வியட்நாமில் துறவியரின் இறுதி அர்ப்பண திருப்பலி வியட்நாமில் துறவியரின் இறுதி அர்ப்பண திருப்பலி  

கோவிட்-19க்கு மத்தியிலும் இறையழைத்தல்கள் அதிகரிப்பு

வியட்நாமில், கோவிட்-19 பெருந்தொற்றின் நான்காவது அலையின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், இவ்வாண்டில் தலத்திருஅவைக்கு 78 புதிய அருள்பணியாளர்கள் கிடைத்துள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வியட்நாம் நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றின் நான்காவது அலையின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், இவ்வாண்டின் கோடையில், அந்நாட்டில் 78 திருத்தொண்டர்கள், அருள்பணியாளர்களாகத் திருப்பொழிவு செய்யப்பட்டுள்ளனர், மற்றும், ஏறத்தாழ 250 இருபால் துறவியர், தங்களின் இறுதி அர்ப்பணங்களை எடுத்துள்ளனர்.

இந்த இறையழைத்தல்கள், வியட்நாம் திருஅவைக்கு நற்செய்தியாகவும், நம்பிக்கையின் அடையாளமாகவும் உள்ளது என்று கூறியுள்ள பீதேஸ் செய்தி நிறுவனம், பெருந்தொற்றால் "பச்சைக் குறிகள்" இடப்பட்ட தென் பகுதி மறைமாவட்ட கத்தோலிக்கர், திறந்தவெளிகளில் எளிமையான முறையில், திருப்பலிகளில் பங்குகொள்கின்றனர் என்று கூறியுள்ளது.

வழிபாடுகள் நடைபெற அனுமதிக்கப்பட்ட இப்பகுதிகளில், இந்நிகழ்வுகள், ஆடம்பரமின்றி, அவரவர் துறவு இல்லங்கள், மற்றும், அருள்பணித்துவ பயிற்சி கல்லூரிகளில் நடைபெற்றன.

இந்நிகழ்வுகள் பற்றி அறிக்கை வெளியிட்ட, Ho Chi Minh பேராயர் Joseph Nguyen Nang அவர்கள், அர்ப்பணிக்கப்பட்ட துறவியர், சிறப்பாக, கோவிட்-19 பெருந்தொற்று சூழலில், தங்களின் கிறிஸ்தவ நம்பிக்கைக்கும், பிறரன்பிற்கும் சான்றுகளாக வாழுமாறு கேட்டுக்கொண்டார் எனவும், பீதேஸ் செய்தி கூறுகிறது. 

மேலும், கோவிட்-19 பெருந்தொற்றால், "சிவப்பு குறிகள்" இடப்பட்டுள்ள பகுதிகளில், அருள்பணியாளர்கள் திருப்பொழிவு, மற்றும், இருபால் துறவியரின் இறுதி அர்ப்பண நிகழ்வுகள், தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளன எனவும் பீதேஸ் செய்தி கூறியுள்ளது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 September 2021, 15:16