தேடுதல்

இலங்கை பள்ளி மாணவர்கள் இலங்கை பள்ளி மாணவர்கள் 

ஆசிரியர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக இலங்கை ஆயர்கள்

கடந்த 78 நாட்களாக 2 இலட்சத்து 60,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தங்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்பட இலங்கையில் போராட்டம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நியாயமான ஊதியத்துக்காகவும், அதுவும் காலதாமதமின்றி வழங்கப்படவேண்டும் எனவும் விண்ணப்பித்து கடந்த இரு மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் குரல்களுக்கு இலங்கை அரசு செவிமடுக்கவேண்டும் என, அந்நாட்டின் அனைத்து கத்தோலிக்க ஆயர்களும் அழைப்புவிடுத்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருந்த ஆசிரியர்களின் குறைகளுக்கு அரசும், அரசியல் தலைவர்களும் செவிமடுத்து, மாணவர்கள் மீண்டும் கல்விநிலையங்களுக்குச் செல்ல வழிவகுக்கவேண்டும் என விண்ணப்பிக்கும் இலங்கை ஆயர்கள், ஆசியாவிலேயே மிகக் குறைந்த அளவில் ஊதியம் பெறும் ஆசிரியர்களுள், இலங்கை ஆசிரியர்களும் அடங்குவர் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கோவிட்-19 பெருந்தொற்றால் இன்னும் பாதிப்பைக் கண்டுவரும் இலங்கை நாட்டில், ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தால், இணையத்தளம் வழியான தொலைதூரக்கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 78 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் 2 இலட்சத்து 60,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தங்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படவேண்டும், அதுவும் காலதாமதமின்றி வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை  முன்வைத்துள்ளனர். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 September 2021, 15:00