போதனைகளின்படி இல்லாமல், முறையற்ற மணவாழ்வை மேற்கொண்டோருக்கு மேய்ப்புப்பணி ஆற்றுவது குறித்து விளக்கியுள்ளார். அந்தப் பிரிவில் “சட்டங்களும், தெளிந்துதேர்தலும்” என்ற ஒரு தலைப்பின்கீழ் உள்ள மூன்று பத்திகளில் (304-306), 305ம் பத்தியில் திருத்தந்தை கூறியுள்ள கருத்துக்களின் சுருக்கம் இதோ...

முறையற்ற மணவாழ்வை மேற்கொண்டோர், மற்ற மக்களின் வாழ்க்கையில் கற்களை எரிகின்றார்கள் என்பதுபோல அவர்களை வெறும் நன்னெறி சட்டங்களின் அடிப்படையில் மட்டும் நடத்தினால் போதும் என, மேய்ப்புபணியாளர் உணர முடியாது. இவ்வாறு உணர்வது, அதிகார நாற்காலியில் இருந்துகொண்டு திருஅவையின் போதனைகள் என்ற போர்வையில் தன்னை மறைத்துக்கொண்டும், மூடிய இதயத்தோடும், இன்னலான விவகாரங்கள் மற்றும், காயப்பட்ட குடும்பங்களை உயர்வுமனப்பான்மை, மற்றும், மேலோட்டமாகப் பார்ப்பதைக் குறிக்கின்றது. இதே கோணத்தில்தான் பன்னாட்டு இறையியல் குழுவும் கூறியுள்ளது. நன்னெறி சார்ந்த விவகாரத்தில், ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட பொதுவான விதிமுறைகளாக, இயற்கைச் சட்டத்தை வழங்க முடியாது. மாறாக, அது, தனிப்பட்ட முறையில் தீர்மானம் எடுக்கும் வழிமுறைக்கு ஒரு தூண்டுதலாக இருக்கின்றது. புனித தாமஸ் அக்குவினாஸ் அவர்கள், பொதுவான விதிமுறை மற்றும், தெளிந்துதெரிவுசெய்யும் நடைமுறை பற்றிய அறிவு ஆகிய இரண்டும் பற்றிச் சொல்லும்போது, அவையிரண்டில் ஒன்று மட்டுமே இருக்கும்போது, ஒரு செயலுக்கு எது நெருங்கிவருகிறதோ அது பற்றிய அறிவுத்தெளிவு இருப்பது விரும்பத்தக்கது என்று கூறியுள்ளார். அறநெறிக்குப் புறம்பான ஒரு சூழல், குற்றம் சுமத்தக்கூடிய அளவுக்கு இல்லாததாக இருக்கலாம். அச்சூழலில் ஒருவர், திருஅவையின் உதவியைப் பெற்றுக்கொண்டு, கடவுளின் அருளில் வாழ முடியும், அன்புகூர முடியும், திருவருள் மற்றும், பிறரன்பு வாழ்வில் வளர முடியும். தெளிந்துதேர்தல், கடவுளின் அழைப்புக்கு பதிலிறுக்கவும், வரையறைகளுக்கு மத்தியில் வளரவும் வழிகளைக் காண்பதற்கு உதவவேண்டும். எல்லாமே முழுவதும் நல்லதுமல்ல, தீயதும் அல்ல என்று நினைத்துக்கொண்டு, நாம் சிலநேரங்களில் அருள் மற்றும் வளர்ச்சியின் பாதையை அடைத்துவிடுகிறோம், மற்றும், கடவுளுக்கு மகிமையளிக்கும் புனிதமடையும் பாதைகளைப் பின்வாங்கச் செய்கிறோம். வெளிப்புறத்தில் ஒழுங்குமுறையாகக் காட்சியளிப்பதைவிட, பெரிய மனிதப் பலவீனங்களுக்கு மத்தியில் மனம்மாற எடுத்துவைக்கப்படும் ஒரு சிறிய முயற்சியும், கடவுளுக்கு மிகவும் விருப்பமானது என்பதையும், மிகப்பெரும் சிரமங்களை எதிர்கொள்ளாமல், நாள்முழுவதும் தொடர்ந்து செயல்பட அது உதவும் என்பதையும், நாம் நினைவில் வைக்கவேண்டும். மேய்ப்புப்பணியாற்றுவோரும், குழுமங்களும், இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள தவறக்கூடாது (அன்பின் மகிழ்வு 305).

மரபுவழி ஏற்றுக்கொள்ளப்பட்ட மணவாழ்வுக்கு மாறாக வாழ்கின்ற தம்பதியருக்கு மேய்ப்புப்பணியாற்றுவோர்,  கடவுளின் திட்டத்திற்கேற்ப தெளிந்துதெரிவுசெய்யவேண்டும் என்று 305ம் பத்தியில் இவ்வாறு திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 October 2021, 14:21