திருமணமுறிவைச் சித்தரிக்கும் படம் திருமணமுறிவைச் சித்தரிக்கும் படம்  

மகிழ்வின் மந்திரம்: உறவுப் பிரச்சனைகளின்போது ஆன்மபரிசோதனை அவசியம்

திருமண அருளடையாளத்தைப் பெறாமல் கூடிவாழும் தம்பதியர், மணமுறிவு பெற்று மற்றொரு திருமண உறவில் ஈடுபட்டுள்ளோர் போன்ற அனைவரும் தங்களது நிலையை ஆய்வுசெய்ய அருள்பணியாளர்கள் உதவிசெய்யவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருமண அருளடையாளத்தைப் பெறாமல் கூடிவாழும் தம்பதியர், மணமுறிவு பெற்று  மற்றொரு திருமண உறவில் ஈடுபட்டுள்ளோர் போன்ற அனைத்து கத்தோலிக்கருக்கும் திருஅவையின் வழிகாட்டுதல்கள் அவசியம் என்பது பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 8ம் பிரிவின் 300வது பத்தியில் கூறியுள்ள கருத்துக்களின் சுருக்கம் இதோ...

திருமண அருளடையாளத்தைப் பெறாமல் கூடிவாழும் தம்பதியர், மணமுறிவு பெற்று  மற்றொரு திருமண உறவில் ஈடுபட்டுள்ளோர் போன்ற அனைவருக்கும் பொருந்தும்வண்ணம் திருஅவை சட்டத்தின்படி, பொதுவான புதிய விதிமுறைகளை வழங்குவது இயலாத காரியம். மணமுறிவுபெற்றுள்ளோர், மறுமணம் செய்துள்ளோர் ஆகியோர் திருஅவையின் போதனைகள் மற்றும் ஆயரின் வழிகாட்டுதல்களின்படி தங்களது நிலையைப் புரிந்துகொள்வதற்கு உதவவது அருள்பணியாளர்களின் கடமையாகும். இதில், அவர்கள் தங்களது நிலை பற்றி ஓர் ஆன்ம பரிசோதனை செய்வது பலனளிக்கும். இவர்கள், தங்களின் திருமண உறவில் பிரச்சனை உருவாகியபோது தங்கள் பிள்ளைகளை எவ்வாறு நடத்தினார்கள்? மீண்டும் ஒப்புரவாக முயற்சித்தார்களா? திருமண உறவைக் கைவிட்டவர் நிலை என்ன ஆனது? முந்தைய குடும்பம் மற்றும், கிறிஸ்தவக் குழுமத்தின் மீது, இந்த புதிய உறவு, எத்தகைய புதிய விளைவுகளை உருவாக்கியுள்ளது? திருமண வாழ்வுக்குத் தயார்செய்துவரும் இளவல்களுக்கு எத்தகைய எடுத்துக்காட்டாய் இருக்கின்றார்கள்? என்பது பற்றி இவர்கள் தங்கள் மனச்சான்றைப் பரிசோதித்துப் பார்க்கவேண்டும். இத்தகைய தெளிந்து தெரிவுசெய்யும் நடவடிக்கை, ஒரு குறிப்பிட்ட சூழலில், பெரிய தவறு ஒன்றும் நிகழவில்லை என்பதை உணரவைக்கும். மனசாட்சியை உண்மையாகவே ஆய்வுசெய்வது, எவருக்குமே மறுக்கப்படாத கடவுளின் இரக்கத்தில் நம்பிக்கை வைப்பதை உறுதிப்படுத்தலாம். மணமுறிவு, மற்றும், மறுதிருமண வாழ்வை வாழ்கின்ற விசுவாசிகளோடு உடன்பயணித்து, அவர்கள் தங்களின் நிலைபற்றி தெளிந்துதெரிவுசெய்ய உதவுவது, கடவுள் முன்னிலையில் அவர்கள் தங்களின் நிலை பற்றிய ஒரு விழிப்புணர்வு பெறுவதற்கு வழிநடத்துவதாக உள்ளது. இவர்கள் அருள்பணியாளர்களோடு உரையாடல் நடத்துவது, திருஅவையின் வாழ்வில் முழுமையாகப் பங்கேற்கும் வாய்ப்புக்குத் தடையாக இருப்பது குறித்தும், திருஅவையின் வாழ்வில் வளர்வதைப் பேணி ஊக்கப்படுத்துவது குறித்தும் சரியாகப் புரிந்துகொள்வதற்கு உதவும். இதில் கடைப்பிடிக்கப்படும், நிதானமான, படிப்படியானநிலை சட்டத்தில் கிடையாது. கடவுளின் விருப்பத்தை உண்மையாகவே தெளிந்துதெரிவுசெய்து அதற்குப் பணிந்துநடக்க மேற்கொள்ளப்படும் இந்த ஆன்மப் பரிசோதனைக்கு, தாழ்ச்சி, விவேகம், சுயவிருப்பம், திருஅவை மற்றும் அதன் போதனைகள் மீது அன்பு ஆகியவை கட்டாயம் தேவைப்படுகின்றன. இவை, எந்தவோர் அருள்பணியாளரும் விதிவிலக்குகளை விரைவாகவே வழங்குவார் அல்லது, சில உதவிகளை ஆற்றுவதால் அருளடையாளச் சலுகைகளைப் பெறமுடியும் என்பன போன்ற பெரிய தவறான புரிதல்களைத் தவிர்ப்பதற்கு முக்கியமானவை. (அன்பின் மகிழ்வு 300)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 October 2021, 13:28