"நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" - மாற்கு 8:29 "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" - மாற்கு 8:29 

பொதுக்காலம் 24ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

இயேசு நமக்கு கொடுக்கும் அழைப்புதான், "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்ற நேரடியானக் கேள்வி. இவ்வழைப்பின் உயிர்நாடியாக, தன்னலம் மறந்து, சிலுவையைச் சுமந்து, இயேசுவைப் பின்தொடர்வது, என்ற சவால் அமைந்துள்ளது.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 24ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

செப்டம்பர் 5, கடந்த ஞாயிறன்று, ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறன் கொண்டோரின் பாராலிம்பிக் விளையாட்டுகள் நிறைவுபெற்றன. அதற்கு நான்கு வாரங்களுக்கு முன்னதாக, ஆகஸ்ட் 8ம் தேதி, அதே நகரில், ஒலிம்பிக் விளையாட்டுகள் நிறைவுபெற்றன.

ஒன்றையொன்று தொடர்ந்து வந்த, ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுகள், எந்த அடிப்படையில், விளையாட்டு வீரர்களை, நாம் அடையாளப்படுத்துகிறோம் என்பதை புரிந்துகொள்ள, உதவியாக உள்ளன. இந்த சிந்தனைகளை இன்னும் சிறிது விரிவாக்கி, நாம், பொதுவாகவே, நம்மையும், பிறரையும் எதன் அடிப்படையில்,  அடையாளப்படுத்துகிறோம் என்பதை சிந்திப்பது நமக்கு உதவியாக இருக்கும். நம் சுய அடையாளத்தை நாம் எவ்வாறு உருவாக்குகிறோம் என்ற முக்கியமான எதார்த்தத்தை சிந்திக்க, இந்த ஞாயிறு வழங்கப்பட்டுள்ள நற்செய்தி, நம்மை அழைக்கிறது.

அடையாளப்படுத்துதல் பற்றிய நம் சிந்தனைகளை, ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுகளுக்குத் தரப்பட்டுள்ள விருதுவாக்குகளிலிருந்து துவக்குவோம். ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள், அந்தந்த நாடுகளின் பிரதிநிதிகளாகப் பங்கேற்றாலும், தனி மனிதத் திறமையையும், சக்தியையும் வெளிச்சமிட்டுக் காட்டும்வண்ணம் ஒலிம்பிக் விளையாட்டுகளின் விருதுவாக்கு அமைக்கப்பட்டுள்ளது. நவீன ஒலிம்பிக் விளையாட்டுகளை, 1894ம் ஆண்டு துவக்கிவைத்த Pierre de Coubertin அவர்கள், இந்த விளையாட்டுகளுக்கு, “Citius, Altius, Fortius” என்ற மூன்று இலத்தீன் சொற்களை விருதுவாக்காக வடிவமைத்தார். “Faster, Higher, Stronger” அதாவது, "இன்னும் வேகமாக, இன்னும் உயரமாக, இன்னும் சக்திமிக்கதாக" என்பது இதன் பொருள்.

125 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்ட “Faster, Higher, Stronger” என்ற மூன்று சொற்களுடன், இவ்வாண்டு, கூடுதலாக ஒரு சொல்லை இணைத்து, "Faster, Higher, Stronger - Together" என்ற புதிய விருதுவாக்கை, ஒலிம்பிக் குழு அறிவித்தது. ஒவ்வொருவரும் தான் மட்டும் தனித்து உயர்வடையமுடியாது, அனைவரும் இணைந்தால் மட்டுமே உயரமுடியும், இல்லையேல் நம் அனைவருக்கும் தாழ்வே என்பதை, கோவிட் பெருந்தொற்று நமக்கு தெளிவாக உணர்த்தியதைத் தொடர்ந்து, 'ஒன்றிணைந்து' என்ற சொல் இந்த விருதுவாக்கில் இணைக்கப்பட்டுள்ளது.

நம் சிந்தனைகள், தற்போது, பாராலிம்பிக் விளையாட்டுகள் பக்கம் திரும்புகின்றன. 1960ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் பாராலிம்பிக் விளையாட்டுகளுக்கு, "Spirit in Motion" அதாவது, "இயக்கத்தில் ஆன்மா" என்ற சொற்கள், விருதுவாக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, மனிதரின் உள்ளார்ந்த ஆன்மீக சக்தி இயங்கினால், எத்தனை தடைகளையும் தாண்டமுடியும் என்பதை வலியுறுத்தும்வண்ணம், இந்த விருதுவாக்கு அமைந்துள்ளது.

பாராலிம்பிக் விளையாட்டுகளில் கலந்துகொள்ளும் பெரும்பாலான வீரர்கள், ஒரு விபத்தால், அல்லது, அவர்களுக்கு வழங்கப்பட்ட தவறான மருத்துவ சிகிச்சையால் மாற்றுத்திறனாளிகளாக மாறியுள்ளனர். துயரமான இந்நிகழ்வுகள், இவர்கள் வாழ்வில் குறுக்கிடாமல் போயிருந்தால், ஒருவேளை, இவர்கள், ஏனைய இளையோரைப் போல சராசரி வாழ்வை நடத்தியிருக்கக்கூடும். இவர்களுக்கு நேர்ந்த துயர நிகழ்வும், அதனால் ஏற்பட்ட இழப்பும், இவர்களது ஆற்றலை புதியதொரு வடிவில் வெளிக்கொணர உதவின என்று உறுதியாகச் சொல்லமுடியும்.. தங்களுக்கு நேர்ந்த இழப்பினால் மனம் உடைந்து, அந்த குறைபாட்டையே தங்கள் சுய அடையாளமாக உள்வாங்கி, விரக்தியுடன் வாழாமல், இவர்கள், புதியதோர் அடையாளத்தை தங்களுக்கு வழங்கிக்கொண்டதோடு, தங்களைப்போல் மாற்றுத்திறன் கொண்டோருக்கு நம்பிக்கை வழங்கிவருகின்றனர் என்பதை, பாராலிம்பிக் விளையாட்டுகள் வெளிச்சமிட்டு காட்டின.

உடலளவில் இழப்புகள் இன்றி சராசரி வாழ்க்கை நடத்தும் நாம், நம்மிடமுள்ள நிறைகளிலிருந்து நம் சுய அடையாளத்தை பெறுகிறோமா? அல்லது, நம் குறைகளையே பெரிதுபடுத்தி, நம் சுய அடையாளத்தை இழக்கிறோமா? இந்த ஞாயிறு வழிபாடு, நம் உண்மையான அடையாளத்தைக் கண்டுகொள்ள வாய்ப்பு வழங்குகிறது.

சுய அடையாளத் தேடல்களில் அடிக்கடி, அல்லது, அவ்வப்போது ஈடுபட்டுள்ளோம். நான் யார்? என்ற கேள்வியுடன், நம்மை நாமே தேடும் நேரங்களில், மற்றவர்களுக்கு நான் யார்? மற்றவர்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்? என்ற கேள்விகள், நம் தேடலில் முக்கிய இடம் வகிக்கின்றன. இயேசுவுக்கும் இத்தகையக் கேள்விகள் எழுந்தன. இன்றைய நற்செய்தியில், (மாற்கு 8: 27-35) "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்று இயேசு எழுப்பும் இரு கேள்விகள், நம் சிந்தனைகளை இன்று வழிநடத்தட்டும்.

"நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்று, இயேசு எழுப்பிய முதல் கேள்வியைச் சிந்திக்கும்போது, சென்னையில், அரசு அதிகாரிகள் பகிர்ந்துகொண்ட சில தகவல்கள், நினைவுக்கு வருகின்றன. ஒவ்வொரு நாளும், அன்று காலையிலும், முந்திய நாள் இரவிலும், ஊடகங்களில் வந்த தகவல்களை சேகரித்து, வகைப்படுத்தி, வரிசைப்படுத்தி, பிரதமர், அல்லது, முதலமைச்சரிடம் கொடுப்பதற்கென அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாட்டில், அல்லது, மாநிலத்தில், தங்களைப்பற்றி, தங்கள் ஆட்சியைப்பற்றி, மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதே, இத்தகவல்களைத் திரட்டுவதன் முக்கிய நோக்கம்.

ஒவ்வொரு நாள் காலையிலும், இத்தலைவர்களின் எண்ணங்களை ஆக்ரமிக்கும் அக்கேள்வியின் பின்னணியில், அவர்களை உறுத்திக்கொண்டிருப்பன, பயமும், சந்தேகமும். மக்களை மையப்படுத்தி, அவர்கள் நலனை, நாள் முழுவதும் சிந்தித்து, செயல்படும் தலைவனுக்கோ, தலைவிக்கோ, இந்தக் கேள்வி பயத்தை உண்டாக்கத் தேவையில்லை.

மக்களின் நலனில் அக்கறையின்றி, அரியணையை விடாமல் பிடித்துக்கொண்டிருக்க நினைக்கும் தலைவர்கள், இன்று மட்டும் அல்ல, இயேசுவின் காலத்திலும் வாழ்ந்தனர். அத்தகையத் தலைவர்களில் ஒருவரான பிலிப்பு, வரலாற்றில் இடம்பிடிப்பதற்கென உருவாக்கிய ஒரு பிரம்மாண்டமான நகரை நோக்கி, இயேசு பயணம் மேற்கொண்டபோது, தன்னைப்பற்றிய கேள்விகளை எழுப்பி, தான் யார், தன் பணி என்ன என்ற தெளிவையும் வழங்கினார்.

இயேசு, பிலிப்புச் செசரியாவைச் சேர்ந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்ற வழியில், இக்கேள்விகளைக் கேட்டார் என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். மன்னன் ஏரோதின் மகன் பிலிப்பு, தன் நினைவாகவும், சீசரின் நினைவாகவும் உருவாக்கிய பிரம்மாண்டமான நகரம், பிலிப்பு செசரியா. மேலும், அப்பகுதியில், பால் (Bal), பான் (Pan), சீயுஸ் (Zeus) ஆகிய கடவுள்களுக்கு கோவில்களும் இருந்தன.

அரசர்கள், மற்றும், கடவுள்களின், அருமை பெருமைகளை அடையாளப்படுத்தும், பிரம்மாண்டமான நினைவுச்சின்னங்கள் அடங்கிய அப்பகுதியில், சீடர்களின் எண்ணங்களில், தான் எத்தகைய அடையாளத்தைப் பதித்திருக்கிறோம் என்பதை உணரவிழைந்தார் இயேசு. அத்துடன், தன் அடையாளமாக, சிலுவை, இவ்வுலகில் தொடரவேண்டும் என்பதையும், ஒரு பாடமாக அவர்களுக்கு வழங்கினார்.

"நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்று, இயேசு தன் சீடர்களிடம் கேட்ட இரண்டாவது கேள்வி, அவர்களிடமும், நம்மிடமும் எழுப்பப்படும் நேரடியான கேள்வி. "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்ற கேள்விக்கு, சிறு வயது முதல், அம்மாவிடம், அப்பாவிடம், ஆசிரியர்களிடம் நாம் பயின்றவற்றையும், மறைக்கல்வியில் மனப்பாடம் செய்தவற்றையும் வைத்து, பதில்களைச் சொல்லிவிடலாம். ஆனால், இந்த இரண்டாவது கேள்விக்கு அப்படி எளிதாகப் பதில் சொல்லிவிடமுடியாது. நாம் படித்து, மனப்பாடம் செய்தவற்றைவிட, நம் மனதில் பதிந்து, நம் வாழ்வை மாற்றும் நம்பிக்கையே, இந்தக் கேள்விக்குரிய பதிலைத் தரமுடியும்.

இயேசுவின் இந்தக் கேள்வி, வெறும் கேள்வி அல்ல. இது ஓர் அழைப்பு. அவரது பணி வாழ்விலும், பாடுகளிலும் பங்கேற்க, அவர் தரும் அழைப்பு. இயேசுவை, இறைவன், தலைவர், மீட்பர் என்று, பல அடைமொழிகளில் அழைப்பது எளிது. ஆனால், அவர்மீது கொள்ளும் நம்பிக்கையினை, வாழ்வில் செயல்படுத்துவது எளிதல்ல. செயல் வடிவம் பெறாத நம்பிக்கை வீண் என்று, இன்றைய இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் யாக்கோபு கூறுகிறார்:

யாக்கோபு 2 14-17

என் சகோதர சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச்சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டாவிட்டால், அதனால் பயன் என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா? ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல், உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, "நலமே சென்று வாருங்கள்; குளிர்காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக் கொள்ளுங்கள்" என்பாரென்றால் அதனால் பயன் என்ன? அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால், தன்னிலே உயிரற்றதாயிருக்கும்.

இறைவனை, இயேசுவை அனுபவத்தில் உணர்ந்தால், அவர்மீது உண்மையான நம்பிக்கை கொண்டால், வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். அதன் விளைவாக, பல சவால்களைச் சந்திக்கவேண்டியிருக்கும். நம் மனதைக் கவர்ந்த ஒருவரை, வானளாவப் புகழ்வது, எளிது. அவரை நம்பி செயல்படுவதோ, வாழ்வதோ, எளிதல்ல. இந்த உண்மையை உணர்த்தும் ஒரு கதை இது.

உலகப் புகழ் பெற்ற ஒரு கழைக்கூத்துக் கலைஞர், இரு அடுக்கு மாடிகளுக்கிடையே கயிறு கட்டி, சாகசங்கள் செய்துகொண்டிருந்தார். அவரது சாகசங்களில் ஒன்று... கண்களைக் கட்டிக்கொண்டு, மணல் மூட்டைகள் வைக்கப்பட்ட ஒரு கை வண்டியைத் தள்ளிக்கொண்டு, அந்தக் கயிற்றில் நடப்பது.

அதையும் அற்புதமாக அவர் முடித்தபோது, இரசிகர் ஒருவர் ஓடிவந்து, அவரது கரங்களை இறுகப் பற்றிக்கொண்டு, "அற்புதம், அபாரம். நீங்கள்தான் உலகிலேயே மிகச் சிறந்த கழைக்கூத்துக் கலைஞர்" என்று புகழ்மாலைகளைச் சூட்டினார். "என் திறமையில் உங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளதா?" என்று அந்தக் கலைஞர் கேட்டார்.

"என்ன, அப்படி சொல்லிவிட்டீர்கள்? உங்கள் சாகசங்களைப்பற்றி நான் கேள்விப்பட்டபோது, நான் அவற்றை நம்பவில்லை. இப்போது, நானே நேரில் அவற்றைக் கண்டுவிட்டேன். இனி உங்களைப்பற்றி மற்றவர்களிடம் சொல்வதுமட்டுமே என் முக்கிய வேலை" என்று பரவசப்பட்டுப் பேசினார் இரசிகர். "மற்றவர்களிடம் என்னைப்பற்றிச் சொல்வது இருக்கட்டும். இப்போது ஓர் உதவி. செய்வீர்களா?" என்று கேட்டார், அந்தக் கலைஞர். "உம்.. சொல்லுங்கள்" என்று இரசிகர் ஆர்வமாய் சொன்னார்.

"நான் மீண்டும் ஒருமுறை அந்தக் கயிற்றில் தள்ளுவண்டியோடு நடக்கப்போகிறேன். இம்முறை, அந்த மணல் மூட்டைகளுக்குப் பதில், நீங்கள் அந்த வண்டியில் அமர்ந்து கொள்ளுங்கள்... பத்திரமாக உங்களைக் கொண்டுசெல்கிறேன். பார்க்கும் மக்கள் இதை இன்னும் அதிகம் இரசிப்பார்கள். வாருங்கள்..." என்று அழைத்தார். அந்த இரசிகர், இருந்த இடம் தெரியாமல், காற்றோடு கரைந்தார்.

அந்தக் கழைக்கூத்துக் கலைஞரின் சாகசங்களை நேரில் பார்த்து வியந்த அந்த இளைஞர், அந்த அற்புதக் கலைஞரின் அருமை பெருமைகளை உலகறியச் செய்யப்போவதாக உறுதியளித்தார். ஆனால், அதே கழைக்கூத்துக் கலைஞர், தான் மேற்கொள்ளப்போகும் முயற்சி ஒன்றில் பங்கேற்க அந்த இளைஞரை அழைத்தபோது, அவர் காற்றோடு மறைந்துபோனார்.

நூல்கள் வழியாகவும் பிறரது விளக்கங்கள் வழியாகவும் இயேசுவைப் பற்றி அறிந்து, அந்த பிரமிப்பில் நாம் இருக்கும்போது, இயேசு நம்மிடம் "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்டால், நம் பதில்கள் ஆர்வமாய் ஒலிக்கும். ஆனால், அந்த பிரமிப்பு, இரசிப்பு இவற்றோடு மட்டும் நாம் இயேசுவை உலகறியப் பறைசாற்றக் கிளம்பினால், புனித பவுல் சொல்வது போல், "ஒலிக்கும் வெண்கலமும், ஓசையிடும் தாளமும் போலாவோம்." (1 கொரி. 13: 1)

எனவே, இயேசு நம்மை அடுத்த நிலைக்கு வருவதற்கு கொடுக்கும் அழைப்புதான், "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்ற நேரடியானக் கேள்வி. இது வெறும் கேள்வி அல்ல, இது ஓர் அழைப்பு. இவ்வழைப்பின் உயிர்நாடியாக, தன்னலம் மறந்து, சிலுவையைச் சுமந்து, இயேசுவைப் பின்தொடர்வது, என்ற சவால் அமைந்துள்ளது. நம் சொந்த வாழ்விலும், அயலவர் வாழ்விலும், மாற்றங்களை ஏற்படுத்த, இயேசு தரும் இந்த அழைப்பிற்கு, உள்ளத்தின் ஆழத்திலிருந்து, உறுதியோடு எழட்டும், நம் பதில்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 September 2021, 14:20