தேடுதல்

போலந்து திருப்பயணிகள் போலந்து திருப்பயணிகள் 

வாழ்வுக்கும் குடும்பத்திற்கும் ஆதரவாக போலந்து நடைப்பயணம்

'ஒரு தந்தையின் இருப்பும், வழிகாட்டுதலும், வழங்கும் பாதுகாப்பும்', என்ற தலைப்பில் போலந்தின் 16வது தேசிய நடைப்பயணம் இடம்பெற்றது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வாழ்வுக்கும் குடும்பத்திற்கும் ஆதரவளிக்கும், போலந்து நாட்டின் 16வது தேசிய நடைப்பயணம் ஏறக்குறைய ஐயாயிரம் பேர் பங்கேற்புடன், செப்டம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

'ஒரு தந்தையின் இருப்பும், வழிகாட்டுதலும், வழங்கும் பாதுகாப்பும்' என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்த நடைப்பயணம், போலந்து மக்களுக்கு மட்டுமல்ல, உலகின் அனைத்து மக்களுக்கும், வாழ்வு மற்றும் குடும்பம் குறித்த ஒரு சிறப்புச் செய்தியை வழங்குகிறது என்றார், வாழ்வு மற்றும் குடும்பத்திற்கான போலந்து தேசிய மையத்தின் தலைவர், Pawael Ozdoba.

தங்கள் கடமைகளில் இருந்து தப்பிக்க முயலாமல், பொறுப்புக்களை ஏற்றுச் செயல்படவேண்டியதை ஒவ்வொருவருக்கும் வலியுறுத்தும் நோக்கத்தில் இடம்பெற்ற இந்த நடைப்பயணத்தை ஏற்பாடு செய்தோர், இந்நடைப்பயணத்திற்கு முன்னர், போலந்து அரசுத்தலைவர் Andrzej Duda அவர்களைச் சந்தித்தபோது, 'கருவில் உருவானது முதல் இயற்கை மரணம்வரை மனித உயிர் காப்பாற்றப்பட வேண்டியதன் அவசியத்தை' அரசுத்தலைவர் வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

போலந்து கத்தோலிக்கத் திருஅவையின் முழு ஆதரவுடன் இடம்பெற்ற இந்த நடைப்பயணத்தின் இறுதியில், போலந்து ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் Stanisław Gądecki அவர்கள் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

வாழ்வுக்கும் குடும்பத்திற்கும் ஆதரவான போலந்தின் தேசிய நடைப்பயணம், வழக்கமாக, அந்நாட்டின், 140 நகர்களில், இதுவரை இடம்பெற்றுவந்த நிலையில், இவ்வாண்டு, கொரோனா பெருந்தொற்றின் காரணமாக, Warsaw நகரில் மட்டும் இடம்பெற்றது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 September 2021, 14:15