தேடுதல்

கியூபாவில் ஓர் ஏழை தாய்க்கு உதவி கியூபாவில் ஓர் ஏழை தாய்க்கு உதவி  

கியூபா மக்களுக்கென சுலோவாக்கியா கோவில்களில் நிதி திரட்டல்

வறியோரின் துயர்துடைக்க நம்மால் இயன்றதை ஆற்றவேண்டும் என, தன் திருத்தூதுப்பயணத்தில் திருத்தந்தை விடுத்த அழைப்பை ஏற்று சுலோவாக்கியா நாட்டினரின் உதவி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கியூபா நாட்டில் துன்புறும் ஏழைமக்களுக்கு உதவும் நோக்கத்தில், செப்டம்பர் 26, வரும் ஞாயிற்றுக்கிழமை, சுலோவாக்கியா நாட்டின் அனைத்துக் கோவில்களிலும், நன்கொடை திரட்டப்படும் என தலத் திருஅவை ஆயர்கள் அறிவித்துள்ளனர்.

செப்டம்பர் மாதம் 12ம் தேதி, ஞாயிறு மாலை முதல் 15ம் தேதி புதன்கிழமை வரை, சுலோவாக்கியா நாட்டில் திருத்தூதுப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழை எளிய மக்களின் துயர்துடைக்க நம்மால் இயன்ற உதவிகளை ஆற்றவேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதன் கனிகளுள் ஒன்றாக, கியூபா நாட்டிற்கான இவ்வுதவி இருக்கும் என ஆயர்களின் அறிக்கைக் கூறுகிறது.

கியூபா நாட்டில் துயருறும் மக்களுக்கென, வரும் ஞாயிறன்று கோவில்களில் நிதி திரட்டப்படும் என, செப்டமபர் 19, ஞாயிற்றுக்கிழமை சுலோவாக்கியாவின் அனைத்துக் கோவில்களிலும் அருள்பணியாளர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இப்பெருந்தொற்றுக் காலத்தில் வறுமை நிலைகள் அதிகரித்துள்ளதால், துயருறும் மக்களுக்கு உதவவேண்டிய நம் கடமையை வெளிப்படுத்தும் விதத்தில், நம்மிடம் இருப்பதை, மற்றவர்களுடன் பகிர முன்வரவேண்டும் என, ஆயர்கள், தங்கள் அறிக்கையில், விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

சுலோவாக்கியா மக்களுக்கு உதவி தேவைப்பட்ட கடந்த காலங்களில், ஏனைய நாட்டு மக்கள் முன்வந்து உதவியதை மனதில்கொண்டு, நாமும் உதவ வேண்டியது அவசியம் என்பதையும், ஆயர்கள், தங்கள் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 September 2021, 14:28