தேடுதல்

திருத்தந்தையர்களின் மறைமாவட்ட தலைமை ஆலயம்(புனித ஜான் இலாத்தரன்) திருத்தந்தையர்களின் மறைமாவட்ட தலைமை ஆலயம்(புனித ஜான் இலாத்தரன்) 

திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தை 2ம் அலெக்ஸாண்டர்

திருத்தந்தை இரண்டாம் அலக்சாண்டரோ, திருஅவையில் மாற்றங்களை அதிரடியாகப் புகுத்தினார். தவறு செய்த அருள்பணியாளர்களையும், ஆயர்களையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் செய்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

     திருத்தந்தையர் தேர்தலிலும், திருஅவை நிர்வாகத்திலும் பல மாற்றங்களைக் கொணரவிரும்பிய திருத்தந்தை இரண்டாம் நிக்கொலஸ் பல்வேறு எதிர்ப்புக்களைச் சந்தித்து 1061ம் ஆண்டு உயிரிழந்தபோது, இம்மாற்றங்கள் தொடருமா? அல்லது பழைய நிலைக்கே திரும்புமா என்ற கேள்வி தொக்கி நின்றது. அடுத்து பதவியேற்கும் திருத்தந்தையைப் பொறுத்து இம்மாற்றங்கள் தொடர்வது இருக்கும் என்பதால், அடுத்த திருத்தந்தை யார் என்பதில் ஆர்வம் அதிகமாக இருந்தது.

     இத்தாலியின் மிலான் பகுதியின் பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த ஆன்செல்ம் (Anselm) என்பவர், ஏற்கனவே திருஅவையில் நல்ல மாற்றங்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தார். Hildebrandடன் இணைந்து Cluny சபை வழியாக சீர்திருத்தங்களைப் புகுத்த முனைந்து கொண்டிருந்த ஆன்செல்மைக் கொஞ்சம் அமைதிப்படுத்த விரும்பிய பேராயர் குய்தோவும் (Guido), இத்தாலியின் லொம்பார்தியா பகுதி ஆயர்களும் இணைந்து, அவரை பேரரசர் மூன்றாம் ஹென்றியின் அரசவைக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் நினைத்தது ஒன்று, ஆனால் நடந்ததோ வேறொன்று. ஜெர்மனியில் பேரரசர் அவைக்குச் சென்ற ஆன்செல்ம், அந்நாட்டுத் திருஅவையில் சீர்திருத்தங்களை புகுத்த முனைந்தார். 1057ம் ஆண்டு பேரரசர் இவரை Luccaவின் ஆயர் பணிக்கு நியமித்தார். அதே ஆண்டு Hildebrandடனும், 1059ல் புனித பீட்டர் தமியானுடனும் மிலானுக்கு திருப்பீடப் பிரதிநிதியாகச் செல்லும் நியமனமும் பெற்றார் ஆயர் ஆன்செல்ம். இதற்கிடையில், 1059ம் ஆண்டு வெளியிடப்பட்ட திருத்தந்தையர் தேர்தல் விதிமுறைகள், திருஅவைக்குள் இவ்விதி முறைகளின் ஆதரவாளர்கள் - எதிர்ப்பாளர்கள் என்ற இருபிரிவுகளை உருவாக்கியது. இரண்டாண்டுகளில் திருத்தந்தை நிக்கொலஸ் மரணமடைய,  Hildebrandன் ஆதரவாளர்கள், Lucca மறைமாவட்ட ஆயர் ஆன்செல்மை முன்மொழிய, இன்னொரு குழுவோ இத்தாலியின் Parma ஆயர் Cadalusன் பெயரை முன்மொழிந்தது.

இரு பெயர்கள் முன்வைக்கப்பட, கர்தினால்களோ, தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு ஒன்றுகூடி ஆன்செல்ம் என்ற இயற்பெயர் கொண்டிருந்த ஆயர் Luccaவையே தேர்வு செய்ய, அவரும் இரண்டாம் Alexander என்ற பெயரைத் தேர்வு செய்தார். அவரைத்  திருத்தந்தையாக திருநிலைப்படுத்துவதற்கு முன்னர், முறைப்படி ஒரு குழுவை ஜெர்மனிக்கு அனுப்பி, அதனைப் பேரரசரின் அவையில் அறிவிக்க முனைந்தனர் கர்தினால்கள். ஆனால், புதிய தேர்தல் விதிகளால் கோபமுற்றிருந்த பேரரசரின் அவை, கர்தினால்கள் அனுப்பிய தூதுக்குழுவை சந்திக்காமலேயே திருப்பி அனுப்பிவிட்டது. இதனால், உள்நாட்டு மோதல் ஏற்படும் அபாயம் இருப்பதை உணர்ந்த கர்தினால்கள், செப்டம்பர் 30ம் தேதி திருத்தந்தை இரண்டாம் அலக்சாண்டரை திருத்தந்தையாக திருநிலைப்படுத்தி பதவியிலமர்த்தினர். கர்தினால்களின் தூதுவர் குழு அவமானப்பட்டு திரும்பியதால் மகிழ்ச்சியடைந்த உரோமைப் பிரபுக்கள், இத்தாலியின் லொம்பார்தியா பகுதி ஆயர்களுடன் இணைந்து ஒரு குழுவை ஜெர்மன் பேரரசர் மன்றத்திற்கு அனுப்பினர். அப்போது பேரரசர் 4ம் Henryக்கு 10 வயது தான். ஆகவே, அவரின் தாய் ஆக்னஸ் அவர்களே பேரரசியாக பதிவிப் பொறுப்பில் இருந்தார். ஆகவே, அவர் Basle என்ற இடத்தில் சில திருஅவைத் தலைவர்கள், மற்றும் பொதுநிலைப் பிரதிநிதிகளைக் கொண்ட ஓர் அவையைக் கூட்டினார். அக்கூட்டத்தில் ஒரு கர்தினால்கூட பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், பேரரசியோ Parma ஆயர் Cadalusஐ திருத்தந்தையாக அறிவித்தார். அவரும், இரண்டாம் ஹொனாரியுஸ் (Honorius) என்ற பெயரை எடுத்துக் கொண்டார். இப்போது  ஒரே நேரத்தில் இரு திருத்தந்தையர்கள். ஒருவர் முறையாக கர்தினால்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை இரண்டாம் அலெக்ஸாண்டர். அடுத்தவரோ, பேரரசரால் நியமிக்கப்பட்ட ஹொனாரியுஸ்.

திருத்தந்தை இரண்டாம் அலெக்ஸாண்டரோ திருஅவைக்குள் பல்வேறு மாற்றங்களை புகுத்த விரும்பியவர். அவருக்கு பொது மக்களின் ஆதரவு பலமாக இருந்தது. தென் இத்தாலியின் நார்மண்டியர்களும், Tuscany பகுதி ஆட்சியாளர்களும் திருத்தந்தை இரண்டாம் அலெக்ஸாண்டரை ஆதரித்தனர். அதேவேளை, ஜெர்மனியிலும் இத்திருத்தந்தைக்கு ஆதரவான ஒரு சூழல் உருவாகியது. Cologne ன் பேராயர் Anno என்பவர், அரசி ஆக்னசின் ஆட்சிக்கு எதிராக ஒரு குழுவுடன் இணைந்து ஆட்சியைக் கைப்பற்றிய Kaiserswerth ஆட்சிக் கவிழ்ப்பில், இளவரசராக இருந்த 4ம் ஹென்றியின் மீதான அதிகாரம் முழுவதும் பேராயர் Annoவின் கைகளில் வந்தது. பேரரசியோ ஒரு துறவு மடத்துக்குள் புகுந்து தன் வாழ்வை அங்கேயே செலவிடத் துவங்கினார். இப்போது, 1062ம் ஆண்டு Augsburgyல் கூடிய அவையோ, Burchard என்ற ஆயரை தேர்வு செய்து, திருத்தந்தை அலக்சாண்டர்  தேர்வுச் செய்யப்பட்டது குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உரோம் நகருக்கு அனுப்பியது. இவ்வறிக்கை ஜெர்மன் மற்றும் இத்தாலிய ஆயர்களுக்கு சமர்ப்பிக்கப்படயேண்டும் எனவும் கோரப்பட்டது. ஆயர் Burchardம் உரோம் நகரில் முழு விசாரணைகளை மேற்கொண்டு தன் அறிக்கையை சமர்ப்பித்தார். அது முற்றிலுமாக திருத்தந்தை இரண்டாம் அலக்சாண்டருக்கு சார்பாகவே இருந்தது. இதனால் திருத்தந்தை இரண்டாம் அலக்சாண்டர், முறையான திருத்தந்தையாக அறிவிக்கப்பட்டார்.

    திருத்தந்தை இரண்டாம் அலக்சாண்டர் அங்கீகரிக்கப்பட்டதால், பேரரசியால் திருத்தந்தையாக அறிவிக்கப்பட்ட இரண்டாம் ஹொனாரியுஸ்,  திருஅவையிலிருந்து விலக்கிவைக்கப்பட்டார். ஆயினும், 1072ம் ஆண்டு உயிரிழக்கும்வரை, இரண்டாம் ஹொனாரியுஸ், திருத்தந்தையாவதற்குரிய முயற்சியை விட்டுவிடவில்லை. அதேவேளை, திருத்தந்தை இரண்டாம் அலக்சாண்டரோ, திருஅவையில் மாற்றங்களை அதிரடியாகப் புகுத்தினார். தவறு செய்த அருள்பணியாளர்களையும், ஆயர்களையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் செய்தார். இத்திருத்தந்தைக்கு ஆதரவளித்த ஜெர்மன் நாட்டு இளவரசரின் பொறுப்பாளர், பேராயர் Anno தவறு செய்தபோதுகூட, அவரை வெறுங்காலுடன் நடந்து பாவப்பரிகாரம் செய்யப் பணித்தார். மன்னர் நான்காம் ஹென்றி, தன் மனைவி Berthaவை விவாகரத்து செய்ய முயன்றபோது, தன் பிரதிநிதியாக புனித பீட்டர் தமியானை அனுப்பி, மன்னரை திருஅவையை விட்டு விலக்க உள்ளதாக எச்சரித்தார். இதற்கிடையே, மிலான் பேராயரை நியமிப்பதில் மன்னருக்கும் திருத்தந்தைக்கும் இடையே மோதல் உருவாகியது. இத்தகைய ஒரு சூழலில் 1073ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் அலக்சாண்டர் உயிரிழந்தார்.

    திருத்தந்தை இரண்டாம் அலக்சாண்டருக்கும் மன்னருக்கும் இடையே துவங்கிய மோதல், அடுத்த திருத்தந்தையின் காலத்தில்  எவ்வாறு தீர்வுகாணப்பட்டது என்பது குறித்து வரும் வாரம் காண்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 September 2021, 15:15