லொரேத்தோ அன்னை மரியா லொரேத்தோ அன்னை மரியா 

லொரேத்தோ திருத்தல பசிலிக்காவில், மரியாவின் பிறந்தநாள்

நாசரேத்தில், அன்னை மரியா வாழ்ந்துவந்ததாகக் கருதப்படும் இல்லத்தைக் கொண்டு உருவாக்கபப்ட்டுள்ள லொரேத்தோ திருத்தல பசிலிக்காவில், செப்டம்பர் 8ம் தேதி கொண்டாடப்படும் அன்னை மரியாவின் பிறந்தநாள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாசரேத்தில், அன்னை மரியா, தன் பெற்றோரான சுவக்கீன், அன்னா, ஆகிய இருவரோடும் வாழ்ந்துவந்ததாக, மரபுவழி கருதப்படும் இல்லத்தைக் கொண்டு உருவாக்கபப்ட்டுள்ள லொரேத்தோ திருத்தல பசிலிக்காவில், ஒவ்வோர் ஆண்டும், செப்டம்பர் 8ம் தேதி, அன்னை மரியாவின் பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

செப்டம்பர் 7, இச்செவ்வாய் மாலை நடைபெற்ற செபமாலை பக்தி முயற்சியுடன் துவங்கிய அன்னை மரியாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள், செப்டம்பர் 8, இப்புதனன்று காலை 11.30 மணிக்கு, அருள்பணியாளர்கள் பேராயத்தின் முன்னாள் தலைவர் கர்தினால் பெனியமீனோ ஸ்தெல்லா அவர்கள் தலைமையேற்று நிகழ்த்திய திருப்பலியோடு நிறைவுக்கு வந்தது.

இத்திருப்பலிக்கு முன்னதாக, 9.30 மணியளவில், அண்மையில் ஜப்பானின் டோக்கியோ நகரில் முடிவுற்ற மாற்றுத்திறனாளிகள் பாராலிம்பிக் விளையாட்டுகளில், இத்தாலி நாட்டின் சார்பாக பங்கேற்ற புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் சிலர், மரியன்னை பக்தியைக் குறித்த தங்கள் சாட்சியங்களை வழங்கினர்.

இதைத் தொடர்ந்து, இவ்வீரர்கள், இத்தாலி நாட்டிலும், இவ்வுலகிலும் அமைதி நிலவவேண்டும் என்ற வேண்டுதலுடன், லொரேத்தோ திருத்தல பசிலிக்காவில் தீபம் ஒன்றை ஏற்றிவைத்தனர்.

இத்திருப்பலியின் இறுதியில், பசிலிக்கா வளாகத்தில் மூவேளை செப உரை வழங்கப்பட்ட பின், இத்தாலியின் விமானப்படையினர், அன்னை மரியாவுக்கு வணக்கம் செலுத்தும்வண்ணம், அந்நகரின் மீது, வண்ணப்புகைகளை வெளியிட்டவண்ணம் பறந்துசென்றனர்.

1920ம் ஆண்டு, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், லொரேத்தோ திருத்தலத்தின் அன்னை மரியாவை, விமானப் பயணத்தை நடத்துவோருக்கும், விமானத்தில் பயணிப்போருக்கும் பாதுகாவலர் என்று அறிவித்ததையடுத்து, 2020ம் ஆண்டு இத்திருத்தலம், சிறப்பான நூற்றாண்டைக் கொண்டாடியது.

கோவிட் பெருந்தொற்று உருவாக்கிய நெருக்கடியின் காரணமாக, இந்த நூற்றாண்டு கொண்டாட்டங்கள், இவ்வாண்டு, டிசம்பர் 10ம் தேதி வரை நீடிக்கும் என்றும், இந்த நூற்றாண்டு காலத்தில் இத்திருத்தலத்திற்குச் செல்லும் அனைவருக்கும் நிறைப்பேறு பலன்கள் கிடைக்கும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 September 2021, 13:56